மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு: திருப்பம் தருமா தினகரன் வீட்டுத் திருமணம்?

ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு: திருப்பம் தருமா தினகரன் வீட்டுத் திருமணம்?

அதிமுகவில் அதிகாரப் பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல், தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மோதல் ஏற்பட்டு முடிவுக்கு வந்துள்ளது என்றாலும் இந்த யுத்தம் மீண்டும் தொடரும் என்கிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

மே 10ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்வதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடினார்கள்.

65 எம்.எல்.ஏ.க்களில் விஜயபாஸ்கரும், வைத்திலிங்கமும் உடல்நிலை சரியில்லாமல் கூட்டத்துக்கு வரவில்லை மற்ற 63 எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். கூட்டம் தொடங்கும் முன்பே எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சி தலைவர் என்று 54 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியிருந்தார்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர்.

கூட்டம் தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும்பான்மை ஆதரவுகள் இருப்பதால் தீர்மானத்தில் விட்டுப்போன எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதைப்பார்த்த ஓபிஎஸ் ஏற்கனவே முடிவு செய்துவிட்டுதான் வந்துருக்கீங்க என்று சொல்லியிருக்கிறார். வாக்கு வாதங்களும், விவாதங்களும் நடந்தன. பிறகு ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் தனியே போய் பேசினார்கள். அதன்பின், கட்சி லெட்டர் பேடில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்ததாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கையெழுத்துப் போட்டார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். மாலையில் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்ற இபிஎஸ் நன்றி தெரிவித்துவிட்டு வந்தார்.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலமான கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது, திருப்பூர் மாவட்டத்தில் எட்டுத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் எட்டுத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளிலும், முதல்வர் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் பத்து தொகுதிகள் ஆக மொத்தம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் 65 தொகுதிகளைப் பிடித்தது அதிமுக.

“முதலாளித்துவ அரசியல் சமூகத்தில் மூலதன செல்வாக்குடையவர்கள்தான் அதிகாரத்திலும் முக்கிய பங்காற்றுவார்கள். கொங்கு கவுண்டர் சமுதாயத்தினர் ஆடை ஏற்றுமதி, ஆலைத் தொழில், இயந்திர உற்பத்தி, பிராய்லர் கோழி, முட்டை வணிகம், கல்வி வணிகம், பணப்பயிர் வேளாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் எனச் செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அவர்கள்தான் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அடுத்தகட்டமாகக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்” என்கிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

இப்படி அதிமுகவுக்குள் நடப்பதை எல்லாம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள் சசிகலாவும், தினகரனும். தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் அதிமுகவை முப்பது தொகுதிகளுக்கு மேல் வீழ்த்திவிட்டதில் தினகரன் திருப்தியாகத்தான் உள்ளார்.

"ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் பாஜக அபிமானியான ஒரு பிரமுகரோடு தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவ்வப்போது பேசி வருகிறார்கள். நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் குறித்து சசிகலா தொடுத்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனன் இருவரும் வெளியில் வந்தால் சசிகலாவுக்குச் சாதகமான சூழல்கள் ஏற்படும். இபிஎஸ்ஸிடம் பெரும்பான்மையான நிர்வாகிகள் இருந்தாலும் சட்டம் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார்கள் அமமுக பிரமுகர்கள் சிலர்.

டிடிவி தினகரன் மகள் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. அந்தத் திருமணத்துக்கு அதிமுகவில் யார் யாருக்கு அழைப்பு தருவார் என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக ஓபிஎஸ்ஸுக்குத் திருமண அழைப்பிதழை தினகரன் கொடுப்பார் என்றும் அந்தத் திருமணமே ஒரு திருப்பமாக இருக்கும் என்றும் மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து பேச்சு தொடங்கியிருக்கிறது.

-வணங்காமுடி

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வியாழன் 13 மே 2021