மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

இணைந்து நிற்போம்: எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

இணைந்து நிற்போம்: எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 10.00 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கு,பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களாகப் பேற்றுப்பேற்று கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், “ கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டைக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகம் - பத்திரிகைத் துறையினர் எனப் பல தரப்பினரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கின்ற பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர். சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தாரும் மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள் பதினாறாவது சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில்,

வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் தொகுதிகளில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி - ஆக்சிஜன் - மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டு வரக் கோருகிறேன்.

எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

செவ்வாய் 11 மே 2021