மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ராமதாஸ்

ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கின் காரணமாக வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பதில்லை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இருப்பதைச் செய்திகள் வாயிலாகவும், நேரடியாகவும் காண முடிகிறது. சாலைகளில் வாகனங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடமாட்டம் அதிகளவு இருப்பதையும் காண முடிகிறது.

இந்நிலையில் ஊரடங்கைக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இன்று (மே 12) அவர் வெளியிட்ட அறிக்கையில், “தலைநகர் சென்னையில் எந்த நேரம் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சில நிமிடங்களில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதையும், இரு சக்கர ஊர்திகளில் பலரும் பறப்பதையும் பார்க்க முடிகிறது.

தமிழகத்தின் அனைத்து மாநகர, நகர, கிராமப்புறங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஊரடங்கு என்ற பெயரில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், சாலைகளிலும், தெருக்களிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நீடிக்கிறது. அவர்களில் பலரும் முகக்கவசம் கூட அணியாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

சாலைகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதா? என்ற வினா மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டதன் நோக்கமே, அவற்றுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்; அதன் மூலம் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தடுத்து, கொரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய வேண்டும் என்பது தான். ஆனால், இப்போது ஊரடங்கு மதிக்கப்படும் விதத்தைப் பார்க்கும் போது கொரோனா பரவல் சங்கிலியைத் துண்டிக்க முடியாது.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு வெற்றி பெறுவதும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுவதும் பொதுமக்களாகிய நமது கைகளில் தான் உள்ளது. சுதந்திரம், தனி நபர் உரிமைகளைத் திகட்ட திகட்ட அனுபவித்த நம்மால் வீட்டுக்குள் அடங்கி இருப்பது சிரமம் தான். ஆனால், நமது உயிரையும், மற்றவர்களின் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள இதைத் தவிர வேறு வழியில்லை. ஊரடங்கு என்பது கொரோனாவை ஒழிப்பதற்கான கசப்பு மருந்தாகும். சுயநலன் கருதியும், பொதுநலன் கருதியும் இக்கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும், எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் கூட 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் கொடுமை நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், “ இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு சுடுகாடுகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கொடுமைகளை தினமும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் எந்த பொறுப்புமின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவே பொருள்.

எனவே ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். வீடுகளை விட்டு எவரும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்; வெளியில் வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வரும் போது கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

இவற்றை விட முக்கியம் தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப் படுவதைத் தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். முழு ஊரடங்கை பிறப்பித்ததுடன் கடமை முடிவடைந்ததாக நினைத்து ஒதுங்கிவிடக் கூடாது. நண்பகல் 12 மணிக்கு மேல் மருத்துவத் தேவை, அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எதற்காகவும், எவரும் சாலைகளில் நடமாட வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரத்தில் சாலைகளில் செல்பவர்கள் எதற்காக செல்கின்றனர்? அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளனவா? என்பதை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மீண்டும் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள். ஊரடங்கை கடுமையாகச் செயல்படுத்தினால் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்குமோ? என்று அரசு அஞ்சக் கூடாது. மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஒரு நல்ல காரியத்திற்காகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 12 மே 2021