மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

‘அந்த கண்ணாடியைக் கழற்றுங்கள்’: பிரதமரைச் சாடிய ராகுல்

‘அந்த கண்ணாடியைக் கழற்றுங்கள்’: பிரதமரைச் சாடிய ராகுல்

சென்ட்ரல் விஸ்டா திட்டம் மட்டும்தான் தெரிகிறதா, கண்ணாடியைக் கழற்றி பாருங்கள் என்று பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில். கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. 2.3 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 1.9 கோடி பேர் குணமடைந்திருக்கின்றனர். 37,21,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,50,087 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மே 1ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து மே 7ஆம் தேதி இந்த பாதிப்பு 4.14 லட்சமாக அதிகரித்தது.

அதுபோன்று உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் வரிசைகட்டி நிற்பதையும் காண முடிகிறது.

அதோடு கொரோனாவால் உயிரிழப்பு அதிகரிப்பதால், அவற்றை எரிக்க வழியில்லாமல் பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் திண்டாடுகின்றன.

தமிழகத்திலும் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் உடல்கள் தேக்கம் அடைவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதையொட்டி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 50 உடல்களை வைக்க ஏதுவாக புதிதாக செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்திருந்தார்.

தற்போது பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தின் சௌசா பகுதியில் பாய்ந்தோடி வரும் கங்கை நதியில் உடல்கள் மிதந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தது 40 உடல்களாவது மிதந்து கிடந்தன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள நதி கரையிலும் சில உடல்கள் மிதந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிங் தெரிவித்துள்ளார். இந்த உடல்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற, நிகழ்வுகள், இன்னும் எத்தனை வேதனைகளைப் பார்க்கப் போகிறோமோ என்கிற அளவுக்கு நாட்டின் நிலைமையை காட்டுகிறது.

இந்த சூழலில், மத்திய அரசு தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது செயலகங்கள், பிரதமர் இல்லம், ஆகியவை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில், இந்தத் திட்டம் தேவையா?, இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஆக்சிஜன் வாங்கவும், தடுப்பூசிக்கான பணிகளில் பயன்படுத்தவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் உடல்கள் நதிகளில் அடித்துச் செல்லப்படுகின்றன. சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான தங்களது உரிமைகளை இழந்துள்ளனர். பிரதமர் மோடி தனது இளஞ்சிவப்பு நிற கண்ணாடியைக் கழற்றி வைத்துப் பார்த்தால்தான் சென்ட்ரல் விஸ்டாவை தவிர்த்த மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும் ”என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

செவ்வாய் 11 மே 2021