மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

சட்டமன்றத்தின் முதல் நாள் - சுவாரஸ்யங்களும் சர்ச்சைகளும்!

தமிழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி நிறைந்த அமாவாசை தினமான நேற்று (மே 11) பதவியேற்பு செய்து வைத்தார்.

மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 223 உறுப்பினர்கள்தான் நேற்று பதவியேற்றனர். திமுக தரப்பில் அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக பதவியேற்க வரவில்லை. மேலும் ஒட்டப்பிடாரம் சண்முகையா, வேடசந்தூர் காந்திராஜன், செங்கல்பட்டு வரலட்சுமி, அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ஆகியோர் வரவில்லை. அதிமுக தரப்பில் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா ஆகியோர் வரவில்லை.

காலை 10 மணிக்கு தொடங்கி இந்த விழா பிற்பகல் 2.10 வரை நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பெரும்பாலான நேரம் அவையில் இருந்தார்.

காலை 9.15 மணியிலிருந்தே எம்.எல்.ஏக்கள் கலைவாணர் அரங்கத்துக்குள் வர ஆரம்பித்தார்கள். உதயநிதி ஸ்டாலின் வரும்போதே வாசலிலேயே அவருக்குப் பலரும் போட்டி போட்டுக் கொண்டு சாவ்வைகள் போர்த்தினார்கள். 9.58 மணிக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவைக்கு வந்தார். சரியாக 10.00 மணிக்குத் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டியும் உள்ளே வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வரும்போதும் போகும்போது திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். அதேபோல உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க செல்லும்போது அவருக்கு அருகே அமர்ந்த டி.ஆர்.பி. ராஜா எழுந்திருக்க அந்த வரிசை முழுவதும் இருந்தவர்கள் அப்படியே எழுந்து நின்றனர்.

பதவியேற்க இபிஎஸ், ஜி.கே.மணி போன்றவர்களை அழைத்த பிறகு ஓபிஎஸ்ஸை அழைத்தனர், காங்கிரஸ் மற்றும் விசிக கட்சியில் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யாததால் அதில் முன்னுரிமை கொடுக்க முடியவில்லை. அதிமுக எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் பதவியேற்க செல்லும்போது முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து சிரித்தபடியே வணக்கம் வைத்தனர்.

இரட்டை சர்ச்சையில் டிஆர்.பி. ராஜா

திமுக எம்.எல்.ஏ, டி.ஆர்.பி.ராஜா சட்டமன்றத்துக்குள் செல்போன் பேசிக்கொண்டிருந்தது ஒரு சர்ச்சை என்றால் இன்னொரு சர்ச்சையிலும் சிக்கினார். முதல்வர் ஸ்டாலின், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’என்று கூறி பதவியேற்றுக் கொண்டது போல ராஜாவும், ‘தளிச்சேரி பாலுத் தேவர் ராஜா’என்று கூற முதல்வருக்கே ஒரு சங்கடம். தேவர் என்ற சாதிப் பெயரை பின்னொட்டாக சேர்த்து சட்டமன்றத்தில் கூறுகிறாரே...இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனையா என்று பத்திரிகையாளர் மத்தியில் பேச்சு எழுந்தது.

கலைஞர் வாழ்க- வந்தே மாதரம்- தீரன் சின்னமலை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக திமுக கூட்டணி எம்பிக்கள் பதவியேற்றபோது பெரியார் வாழ்க தமிழ் வாழ்க என்றெல்லாம் சொல்லி பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் நேற்றைய சட்டமன்ற பதவியேற்பு விழாவில் பெரும்பாலோர் அப்படி சொல்லவில்லை.

ஆனால் கலைஞரின் தொகுதியான திருவாரூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பூண்டி கலைவாணன் பதவியேற்கும்போது, ‘ எங்கள் மண்ணின் மைந்தன் கலைஞர் வாழ்க’என்று சொல்லி பதவியேற்றார். அதுபோல விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி பதவியேற்கையில், ‘அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக’என்று சொல்லி பதவியேற்றார்.

பாஜக சார்பில் உறுப்பினரான வானதி சீனிவாசன் ‘தமிழ் வாழ்க வந்தே மாதரம்’ என்று சொல்லி பதவியேற்றார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பதவியேற்றுக் கொள்கையில், ‘தீரன் சின்னமலையை போற்றுவோம்’என்றார்.

எடப்பாடி- ஓபிஎஸ்- ஒலி சொன்ன செய்தி

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது 65 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மேஜை மீது தட்டி ஒலி எழுப்பினார்கள். முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றபோது அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஒலி எழுப்பவில்லை. சிலரே எழுப்பினார்கள். அதிமுக உறுப்பினர்கள் பலரும் எடப்பாடியையோ, பன்னீரையோ வணங்கவில்லை. முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர்களையும் பார்த்து வணங்கிச் சென்றார்கள்.

கே.பி.முனுசாமியின் உளமார

திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உளமார என்றும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் கடவுளறிய என்றும் சொல்லி பதவியேற்றனர். அதிமுகவில் கே.பி.முனுசாமி மட்டுமே உளமார என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டார்.

செருப்பில்லாமல் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏ.

பல்வேறு விலை உயர்ந்த காலணிகளும், ஷுக்களும் நேற்று சட்டமன்றத்தை மிதித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் செருப்பு கூட அணியாத வெறுங்கால்களோடு சட்டமன்றத்துக்குள் வந்தார். அவர்தான் குமரி மாவட்ட சட்டமன்ற பாஜக உறுப்பினரான எம்.ஆர். காந்தி. அவரை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியம் இல்லை என்றாலும் சட்டமன்றமே அவரை ஆச்ச்சரியமாகத்தான் பார்த்தது.

பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிந்து முதலில் முதல்வர் வெளியில் சென்றார். அடுத்தபடியாக இபிஎஸ், அவருக்குப் பிறகு ஓபிஎஸ் அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என வரிசையாக வெளியேறினார்கள்.

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 12 மே 2021