மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ரங்கசாமியைக் கவிழ்த்துவிட்டு நேரடி பாஜக ஆட்சி: புதுச்சேரி புயல்!

ரங்கசாமியைக் கவிழ்த்துவிட்டு நேரடி பாஜக ஆட்சி: புதுச்சேரி புயல்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தாமரையை மலரவைக்க பாஜக தீவிரம் காட்டுவதாக, கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டுகின்றன.

2016 தேர்தலில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வந்தார். முக்கிய இலாகாவை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயத்துடன் பாஜக பிரமுகர்கள் தொடர்பிலிருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் மந்திரி பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம்.

2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தேஜ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டதில், அதிமுக ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது, என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதியிலும் பாஜக 6 தொகுதியிலும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் பரிந்துரையில் அவசரம் அவசரமாக மே 10ஆம் தேதி, பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், இராமலிங்கம், அசோக்பாபு மூவரையும் நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து ஆணையை அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சகம். அதைத் துணைநிலை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.

தேர்தலில் வெற்றிபெற்ற நமச்சிவாயம், ஜான்குமார், ரிச்சார்ட் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன் என ஆறு எம்.எல்.ஏ,க்களுடன், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான யானம் தொகுதி அசோக், திருபுவனைத் தொகுதி அங்காளன், உழவர்கரைத் தொகுதி சிவசங்கரன் மூவரும் பாஜகவில் இணைந்துவிட்டதால் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ,கள் மூன்று பேர் என தற்போது பாஜகவின் பலம் 12ஐ எட்டியுள்ளது.

மேலும் சுயேச்சையாக வெற்றிபெற்றுள்ள உருளையான் பேட்டைத் தொகுதி நேரு, முத்தியால் பேட்டை சக்தி பிரகாஷ், காரைக்கால் பி.ஆர்.சிவா மூவரும் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பிலிருந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பதவியேற்கவில்லை, சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் என யாரும் நியமிக்காத நிலையில் ரங்கசாமி மட்டும் அவசரம் அவசரமாகக் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்றார்.

இந்த சூழலில்தான் பாஜக ஆட்சி அமைக்க வேகமாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.

புதுச்சேரி அரசியல் தட்பவெப்ப சூழ்நிலைகளை அறிந்த, திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன், புதுச்சேரியில் கொல்லை புற வழியாக பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது என்றும், அவசரமாக நியமனம் செய்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களை வாபஸ் வாங்கவேண்டும் என்றும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

பாஜக மீதுள்ள குற்றச்சாட்டுக்களைப் பற்றி அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம், ”சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு வருகிறார்கள், வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம், தேர்தலில் அவர்கள் அதிகளவில் செலவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்சி உதவிசெய்கிறது அவ்வளவுதான்.

கூட்டணி ஆட்சி சுமுகமாகத் தொடரும், முதல்வர் ரங்கசாமிதான், துணை முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பாஜக, எம்.எல்.ஏ,க்கள் பலத்தை அதிகரிக்கக் காரணம் ராஜ்யசபா எம்.பி பதவியை கைப்பற்றத்தான்” என்றார்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 13 மே 2021