மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

எதிர்க்கட்சித் தலைவர் தனபால்? எடப்பாடிக்கு பன்னீர் செக்!

எதிர்க்கட்சித் தலைவர் தனபால்? எடப்பாடிக்கு பன்னீர் செக்!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க மீண்டும் இன்று (மே 10) அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக 65 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மே 2 ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மே 7 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியது.

எதிர்க்கட்சித் தலைவர் ஓ.,பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிசாமியா என்ற போட்டியில் இரு தரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதையடுத்து மே 7ஆம் தேதி எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

மீண்டும் மே 10 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் தொடங்கியது 9.45 மணியளவில் முதலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். அவரது ஆதரவாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார்கள். எடப்பாடி பழனிசாமி வந்தபோதும் அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

இன்று முதல் தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்... அதிமுக தலைமை அலுவலகத்தில் அதையெல்லாம் மதிக்காமல் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். எடப்பாடி பன்னீர் இருவருமே தங்களுக்கு ஆதரவான தொண்டர்கள் வந்தபோதும் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தவில்லை.

அவர்களைத் தாண்டிச் சென்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், எசக்கி சுப்பையா ஆகிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் இன்றையக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஏற்கனவே ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் அதே நிலைதான் தொடர்ந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தானே எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்றும், எடப்பாடி தானே எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

மேடையில் ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி ஆகியோரோடு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்ற தகவல்களாலும், அதிமுக அலுவலகத்தின் தரை தளத்தில் தொண்டர்கள் ஊரடங்கை மீறி கூடியதாலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கீழே இப்படி ஒரே பரபரப்பாகிக் கொண்டிருக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தன்னை எதிர்க்கட்சித் தலைவராக்கவிட மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான தனபாலை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் குழுவுக்கு முன்மொழிந்திருப்பதாக இன்று பகல் 12.30 மணியளவில் தகவல் பரவியது.

கொங்குதான் அதிகம் ஜெயித்தது என்று தொடர்ந்து அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கொங்கு பகுதியைச் சேர்ந்த அவினாசி சட்டமன்ற உறுப்பினரான அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த தனபால் பெயரை ஓபிஎஸ் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

“எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் கொங்கு பகுதியைச் சேர்ந்த தனபாலை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வார்கள்”என்று கருதியே ஓபிஎஸ் இந்த செக்கை வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் கூட்டம் தொடங்கி சுமார் 3 மணி நேரமாகியும் சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

-வேந்தன்.

.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 10 மே 2021