மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

தேர்தல் முடிவுகளால் பாஜக உத்திகள் முடிவுக்கு வந்துவிடுமா?

தேர்தல் முடிவுகளால் பாஜக உத்திகள் முடிவுக்கு வந்துவிடுமா?

அ. குமரேசன்

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும், புதுச்சேரி ஒன்றியப் பகுதிக்கும் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஜனநாயக சக்திகளும் அரசின் மதச்சார்பின்மைக்காக நிற்கிறவர்களும் இப்படித்தான் நிகழும் என்று எதிர்பார்த்தபடிதான் முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் விரும்பியபடி எல்லா முடிவுகளும் வந்துவிடவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி, கேரளத்தில் மறுபடியும் இடது முன்னணி ஆட்சி என்ற விருப்பங்கள் நிறைவேறியுள்ளன. மேற்கு வங்கத்தில் பாஜகவின் மாநிலம் பிடிக்கிற ஓட்டம் தடுக்கப்பட வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறியிருக்கிறது. ஆனால் குறுகிய கண்ணோட்டம், வன்முறைப் பசி, தனிமனித மேலாதிக்கம் இவற்றில் எதிலும் சளைக்காத மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் வசம் மறுபடி ஆட்சி தரப்பட்டிருக்கிறது. அசாமிலும் புதுவையிலும் நிலவிய சூழல்கள் அங்கே மறுபடி பாஜக ஆட்சி, இங்கே என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி என்றே கணிக்க வைத்தன. அதுவே நிகழ்ந்திருக்கிறது.

இந்த அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் பலரும் வெற்றி - தோல்விகளுக்கான காரணங்களை அவரவர் கோணங்களில் அலசிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழக, கேரள, மேற்குவங்க வாக்காளர்களின் பெரும்பான்மைத் தீர்ப்புகளில் பாஜகவுக்கு ஒரு முக்கிய செய்தி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தெளிவாக, மோடி - ஷா வியூகங்கள் எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதை இந்த மூன்று மாநிலங்களும் எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார்கள். ஏன், கேரளத்தில் பாஜக தலைவர் ஒருவரே, ஹெலிகாப்டர் பாலிடிக்ஸ் இந்த மாநிலத்தில் எடுபடாது என்பதை உணர வேண்டுமென நொந்துபோய்க் கூறினாரே. யார் யாரை மனதில் வைத்துக்கொண்டு அப்படிச் சொன்னாரோ?

விமர்சனங்களின் மையக் கருத்துகள்

இப்படியான விமர்சனக் குரல்களில் இறுதியாக இரண்டு கருத்துகள் ஒலிக்கின்றன. ஒன்று, பாஜக தனது வழிமுறைகளை இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு, பாஜக இனிமேலாவது திருந்த வேண்டும்.

இவற்றில் முதல் கருத்தை பாஜக தலைவர்கள் ஏற்கக்கூடும். அவர்களே கூட இது பற்றி இந்நேரம் பேசியிருக்கக்கூடும் அல்லது கூடிய விரைவில் இது பற்றிப் பேசக்கூடும். சில பொதுவான வழிமுறைகளைத் தவிர்த்து, ஒரு மாநிலத்தின் நிலைமைகளுக்கேற்ப உத்திகளை வகுத்துக்கொள்கிற, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற தொலைநோக்கும், அனுபவப் பயிற்சியும் அவர்களுக்கு ஏற்கெனவே உண்டு. தமிழகத்தில் அதிமுக முதுகில் ஏறிக்கொண்டது அப்படிப்பட்டதுதான். வேறு வழியில்லாத கூட்டு அல்ல அது. மாறாக, வேறு வழியில்லாத நிர்பந்தத்தை ஏற்படுத்தி அமைத்துக்கொண்ட கூட்டு அது. இழுத்த இழுப்புக்கு வந்தாக வேண்டும் என்று மூக்கணாங்கயிறு மாட்டப்பட்டதன் அறிகுறிகள் தலைமைச் செயலகம் முதலமைச்சர்களின் வீடுகள் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளிலிருந்தே தெரியவந்தன.

இவ்வளவு முயன்றும் நான்கு இடங்கள்தானே என்று மற்றவர்கள் வேண்டுமானால் குறைத்து மதிப்பிடலாம். பாஜக தலைமை அப்படி நினைக்காது. தமிழக சட்டமன்றத்தில் நான்கு பிரதிநிதிகள் என்பது, என்னதான் அதிமுக தயவால் கிடைத்திருந்தாலும், நாளையே அதிமுக தனது உறவைத் துண்டித்துக்கொண்டாலும், இன்றைய நிலையில் பாஜகவுக்கு மிக முக்கியமான வளர்ச்சிக்கட்டம்தான். இதை, பாஜக அரசியலுக்கு எதிராக நிற்பவர்கள் கண்டிப்பாகப் புரிந்துகொண்டாக வேண்டும்.

அதேபோல, இப்படியொரு வாய்ப்பை பாஜகவுக்கு ஏற்படுத்திக்கொடுத்து, தமிழகத்தின் மதவேலிகள் கடந்த நல்லிணக்கப் பாரம்பரியத்துக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள அதிமுக தலைமை வரலாற்றில் தலைகுனியத்தான் வேண்டியிருக்கும் (அதாவது தனது பெயரில் இருக்கும் அந்த ‘திராவிட’ என்ற சொல்லின் சிந்தாந்தம், அரசியல், கொள்கை ஆகியவற்றில் இப்போதும் அல்லது இப்போதாவது அவர்களுக்கு விசுவாசம் இருக்குமானால்).

“தமிழகத்தில் ஒரு இடம் கூட எங்களுக்குக் கிடைக்காது என்று சொன்னார்கள், நான்கு இடங்களைப் பிடித்திருக்கிறோம்” என பாஜக தலைவர்கள் பேட்டியளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிமுக கூட்டணியால் கிடைத்ததென்பதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களுடைய வேல் அரசியல், சாதியத் திரட்டல், ஆலய நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களிடையேயான விசிறல் ஆகியவற்றுக்குத் தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரமாக முன்வைப்பார்கள்.

மத உணர்வு ஓர் ஆயுதமாக...

ஒரு கட்சி என்ற முறையில் எந்த மாநிலத்திலும் காலூன்ற முயற்சி செய்வதில் எந்த விமர்சனமும் இல்லை. அதற்கான வழிமுறைகள்தான் விமர்சிக்கப்படுகின்றன. அவை சரியான வழிமுறைகள்தான் என்று கருதுவார்களானால் அதைச் சொல்லி வாதிடுவதற்கு எவ்விதத் தடையுமில்லை.

கேரளத்தில் சபரிமலை கோயில் வழிபாட்டுக்குப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி செயல்பட முயன்ற இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக மத உணர்வுகளை ஒரு ஆயுதமாகத் தீட்டவும், அதன் மூலம் குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்களுக்கான கட்சியாகக் காட்டி அவர்களுடைய ஆதரவைத் திரட்டவும் முயன்றதை, முதலமைச்சர் பினராயி விஜயன் மீது கிளப்பப்பட்ட அவதூறுகளை, அந்த அவதூறுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர் மீது ஊழல் கறையைப் பூசித் தனிமைப்படுத்த வகுக்கப்பட்ட சதிகளை… அந்த மாநிலத்தின் பெரும்பகுதி மக்கள் ஏற்கவில்லை. ஆகவேதான் பாஜகவுக்கு ஓர் இடம்கூட வழங்க அவர்கள் முன்வரவில்லை. அவர்களின் தீர்ப்பு இடது ஜனநாயக முன்னணி அரசின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, பாஜகவின் மதப்பகைமை அரசியலுக்கான அங்கீகார மறுப்பும்கூட.

77 இடங்களும் 38 சதவிகிதமும்...

மேற்கு வங்கத்தில் உடனடியாக ஆட்சியைப் பிடிக்கிற நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் நான்கு இடங்களுக்கான முக்கியத்துவத்தை விடவும் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா வங்கத்தில் 77 இடங்கள்? பதிவான வாக்குகளில் 38 சதவிகிதத்தைப் பெறுகிற அளவுக்கு அங்கே பாஜக வளர்ந்திருப்பதை ஜனநாயக இயக்கங்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அங்கே இதுவரையில் கடைப்பிடித்த வழிமுறைகள் இத்தனை இடங்களையும் சதவிகிதத்தையும் உறுதிப்படுத்தியிருக்கின்றன என்றால், அடுத்த தேர்தல் வரையில் பொறுமையாக இருக்கவும், அதே வழிமுறைகளை மேலும் கூர் தீட்டவுமே பாஜக முயற்சி செய்யும். நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இரண்டு என்ற மிகக் குறைந்த இடங்களே பெற்ற நிலைமையிலிருந்து மிகப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாகவும் வர முடிந்த வரலாறும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு.

அந்த வளர்ச்சியின் மீதான பிரமிப்பிலிருந்து அல்ல, அதற்கான காரணத்தின் மீதான தவிப்பிலிருந்தே மதச்சார்பின்மைக்கான சக்திகள் பரிசீலிக்கும். கொரோனா இரண்டாவது அலை என்ற கொடூரச் சூழலிலும், கர்நாடகத்தில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தொடர்பாகச் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த தகவலுக்கு, சட்டப்படியான ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாறாக, மதவாதச் சாயம் பூச முயன்றார் ஒரு சட்டமன்ற உறுப்பினர். மேற்கு வங்க முடிவுகளைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துகளைத் தூவுகிறார் ஒரு திரை நட்சத்திரம். கண்டனங்களைத் தொடர்ந்து ட்விட்டர் கணக்கிலிருந்து நீக்கம் என்பன போன்ற நடவடிக்கைகளால் இந்தத் தூவல் வேலைகள் நின்றுவிடுமா?

சித்தாந்தத்துக்கான அரசியல்

இக்கேள்வி எழுவதற்கான முக்கிய காரணம், பாஜக மற்ற அரசியல் அமைப்புகளைப் போன்ற மற்றொரு கட்சியல்ல என்ற உண்மை நிலையே. அதை இயக்குவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அந்தச் சித்தாந்தத்தை நிறுவுவதற்காக, நாடாளுமன்ற அமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை உத்தியாக, அரசியல் நகர்வுகளுக்காக ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கட்சிதான் பாஜக. அந்தச் சித்தாந்தத்தை நிறுவுவதற்காக எதையும் செய்யத் தயங்காத உறுதிப்பாடு அவர்களுக்கு உண்டு. மாநிலங்களின் நிலைமைகளுக்கேற்ற அணுகுமுறைகள் முதல், எதிர்க்கருத்துகள் வலுவாக ஒலிக்கவிடாத ஒடுக்குமுறைகள் வரையில் அந்த உறுதிப்பாட்டுடன் இணைந்தவையே. மற்ற கட்சிகளின் சொந்த பலவீனங்கள் அந்த உறுதிப்பாட்டுக்குத் துணையாகிவிடுகின்றன.

ஆர்எஸ்எஸ் பீடத்தையும், பாஜகவின் மையமான தலைமை வட்டாரத்தையும் சேர்ந்தவர்களுடைய சித்தாந்தப் பிடிப்பையும், செயலுறுதியையும் சாதாரணமானவையாகத் தள்ளிவிட முடியாது. அந்தச் சித்தாந்தத்தை ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ சக்திகள் திட்டவட்டமாக நிராகரிக்கலாம். ஆனால், இந்த யதார்த்தத்தைக் காணத் தவறக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய சித்தாந்தத்தை நிறுவுவதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா, அது போலத்தான் இதுவும் என்று விவாதங்களின்போது பாஜக பிரமுகர்கள் தயங்காமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ, தங்களின் தலையாய சித்தாந்தப்படி ஒற்றை மத ஆதிக்கத்துக்கான பரப்புரைத் தளமாகத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா, தேர்தல் வெற்றிக்காக மதவாதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா என்ற இரண்டு கேள்விகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

அரசியல் அதிகாரத்துக்காகக் குறுக்கு வழிகளைக் கடைப்பிடிப்பதைப் போற்றுகிற, நியாயப்படுத்துகிற கதைகளை ‘மகாபாரதம்’ கொண்டிருக்கிறது. கர்ணன் எப்படியெல்லாம் வீழ்த்தப்பட்டான் என்ற நிகழ்வுகளை மறக்க முடியாது. அத்தகைய குறுக்குவழிகள் இன்றளவும் நவீன முறைகளில் கையாளப்படுகின்றன. இந்தியாவின் இதிகாசச் செல்வத்திலிருந்து சான்றுகள் எடுத்துக்காட்டுவதைக்கூட மதத்துக்கு எதிரான தாக்குதலாகத் தயக்கமின்றி சாடுவார்கள். அது மதப்பற்றுள்ள மக்களுக்கு வலைவீசப் பயன்படும் என்பதால்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 11 மே 2021