மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: என்னதான் நடக்கிறது?

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு: என்னதான் நடக்கிறது?

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்து கொத்தாக மடிவது மட்டுமில்லாமல், இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் மருந்துகளுக்காக மருத்துவமனை வாசல்களில் மக்கள் இரண்டு மூன்று நாட்களாக காத்து கிடக்கும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகின்றன.

மக்களின் உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கடுத்தப்படியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் -வி தடுப்பூசி பயன்பாட்டிற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த கொரோனா நோய்க்கு மத்தியில், தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் மக்கள் அவதிபடுகின்றனர்.

மற்றொரு பக்கம், ரெம்டெசிவிர் என்ற மருந்துக்காக மக்கள் இரவு பகலும் மருத்துவமனை வாசல்களில் காத்துகிடந்து அல்லல்படுகின்றனர்.

ரெம்டெசிவிர்

ரெம்டெசிவிர் என்ற மருந்து எபோலா வைரஸை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டது. இதை கொரோனா தொற்றுக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதையடுத்து, ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தலாம் என்பது பொதுவான கருத்தாக மாறிவிட்டது. இந்த மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று தீவிரமாவதையும், மருத்துவமனையில் இருக்கும் நாட்களையும் குறைக்க உதவியது. அதனால், கொரோனா பாதித்த அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து கண்டிப்பாக தேவை என்று சொல்ல முடியாது. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த மருந்து பயன்தரக் கூடியதாக இருந்து வருகிறது.

கடந்தாண்டு கொரோனா முதல் அலையின்போது இந்த மருந்து குறிப்பிடத்தக்க பயன் தந்ததால், ரெம்டெசிவிரை எடுத்துக் கொண்டால், கொரோனாவிலிருந்து குணமடைந்துவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால்தான், அந்த மருந்துக்காக மருத்துவமனை வாசல்களில் கால் கடுக்க உணவு, தண்ணீர் இன்றி காத்து கிடக்கின்றனர்.

இது கொரோனா நோய்க்கான மருந்து இல்லை. வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பெரியளவில் பயன் தருவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு சொல்லியும், மக்கள் அதை நம்ப தயாராகவில்லை. அனைத்து மருந்துகளை போன்று ரெம்டெசிவிர் மருந்திலும் பக்க விளைவுகள் உள்ளன. தேவையில்லாமல் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது பாதிப்பும் அதிகளவில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த மருந்து யாருக்கு தேவையோ, அவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் ஆவணங்களின்படி விற்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், சில தனியார் மருத்துவனைகள், வெளியில் சென்று ரெம்டெசிவிர் வாங்கி வருமாறு நோயாளிகளை சிரமப்படுத்துகின்றனர்.

அதிகமான மக்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதால், இயல்பை தாண்டி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகளின் விலை உயர்த்தப்படுகிறது. இதற்கிடையில் கள்ளசந்தையிலும் முறைகேடாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது.

இப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் படாதபாடுபடுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மட்டும் இந்த மருந்து கிடைப்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களும் இந்த மருந்துக்காக அரசு மருத்துவமனைகளில் வந்து குவிகின்றனர்.

நெல்லை, கோவை, திருச்சி, சேலம்,மதுரை உள்ளிட்ட இடங்களிலும் இம்மருந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டாலும், சென்னையில் இன்னும் மக்கள் நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாமல், உணவு தண்ணீர் இன்றி இம்மருந்துக்காக காத்து கிடக்கின்றனர்.

இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது, ரெம்டெசிவிர் மருந்தின் பயன் என்ன? எதற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது? ஏன், மக்கள் இதற்காக அலைகிறார்கள்? என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

இந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, கடலூரில் உள்ள நுரையீரல் சிறப்பு நிபுணர் கலைக்கோவணனிடம் கேட்டோம். “ரெம்டெசிவிர் 100 mg /vial கொரோனா வைரஸ் வீரியத்தை குறைப்பதற்கு பயன்படுகிறது. நுரையீரலில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும் நிலையில் இதைப் பயன்படுத்துவார்கள். ஒரு நோயாளிக்கு ஆறு டோஸ் போடவேண்டும். முதலில் இரண்டு டோஸ் 100 mg மருந்தை 200 ml normal salineவுடன் கலந்து போடுவார்கள். அதன் பிறகு நான்கு நாள் 100 ml மருந்துடன் 200 ml normal salineவுடன் போடுவார்கள். அதுவும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த மருந்தை போடமுடியும்” என்று கூறினார்.

ரெம்டெசிவிர் மருந்துக்கு மாற்று மருந்து இல்லையா? என்று கேள்விகேட்டபோது, ”ரெம்டெசிவிர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்பதை மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். மாற்று வழிகள் தேடாத அளவுக்கு அவர்கள் மனதில் பதிந்துவிட்டது. ரெம்டெசிவிர் மருந்து விலையை விட மிக மிகக் குறைவான விலையில் தரமான மருந்து கொரோனாவை குணப்படுத்தும் அளவுக்கு உள்ளது. அதைவைத்து தான் 95% சதவீதம் நோயாளிகளைக் குணப்படுத்தி வருகிறோம்” என்கிறார்.

ஸ்டீராய்டு மருந்தினால் பக்கவிளைவு ஏற்படுமா? எனக் கேட்டதற்கு, டாக்டர் சிரித்தபடி ரெம்டெசிவிர் ஊசி போட்டால் உப்பு நீர் அதிகரிக்கும் என்கிறார்களே, முதலில் உயிரைக் காப்பாற்றுவோம் அதன் பிறகு பக்கவிளைவுகளைச் சரிசெய்வோம், இந்தியாவில் தரமான மருத்துவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

தமிழகத்தில் உள்ள மருந்து டீலர் ஒருவரிடம் கேட்டபோது, ”ரெம்டெசிவிர் மருந்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் ஏழு கம்பெனிகளில் தான் இந்த மருந்தை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. ஏழு நிறுவனங்களில் தயாரிக்கக்கூடிய மருந்துகளை மத்திய அரசு பெற்று, அதை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கிறது. அதன்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட அளவு மருந்து இன்னும் சரியாகக் கொடுக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை தனியார் மருந்தகத்துக்கும் விநியோகம் செய்ய மறுக்கிறார்கள். ரெம்டெசிவிர் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு பல நிறுவனங்கள் அனுமதி கேட்டுவருகிறார்கள். ஆனால், மத்திய அரசு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது.

கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள மருந்து கம்பெனிக்கு அனுமதி கொடுத்தால் இந்தியாவுக்கே சப்ளை செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்வார்கள், ரெம்டெசிவிர் மருந்து பொறுத்தவரையில் தட்டுப்பாட்டை உருவாக்கி வருகிறது மத்திய அரசு” என்றார்

புதிய அரசின் நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை. நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்தை வைத்து மத்திய அரசு பெரிய லாபி செய்வதை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

மக்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் இணைந்து கூடுதலாக மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு மாநிலங்களில் உள்ள மருந்து கம்பெனிகளுக்கு அவசரக்கால அனுமதி கொடுக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்க மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று புதிய அரசு முடிவெடுத்துள்ளது.

ஒவ்வொரு நாளும், மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போராடி கொண்டிருக்கும் வேளையில், ரெம்டெசிவிர் மருந்தை வைத்து லாபி செய்வது வேதனையை அளிக்கிறது.

வணங்காமுடி, வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 13 மே 2021