மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

அடுத்த சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி மெகா வியூகம்!

அடுத்த சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி மெகா வியூகம்!

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 10) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக நிர்வாகிகளும் தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது தனக்கு நெருக்கமான சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளிடம் உற்சாகமாக சில செய்திகளை எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இதுபற்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசியபோது டெல்லியின் அடுத்த கட்ட மெகா திட்டம் பற்றிய முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.

“கடந்த மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து 6 ஆம் தேதி இரவு வரை எடப்பாடி பழனிசாமி சேலத்தில்தான் இருந்தார். ஏழாம் தேதிதான் அவர் சென்னையே வந்தார். அதுவரை அவரது முழு கவனமும் தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அதைப் பற்றிய காய் நகர்த்தல்களிலேயே அவர் தீவிரமாக இருந்தார்.

ஒரு வழியாக மே 10 ஆம் தேதி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னைச் சந்தித்த எம்.எல்.ஏ.க்களிடமும் நிர்வாகிகளிடமும் வெளிப்படையாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

‘நாம் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. அம்மா இல்லாமல் மூன்றாவது முறை ஆட்சியைக் கேட்டு தேர்தலை சந்தித்த நாம், 66 இடங்களைப் பெற்றுள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். எனவே இது நமக்கு வெற்றிதான்.எனவே யாரும் சோர்ந்துவிடாதீர்கள். மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் பேசினேன்.

நாம் எதிர்க்கட்சியாகிவிட்டோம் என்று சும்மா இருந்துவிடாதீர்கள். முழு ஊரடங்கு முடிந்த பிறகு உடனடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணத்தைத் தொடங்கிடுங்கள். நாம் வெற்றிபெற்ற இடங்கள் மட்டுமல்ல தோல்வியுற்ற தொகுதிகளிலும் நன்றி சொல்லிடுங்கள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதுமட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள்தான் இருக்கின்றன. வேகமாக காலம் ஓடிவிடும்”என்றவர் அடுத்துச் சொன்ன தகவல்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

’தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் முக்கியமானவர்களிடம் பேசினேன். பாஜகவுக்கு நான்கு இடங்கள் பெற்றது அதிலும் குமரியைத் தாண்டி அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது அக்கட்சியின் மேலிடத்துக்கு சந்தோஷம்தான். ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா எல்லாம் முடிந்த பிறகு மத்திய அரசு ஒருவேளை அந்தத் திட்டத்தை தனது பெரும்பான்மை பலம் மூலம் கொண்டு வரும் சூழல் உள்ளதாக ஒரு தகவல் வருகிறது. அப்படிக் கொண்டுவந்தால், வரும் மக்களவைத் தேர்தலோடு தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட வர வாய்ப்பிருக்கிறது. இதுபற்றிய முக்கிய ஆலோசனை டெல்லியில் இப்போது நடந்து வருகிறது. எனவே தேர்தல் முடிந்துவிட்டதே என்று சும்மா இருந்துவிடாதீர்கள். மத்திய அரசு அப்படி ஒரு முடிவெடுத்தால் அடுத்த மூன்று வருடங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. எனவே மக்களிடம் இப்போதே செல்லுங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறிய தகவலைக் கேட்டுதான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் தலை சுற்றிவிட்டது. தேர்தல் முடிந்து இப்பதான் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிறார்.அதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலை கணக்குப் போடுகிறாரே ” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்மொழிவை பிரதமர் மோடி தனது முதல் ஆட்சிக் காலமான 2014 முதலே வலியுறுத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டு 7 தேசியக் கட்சிகள், 59 மாநிலக் கட்சிகளிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டபோது அப்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஒரேநாடு ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் ஆதரிக்கிறோம்’என்று கூறினார்.

கொரோனா தீவிரமாக இருந்தபோதும் 2020 டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக 25 வெபினார்கள் நடத்தியிருக்கிறது. கடந்த நவம்பர் 26 அன்று இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை தீவிரமாக இருந்த நேரத்திலேயே அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மற்றும் அனைத்து சட்டமன்ற தலைவர்களின் காணொலி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அழுத்தமாக வலியுறுத்தினார்.

“ நமது ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதாக இப்போதைய தேர்தல் முறை இருக்கிறது. ஆனாலும் அதில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியமாகிறது. பெரிய நாடான நமது இந்தியாவில் சில மாதங்களுக்கு ஒரு முறை எங்காவது தேர்தல் வந்துவிடுகிறது. இதனால் நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தல் நன்னடைத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. அதனால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுகிறது.

எனவே தேர்தல் செலவைக் குறைக்கவும், திட்டப்பணிகள் தொய்வில்லாமல் நடக்கவும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை செயல்படுத்த வேண்டியது அவசியம். மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரேநேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்”என்று பேசினார் பிரதமர் மோடி.

பாஜகவின் எதிர்க்கட்சிகளான திருணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக ஆகியவை மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில்... ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு கொண்டுவருமானால்... வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வரக் கூடிய வாய்ப்பு உண்டாகும். அதனால் அதை அதிமுக இயல்பாகவே ஆதரிக்கும் நிலை உண்டாகும்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தன்னை சந்தித்த முக்கியமானவர்களிடம், “சோர்ந்துவிடாதீர்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலும் விரைவில் வரலாம்”என்று கூறியிருக்கிறார்.

திமுக பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதிமுகவின் மேலிடத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை பாஜக மேலிட ஆலோசனையின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

-ராகவேந்திரா ஆரா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 11 மே 2021