மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

மநீம-விலிருந்து அடுத்தடுத்து விலகும் முக்கிய புள்ளிகள்!

மநீம-விலிருந்து அடுத்தடுத்து விலகும் முக்கிய புள்ளிகள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மதுரவாயல் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட பத்மப்ரியா ஆகியோர்  விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் முடிவைத் தொடர்ந்து கடந்த மே 6ஆம் தேதி கட்சியை மறு சீரமைப்பதற்காக, மநீம தலைவர் கமலஹாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது,  மக்கள் நீதி மய்யத்திலிருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், “தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வது போல தெரியவில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. தமிழகத்தைச் சீரமைப்பதற்கு முன்பு, அவர் கட்சியைச் சீரமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த இரு பிரபலங்கள் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று ஒரே நாளில் அறிவித்திருக்கின்றனர்.

வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, “மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் வகித்த பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்சியிலிருந்து விலகுகிறேன். என் மீது கமல் சாரும், எனது குழுவினரும் வைத்திருந்த பாசத்திற்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு.... என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதித் தெரிவித்துக்கொள்கின்றேன்.  எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாகத் தொடரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய புள்ளிகள் விலகுவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 13 மே 2021