மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ஆய்வு, ஆலோசனை: பம்பரமாய் சுழலும் அமைச்சர்கள்!

ஆய்வு, ஆலோசனை: பம்பரமாய்  சுழலும்  அமைச்சர்கள்!

தமிழகத்தில் புதிய அரசு, மிக நெருக்கடியான காலத்தில் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நிலவும் கடன் சுமை, பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது.

எனவே இந்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாண்டு சிறப்பான ஆட்சியை புதிய அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ’நல்லவிதமாகச் செயல்பட்டு நமது அரசுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுங்கள்’ என்று அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதன்படி பல்வேறு துறை அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தங்கம் தென்னரசு

கொரோனாவால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை சிறப்பாக செயல்படுவதற்காக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்துறை செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் எந்தளவில் சிறப்பாகச் செயல்பட முடியும், அவற்றிற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க முடியும், தொழில் முனைவோருக்கான தேவைகள் நிறைவேற்றித் தருவது, சிப்காட், டிஎன்பிஎல், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “தொழில் துறையில், வேலைவாய்ப்பைப் பெருக்கி தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் கட்டமைப்பின் மூலம் ஜிடிபியை உயர்த்துவதற்கு நாம் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறோம்.

கடந்த காலங்களில் தொழில்துறையில் போடப்பட்ட ஓப்பந்தங்கள் தொடரும்” என்று தெரிவித்தார்.

அதுபோன்று நேற்று, தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் வழங்குதலை உறுதி செய்ய, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

வேளாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில், பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் நடந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் திட்டங்களின் விவரத்தை அதிகாரிகளிடம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கிசான் திட்ட முறைகேட்டில் 114 பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தவறு செய்த தொகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். கண்டிப்பாகத் தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உழவர் சந்தை முடக்கப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் நடத்தவும் மேலும் பல இடங்களில் புதிதாக உழவர் சந்தை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வேளாண் துறைக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது” என்றார்.

பொன்முடி

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், புதியதாக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நடந்து முடிந்த கல்லூரி தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள், பிரச்சினைகள் நடந்திருப்பதாக மாணவர்களிடமிருந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக கல்லூரி துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் உட்பட 4 லட்சம் மாணவர்கள் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம்.

கடந்த முறை ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரமாக நடத்தப்படும். மற்ற பல்கலைக் கழகங்கள் நடத்துவது போல் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அதைப் பெற்றுக்கொண்டு உயர்கல்வி அல்லது வேலைக்குச் செல்லலாம். இந்த மறுதேர்வு நடந்துமுடிந்த பிறகு வழக்கமான தேர்வுகள் நடைபெறும்” என்றார்.

மேலும், புதிய கல்விக்கொள்கை நிச்சயம் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் சுகாதாரத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் மா.சுப்பிரமணியன். பொறுப்பேற்றது முதல், மருத்துவமனைகளுக்கும், கொரோனா சிறப்பு மையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நேற்று ஆவடி,திருவள்ளூர்,பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவச்சேவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அவை ஒவ்வொன்றும் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன. அதுமட்டுமல்லாமல், பெரம்பலூர், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் பெரிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்தார். மேலும் ஆவடி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

முன்னதாக ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். “மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று புதிதாகப் பொறுப்பேற்ற பல்வேறுத் துறை அமைச்சர்கள், ஆய்வு, ஆலோசனை என பம்பரமாய் சுழன்று வருகிறார்கள்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 11 மே 2021