மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

அன்புள்ள பா.ஜ.க உறுப்பினர்களே... மோடியிடம் பேசுங்கள்!

அன்புள்ள பா.ஜ.க உறுப்பினர்களே... மோடியிடம் பேசுங்கள்!

டி.எம்.கிருஷ்ணா

நான் இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்களின் சமூக - அரசியல் பார்வைகள் மற்றொருவரின் பார்வையில் இருந்து வேறுபடக்கூடும். ஏன், நீங்களும் நானும் சமரசமற்று வாதிடக்கூடும். ஆனாலும் நமக்குள் மனிதாபிமானம் ஒரு பொது இலக்காக இருப்பின் பரஸ்பர மரியாதையுடன், நாம் எளிதாக விலகி செல்ல இயலும். மேலும், நாம் எல்லோரும் இந்த தேசத்தை நேசிக்கிறோம் என்கிற குடியுரிமைக்கு நிகரான நம்பிக்கையின் அடிப்படையில், நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்; இந்தியா, அதுதானே பாரதம்.

நம்நாடு மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டிருக்கிறார்கள்; இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்பட்டுள்ள எண்ணிக்கையையும் தாண்டி, பலர் நம் பார்வைக்குப் புலப்படாத வகையில் இறந்துள்ளனர். ஏன் ஆரோக்கியமானவர்களைக்கூட பாதுகாப்பாக வைத்திருக்க போராடி வருகிறோம். இது முன்னெப்போதும் இல்லாத சூழல், இந்த இருளிலிருந்து விடுபட நாம் ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்.

இதன் பொருள் என்னவென்றால், நிலைமை இவ்வளவு மோசமடைய காரணமாக உள்ள நமது முட்டாள்தனங்களையும், புறக்கணிக்கப்பட்ட கடமைகளையும், நாம் முதலில் அடையாளம் காண வேண்டும். மேலும், மக்களின் வாழ்க்கை மிக ஆபத்தில் உள்ள நிலையில், நமது பிழைகளை தற்போது உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்த தவறுகளை ஆராய கொரோனாவுக்கு பிந்தைய ஆய்வுகளுக்காக நாம் காத்திருக்க முடியாது. பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போரில் நாம் அக்கறையும், அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளும் கொண்டு செயல்படவேண்டும்.

நரேந்திர மோடி உங்கள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல; அவர் இந்த நாட்டின் பிரதமர். இந்தச் சட்டபூர்வ அதிகாரத்தைத்தான் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நீங்கள் அவரை இந்த தேசம் முழுமைக்குமான தலைவராகவே பார்க்க வேண்டும், உங்கள் கட்சியின் கொள்கைகளைப் பாதுகாப்பவராக அல்ல. மேலும், இந்த தசாப்தத்தில் உங்கள் கட்சியின் மிக வலிமைமிக்க தலைவர் நரேந்திர மோடி அல்லது உங்கள் கட்சி இரண்டு முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நான் கூறுவதை ஒரு கணம் சிந்தியுங்கள்.

மோடி, ஒருவேளை உங்கள் கட்சியைச் சாராதவராக வேறொரு கட்சியைச் சார்ந்தவராக இருந்திருந்தால் , இந்த நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வாரக்கணக்கில் உண்பதற்கு உணவின்றி, நடந்தும், மிதிவண்டியில் பயணித்தும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப, பிரதமர் மோடி வற்புறுத்தும்போது, நீங்கள் இதே மௌனத்துடனா இருந்திருப்பீர்கள், பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசின் முற்றிலும் தவறான திட்டமிடல் மற்றும் முறையற்ற மேலாண்மை குறித்து குற்றம் சாட்டியிருக்க மாட்டீர்கள்? மத்திய அரசு , மக்கள் தடுப்பூசிகளைப் பெற சில தனியார் நிறுவனங்களின் கருணைக்கு விட்டுவிடும்போது, தடுப்பூசி திட்டம் பிரதமரின் கண்காணிப்பில்தான் உள்ளதா என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க மாட்டீர்களா? தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் கிடைக்காதபோது நீங்கள் அச்சத்தால் திகைப்படைந்திருக்க மாட்டீர்களா? ஆக்சிஜனை வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடும்போது நீங்கள் அதிர்ச்சி அடையாமல் இருந்திருப்பீர்களா?

மேலும், சில மாநிலங்களில் இருந்து வருகிற கொரோனா புள்ளிவிவரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்க மாட்டீர்கள்? இக்கட்டான சூழ்நிலையில் அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துகளைப் புறக்கணித்து, அரசானது அறிவியல்பூர்வமற்ற முறையில் செயல்படுவதாக நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள்? இந்த எல்லா சகதியின் மத்தியிலும், மத்திய அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கட்டுப்படுத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதே போன்று, மத்திய அரசோ, கொரோனா காலத்திலும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும்பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

கொரோனா காலத்திலும் மாநில சட்டசபை தேர்தல்கள் சர்ச்சைக்குரிய முறையில் நடத்தப்பட்டதை மறந்துவிடுங்கள். ஆனால், கொரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமரின் உரையைக் கேட்க திரண்ட கூட்டத்தைப் பார்த்து , அவர் கொண்டாடிய செயலை கேட்கையில் நீங்கள் அதிர்ச்சி அடையவில்லையா? இதுபோன்ற குறிப்பிடத்தகுந்த உதாரணங்களை வைத்துக்கொண்டு , கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை என்று இந்த நாட்டின் மக்களை நாம் எவ்வாறு குறை கூற இயலும்?

அதுமட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்கள் நம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன என்ற உங்கள் வாதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மயானங்களில் சடலங்கள் எரிவது குறித்து அவை வெளியிட்டுள்ள படங்கள், புள்ளிவிவரங்கள்,செய்திகள் எல்லாம் உண்மையே. மக்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், அரசிடம் உதவி கேட்காமல் மக்களிடம் உதவியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது உங்களை உலுக்கவில்லையா? நீங்களும் நானும் இந்த பெருந்தொற்றினால் எண்ணற்ற நண்பர்களை இழந்துள்ளோம். ஆனாலும், இந்த அசாதாரண சூழலில் ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளுக்கும் மத்திய அரசுதான் முழு பொறுப்பு என்று ஏன் நீங்கள் கூற தயங்குகிறீர்கள்? மக்களின் உயிர் காப்பாற்றப்படுவதைவிட ,உங்களுக்கு உங்களின் தலைவரின் பிம்பம் காப்பாற்றப்படுவதுதான் முக்கியமா? உங்கள் கட்சி உள்நாட்டு ஜனநாயகம் குறித்துப் பேசுகிறது. ஆனால், அதற்கு ஏன் செயல்வடிவம் அளிக்கவில்லை. குறிப்பாக தற்போது ஏன் செயல்படுத்தவில்லை?

கொரோனாவைக் கட்டுப்படுத்த கடமை தவறியதில், மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும், மேலாண்மை நடவடிக்கைகளும் மத்திய அரசிடம்தானே உள்ளது.

கடந்த மார்ச் 2020, அன்று ஒன்றிய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டது . அதைத்தொடர்ந்து அந்த விதிகள்தான் அதற்குப் பின்னர் வந்த அனைத்து மாதமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலிருந்து கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற கொள்கை எங்கும் காணப்படவேயில்லை; மோடி அரசாங்கம் விரோதமாகவே செயல்பட்டது. மத்திய அரசே மற்ற எல்லா மாநிலங்களை விடவும் அதிகாரமிக்கது மற்றும் மற்ற மாநிலங்களோடு இணைப்பை ஏற்படுத்தும் மொத்த பொறுப்பும் அதை சார்ந்ததே. ஆனால், அதுகுறித்து பிரதமர் ஒரு தடவைகூட பேசியதில்லை; தற்போதுவரை அதன் மறுபுறத்தை மட்டுமே தன் மந்திரிகளுடன் பேசி வருகிறார்.

பிரதமர் தொடர்ந்து ஒவ்வொரு குடிமக்களையும் காப்பது தன் கடமை என்றும், அதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், தான் நடுத்தர வர்க்க பின்னணியிலிருந்து வருவதாகவும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்கள் முன்னேற்ற அடைய கஷ்டப்பட்டு உழைப்பதின் வலியை உணர்வதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், நாம் கேட்டு வருவதெல்லாம் நம்மை குழந்தைகளாக எண்ணி அவர் கூறுவதை மட்டும்தான்.

அதுமட்டுமில்லாமல், அவர் பங்கேற்று வரும் மன் கி பாத் நிகழ்ச்சியில் முன்பே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வருகிறார். குறிப்பிட்ட தேர்ந்தெடுத்த ஊடக நேர்காணல்களில் மட்டுமே பங்கேற்கிறார். உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளும் நிலையில், மோடி மட்டும் ஏன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை

எப்போது நம்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதோ, பிரதமர் மோடி அப்போதே அனைத்து கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, முடிவுகளையும் நடவடிக்கைகளையும் பகிர்ந்தளித்திருக்க இயலும். பெருந்தொற்று என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடியது. அதற்கு யாராலும் முன்கூட்டியே திட்டமிட முடியாது. ஆனால், நம்மால் ஒன்றிணைந்து எதிர்கொண்டிருக்க முடியும். நாம் இந்த நாட்டின் குடிமக்கள், கட்சிகளை மறப்பதற்குப் பதிலாக நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே மறந்துவிட்டோம். நாங்கள் அவரிடம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அரசியல் ஆளுமையாக மோடி தன்னை காட்டியிருக்க முடியும்.

நீங்கள் மௌனமாய் இருக்கும் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாம் உடனடியாக தலையிடாவிட்டால், துரிதமான, ஆக்கபூர்வமான, நேர்மறையான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த கொடுமையைப் பார்த்துக்கொண்டேதான் இருக்க நேரிடும் என்பது நமக்குத் தெரியும்.

நீங்கள் இந்தியாவை நேசிக்கிறீர்கள் என்றால், இப்போது நிச்சயம் பேசுவீர்கள்!

மே 11 தேதியிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்

(கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது கலைக்காகவும் சூழலில் எழுப்பும் கலகக் குரலுக்காகவும் கூர்ந்து கவனிக்கப்படுபவர்.)

தமிழில்: பிரதீப்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வியாழன் 13 மே 2021