மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

கேட்காமலே துணை சபாநாயகர்: பிச்சாண்டியின் பொறுமைக்கு கிடைத்த பரிசு!

கேட்காமலே   துணை சபாநாயகர்:  பிச்சாண்டியின் பொறுமைக்கு கிடைத்த பரிசு!

தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை (மே 12) நடக்க இருக்கும் நிலையில், திமுக தலைமைக் கழகம் நேற்று (மே 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகிற 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும் - துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் திமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

பதினாறாம் சட்டமன்றத்தை நெல்லை வழி நடத்த அதற்கு துணையாய் திருவண்ணாமலை இருக்கப் போகிறது.

சபாநாயகர் அப்பாவு சமீபகாலமாகவே செய்திகளில் அதிகம் பேசப்பட்டவர். தொலைக்காட்சி விவாத வெளிச்சங்களில் மின்னியவர். துணை சபாநாயகராக இருக்கப் போகும் கு. பிச்சாண்டி யார்?

கு.பிச்சாண்டி 1980 களிலேயே திமுகவில் துடிப்பாக செயல்பட்ட இளைஞர். 1984 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டார். 1986 ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகராட்சி கவுன்சிலர் ஆனார். 1989 ஆம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், அதன் பிறகான காலத்தில் வைகோவின் பிரிவால் திமுக சரிவை சந்தித்தபோது கட்சியை திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டிக் காப்பாற்றியதில் முக்கியமானவர். அதனால் 1992 ஆம் ஆண்டு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார் கு.பிச்சாண்டி. மூன்று முறை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியை 2000 ஆம் ஆண்டு வரை வகித்தார்.

1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக கலைஞரின் அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார் பிச்சாண்டி. அப்போது இளைஞரணியில் இருந்து அமைச்சரான ஒரே ஆள் பிச்சாண்டிதான். அப்போது இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலினுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் (ஸ்டாலின் சென்னை மேயர் ஆனார்) இளைஞரணியில் இருந்து அமைச்சர் ஆக்கப்பட்டவராக பிச்சாண்டி திகழ்ந்தார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின் மாவட்டச் செயலாளர்கள் பலரை மண்டலச் செயலாளர்கள் என்று மாற்றினார் கலைஞர். பிறகு அவர்கள் மீண்டும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர். ஆனால், மண்டலச் செயலாளராக இருந்து மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆக்கப்படாதவர்களில் பிச்சாண்டியும் ஒருவர். ஆனால் இதற்காக அவர் வருத்தப்படவில்லை. தொடர்ந்து கட்சிப் பணி செய்துகொண்டே இருக்கிறார்.

2001, 2006 தேர்தல்களில் திருவண்ணாமலையில் வெற்றிபெற்றார். 2011 இல் கீழபென்னாத்தூர் தொகுதியில் இவரை வேட்பாளராக அறிவித்தது திமுக தலைமை. அங்கே 4 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 2016 இல் கீழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர், மீண்டும் இப்போது 2021 இலும் கீழ் பென்னாத்தூர் தொகுதியில் வென்றுள்ளார். எட்டுமுறை தேர்தலில் போட்டியிட்டு ஆறு முறை வெற்றிபெற்றவர் கு.பிச்சாண்டி.

”திருவண்ணாமலையில் பிஎஸ்சி படித்து பச்சையப்பாவில் எம்.ஏ. படித்தவர். அரசியலுக்கே உரிய அதட்டல் உருட்டல் எதுவும் இல்லாதவர். யாரையும் புண்படுத்த மாட்டார். கனிவும் நிதானமும் மிக்கவர். தலைமை பொறுப்போ பதவியோ கொடுத்தால் அதை சிறப்பாக செய்வார். ஆனால் கொடுக்கவில்லை என்றால் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்பது, தலைமையின் நடவடிக்கைகளை விமரிசிப்பது போன்ற பழக்கங்களே இவரிடம் கிடையாது. ‘எனக்கு இதைக் கொடுங்கள்’ என்றோ, ‘ஏன் எனக்கு கொடுக்க மறுக்கிறீர்கள்?’என்றோ இவர் கலைஞரிடமோ, ஸ்டாலினிடமோ கேட்டதே கிடையாது. மேலும் திமுகவை கண்மூடித்தனமாக எதிர்த்த ஜெயலலிதாவால் மிகவும் சிறந்த எம்.எல்.ஏ. என்று சட்டமன்றத்தில் பாராட்டு வாங்கியவர் பிச்சாண்டி.

ஏற்கனவே நாயுடு சமூகத்தைச் சேர்ந்த எ.வ.வேலு, காந்தி, சேகர்பாபு ஆகிய 3 அமைச்சர்கள் இருக்கும் நிலையில்... தஞ்சை மாவட்ட சீனியர் துரை சந்திரசேகர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை துணை சபாநாயகர் ஆக்கலாம் என்று சில ஆலோசனைகள் நடந்தன. ஆனால்... சுமார் நாற்பதாண்டு கால நீண்ட உழைப்பும், எதையும் கேட்டுப் பெற வேண்டும் என்று விரும்பாத நீண்ட காத்திருப்பும்தான் சாதி கோட்டாவை யெல்லாம் தாண்டி நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த கு. பிச்சாண்டியை துணை சபாநாயகர் ஆக்க வேண்டும் என்று ஸ்டாலினைத் தூண்டியிருக்கின்றன. இந்த பொறுமையே அவருக்கு துணை சபாநாயகர் பணியிலும் துணை நிற்கும்” என்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 11 மே 2021