மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

ஜீயருக்கு ஆளெடுப்பதா? வலுத்த எதிர்ப்பு- வாபஸ் பெற்ற அரசு!

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாராயண ஜீயர் இடத்துக்கு தகுதியான நபர்கள் வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையாகி அதற்குப் பின் முடிவுக்கு வந்திருக்கிறது.

கடந்த மே 6ஆம் தேதி, “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உட்பட்ட 51 ஆவது ஜீயர் இடம் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறங்காவலர் வேணு ஸ்ரீனிவாசனும், இணை ஆணையரும் வெளியிட்டிருந்தார்கள்.

இது ஸ்ரீரங்க வைணவ வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராம பானம் என்னும் அமைப்பின் தலைவரும், ஸ்ரீரங்கம் கோயிலில் நடத்தப்படும் வைணவ சம்பிரதாய அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவருமான வழக்கறிஞர் ரங்கராஜ நரசிம்மன், “ஏற்கனவே பெரிய பெருமாளின் திருவடியை சிதைத்து பெருமாளை சின்னாபின்னம் செய்தார்கள்.கோவில் பழக்க வழக்கங்களில் கை வைத்தார்கள். கோவில் வரவு செலவை பார்க்க வேண்டியவர்கள் அதை விட்டுவிட்டு வேறு எல்லாவற்றையும் செய்கிறார்கள். பல வருடங்களாக தணிக்கையே நடக்கவில்லை. சட்டவிரோத அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் வேணு ஸ்ரீனிவாசன் தூண்டுதலின் பேரில்தான் இது நடக்கிறது.

வைணவ சம்பிரதாயத்திலே உயர்ந்த ஸ்தானமான ஜீயர் ஸ்தானத்துக்கு ஆள் கேட்கிறார்கள். இவர்களின் வேலை என்ன? கோவில் வரவு செலவு கணக்கு பார்ப்பது. ஆனால் என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் ஜீயர் என்னும் உயர்ந்த ஸ்தானத்தை ஏதோ ஒரு பணியிடம் போல பாவித்து விளம்பரம் செய்வீர்கள்? நான் இருக்கும் வரை இதை நடக்கவிடமாட்டேன். இது சுவாமி எம்பெருமானார் மீது பிள்ளை லோகாச்சாரியார் மீது நான் வைக்கும் சத்தியம்” என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதன் பின்னரே இது அரசியல் ரீதியாகவும் பற்றிக் கொண்டது.

இந்த திமுக ஆட்சியை 100 நாட்களுக்கு விமர்சிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்த பாஜகவின் ஹெச்.ராஜா, “இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்” என்று கருத்து வெளியிட்டார்.

இதேநேரம் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று (மே 11) மாலை ஒரு அவசரக் கடிதம் எழுதினார்.

அதில், “இந்து ஆலயங்களை மதச்சார்பற்ற அரசின் பிடியிலிருந்து விடுவித்து, அந்தந்த ஆலயங்களின் ஆகம, மரபுக்கேற்ப உள்ளூர் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை கொண்ட இந்துக்களின் நீண்டகால கோரிக்கை.

இந்தச் சூழலில் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மதச்சார்பற்ற அரசின் பிடியில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் 6.5-2021-ல் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்ரீரங்கநாராயண ஜீயர் 51-வது பட்டத்திற்கு காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட இந்துக்களின் இதயத்தில் இடி இறங்கியது போல உள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் கார்டினல்கள், ஆர்ச் பிஷப், பிஷப், பாதிரியார்கள் பதவிக்கு விணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தால் அதனை கிறிஸ்தவ மக்கள் ஏற்பார்களா? அப்படி நினைத்துப் பார்க்கக் கூட இந்தியாவில் உள்ள எந்த அரசும் துணியாது. அப்படியிருக்கும்போது இந்து மத மரபுகளை சீரழிக்கும் வகையில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோருவது அராஜகம். நமது அரசியல் சட்டம் அளித்துள்ள மதம், வழிபாட்டு சுதந்திரத்துக்கு எதிரானது. அறங்காவலர்கள் போல ஜீயர் போன்ற மதத் தலைவர்களையும் அரசே தேர்ந்தெடுத்தால் அது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக அமையும். மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இது நடந்தது என்ற அவப் பெயருக்கு தாங்கள் ஆளாக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வராகிய தாங்கள் தலையிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று கூறிய தாங்கள் இந்த விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடப்பீர்கள் என்று நம்புகிறேன்”என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு, “நிர்வாக காரணங்களுக்காக ஜீயர் பணியிடத்துக்கான விளம்பரம் ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 12 மே 2021