மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறார். “கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று, சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

திட்டமிட்டபடி இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, சின்னதுரை, மதிமுக சார்பில் பூமிநாதன், சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேகா சார்பில் ஈஸ்வரன், தவாக சார்பில் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின், “எனது தலைமையிலான ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.

முதல்வராகப் பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2000 வழங்குதல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் உள்ளிட்ட அரசாணைகளுக்குக் கையெழுத்திட்டேன்.

பொறுப்பேற்ற அன்றே மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நோய் பரவல் பற்றியும், தடுப்பூசி இருப்பு குறித்தும் அறிந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சேவை வழங்க வார் ரூம் தொடங்கப்பட்டது.

ஆக்சிஜன் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு தனியாக உருவாக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் என ஏப்ரல் மே, ஜூன் மாதங்களுக்கு ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்காகச் சர்வதேச டெண்டர் கோரப்பட்டு. 18- 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒடிசா, மேற்கு வங்கத்திலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிலும் பலன் கிடைத்திருக்கிறது.

இருப்பினும் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவர் மருந்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாகச் சித்த மருத்துவமும் ஊக்குவிக்கப்பட்டு, தாம்பரத்தில் இதற்காக தனி மருத்துவமனை திறக்கப்பட்டது.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகம் தேவைப்படுவதால், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆர்டிபிசியார் பரிசோதனைகளைத் தனியார் பரிசோதனை மையங்களும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்குப் பரிசோதனை கட்டணத்தை நிர்ணயம் செய்ய விலை நிர்ணய கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிட்டிருக்கிறேன்.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளினால் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கக் கூடாது என்பதால் அந்த அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 9ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் அடிப்படையில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குறுகிய காலத்தில் முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இறப்புகளைத் தவிர்க்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தி, சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள். எனவே இந்த தளர்வுகளை நீட்டிக்கலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா?” என்று அனைத்து கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களிடமும் கேள்வி எழுப்பினார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 13 மே 2021