மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

'கொல்லைப்புற வழியாக ஆட்சி': பாஜகவுக்கு துரைமுருகன் கண்டனம்!

'கொல்லைப்புற வழியாக ஆட்சி': பாஜகவுக்கு துரைமுருகன் கண்டனம்!

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதா என பாஜகவுக்குத் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைச்சர்கள், பதவியேற்காத நிலையில் அவசரமாக மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்து பாஜகவில் இணைந்த சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கத்துக்கும், திமுகவிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்த வெங்கடேசனுக்கும், பாஜக நகரச் செயலாளர் அசோக் பாபுவுக்கும் நியமன எம்.எல்.ஏ. பதவி கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு உத்தரவு வந்திருக்கிறது.

இதனால் முதல்வர் ரங்கசாமியும், கூட்டணிக் கட்சியினரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் பாஜகவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள்!- புதுச்சேரி கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி! என்ற தலைப்பில் செய்து வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33-ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டமன்றத்திற்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு - புதுச்சேரி மக்களின் நலனிலும் - மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார் துரைமுருகன்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 12 மே 2021