மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா: அதிமுகவில் ரேஸ்!

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மே 10 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று மணி நேர விவாதத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்-எடப்பாடி ஆகியோருக்கு இடையிலான வாக்கு வாதத்துக்குப் பிறகு எடப்பாடியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது அந்தக் கூட்டம். அதுவே போதும் போதும் என்றாகிவிட்டதால்... துணைத் தலைவர், கொறடா ஆகியோரை பற்றி விவாதிக்காமலேயே அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது.

பொதுவாகவே சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடக்கும்போதே தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோர் யார் யார் என முடிவெடுத்துவிடுவார்கள். எனினும் அன்று நடந்த கடுமையான வாதப் பிரதிவாதங்களால் தலைவர் பதவிக்கான முடிவு மட்டுமே எடுக்கப்பட்டது. அன்றே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருங்கள் என்ற சிலரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு ஓபிஎஸ் கோபத்துடன் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகள் யாருக்கு என்பதில் அதிமுகவுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது.

எம்.எல்.ஏ.பதவிக்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்ட கே.பி.முனுசாமி இதற்காகவாவது சட்டமன்றத்தில் தனக்கு முக்கியமான ஒரு அந்தஸ்து வேண்டும் என்று எண்ணுகிறார். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அதிமுகவின் பெரு வெற்றிக்கு வன்னியர்களின் பங்கும் பெரிது என்பதால் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி. முனுசாமிக்குக் கொடுக்கலாம் என்ற குரல்களும் அதிமுகவில் இருக்கின்றன.

அதேபோல முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக புறக்கணிக்கவில்லை என்பதை காட்டுவதற்காக அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு சட்டமன்றப் பதவி ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தென் மாவடத்தில் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் முயல்வதாகவும் ஒரு தகவல் அதிமுகவுக்குள் உலா வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான கொங்கு பிரமுகர்களிடம் தெரிவித்த கருத்து முக்கியமானது. அது என்ன?

“எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்த சிலர், ‘ஓபிஎஸ்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அதனால துணைத் தலைவர், கொறடா பதவிகளுக்கு யார்னு சட்டுனு முடிவு பண்ணிடலாமே?’என கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஓபிஎஸ் அப்படி சொல்லிட்டார்னா நாம விட்டுட முடியுமா? அன்னிக்கு எமோஷன்ல அப்படி சொல்லிட்டாரு. அதனால அவரை விட்டுட்டு நாம அடுத்தவங்களை தேர்வு பண்ணிட்டோம்னா, அது கட்சிக்குள்ளயும் கட்சிக்கு வெளியேயும் நாம வேற மாதிரி செய்தியை சொல்றதா ஆயிடும். அம்மா காலத்துலயே முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்காரு. அவை முன்னவரா இருந்திருக்காரு. ஓபிஎஸ் சை விட்டுட்டு நாம சட்டமன்றக் கட்சி நிர்வாகிகளை போட்டா அதிமுகவுல இனிமேலும் குழப்பம் ஏற்படுத்தலாம்னு நினைக்கிறவங்களுக்கு நாமே வழி போட்டு கொடுத்தது மாதிரி ஆகிடும். அதனால எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏத்துக்க சொல்லி நானே அவரை நேர்ல வற்புறுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள்.

அதன்படியே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று மாலையே ஓ. பன்னீர் செல்வத்தின் வீடு தேடிச் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணே... உங்களைத் தவிர்த்துட்டு சட்டமன்றக் கட்சி நிர்வாகிகளை நியமிக்க முடியாது. அதனால நீங்க துணைத் தலைவரா இருங்க” என்று வற்புறுத்தியிருக்கிறார்.

”நான் முதல்வராக இருந்தபோது துணை முதல்வராக இருக்க சம்மதித்த ஓ.பன்னீர் செல்வம், இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க சம்மதிக்கமாட்டாரா? ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவரை உறுதியாக மறுத்துவிட்டால் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று எடப்பாடி சொல்லியிருப்பதால்தான் நிர்வாகிகள் தேர்வு தாமதமாகிறது.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 12 மே 2021