மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

அதிமுக புள்ளிகளுக்கு வலை: முதல்வர் க்ரீன் சிக்னல்!

அதிமுக புள்ளிகளுக்கு வலை: முதல்வர் க்ரீன் சிக்னல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்ற அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் மீது விரிவான குற்றப் பத்திரிகையையே வாசித்தார். மேலும் அப்போதைய முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் ஊழல் புகார்களை நேரில்சென்று பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள் திமுகவினர். திமுகவின் தேர்தல் அறிக்கையில்,’ ஆட்சிக்கு வந்த பின் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த சில அதிமுக அமைச்சர்கள் அப்போதே தங்களுக்கு வேண்டப்பட்ட சிலர் வாயிலாக ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலம், ‘தங்களை காப்பாற்றும்படி’ வேண்டுகோள் வைத்தனர்.

இந்தப் பின்னணியில் திமுக ஆட்சி அமைந்தது. ஸ்டாலின் அறுதிப் பெரும்பான்மையோடு முதல்வர் ஆகிவிட்டார். இந்நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட திமுக தொண்டர்களுக்கான கடிதம், திமுகவினரை விட அதிமுகவினரையே அதிக வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

“கடந்த பத்தாண்டுகளாக ஏமாற்றங்களையே எதிர்கொண்ட மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தைக் கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இருளைப் பழிப்பதைவிட, அதனை அகற்றும் ஓர் அகல் விளக்கை ஏற்றுவது உன்னதமான செயல். இலையுதிரைக் குறை சொல்வதைவிட, வசந்தத்தை வரவழைக்கப் பாடுபட முற்படுவது பயனுள்ள செயல்.

தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களமல்ல, ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக் கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும் ஒருதாய் மக்கள்.

ஒரே இல்லத்தில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வு காண முயல வேண்டும். எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலம் கழிப்பதில் எந்த பயனும் இல்லை என்றால் அதிமுக அமைச்சர்களின் ஊழலைக் கிளற வேண்டாம் என்று கூறுகிறாரா என்று திமுகவினருக்குள் விவாதங்கள் நடக்கின்றன.

முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, “முதலில் இது திமுகவினருக்கு எழுதப்பட்ட மடல். இந்த மடலின் மூலம் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை அப்படியே விட்டுவிடப் போகிறோம் என்பதல்ல.

நாம் எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். அதாவது அதிமுகவுக்குள் தேர்தல் முடிவு வெளியான உடனேயே எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சண்டை வெடித்துவிட்டது. மீண்டும் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அவர் எடப்பாடியை சும்மா விடமாட்டார். இந்த நிலையில், குழப்பங்கள் கூடிக் கொண்டே இருக்கும் அதிமுகவில் இருப்பதை விட திமுகவுக்கு வந்துவிடுங்கள் என்று அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர். அவர்களை திமுகவில் சேர்க்க வேண்டியதற்கான அவசியத்தை திமுகவினருக்கு வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவில் அனைவரும் ஊழல்வாதிகள் இல்லையே. அந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து புள்ளிகளையும் திமுகவுக்கு இழுக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் விளைவுகளைப் பார்ப்பீர்கள்”என்கிறார்கள்.

-ராகவேந்திரா ஆரா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

செவ்வாய் 11 மே 2021