மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

வானதியை ஒதுக்கி, நயினாரை செலக்ட் செய்த முருகன் - பாஜக மோதல் பின்னணி!

வானதியை ஒதுக்கி, நயினாரை செலக்ட் செய்த முருகன் - பாஜக மோதல் பின்னணி!

தமிழக பாஜகவுக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு பாஜகவுக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் இடம் கிடைத்திருக்கிறார்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

இந்நிலையில், தமிழக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக திருநெல்வேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (மே 9) தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் ‌கிஷன்ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் C.T.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்க சட்டமன்ற உறுப்பினர்களான காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். நயினாரின் தேர்வுக்குப் பின்னால் தமிழக பாஜகவுக்குள் பெரிய புயலே வீசிக் கொண்டிருக்கிறது.

“பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் கட்சியின் மிக சீனியர் என்றால் அது காந்திதான். பாஜகவில் மட்டுமல்ல; ஆர்எஸ்எஸ்ஸிலும் சீனியர் காந்திதான். திமுகவின் வலிமையான சுரேஷ் ராஜனைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார். அவரை அடுத்த சீனியர் என்றால் வானதி சீனிவாசன்தான். தேசிய மகளிரணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

ஆனால், இந்த இரு சீனியர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு... அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் எல்.முருகன்.

பிரதமர் மோடியே தாராபுரம் வந்து முருகனுக்காக பிரச்சாரம் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போதே பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டினார் முருகன். தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் இதுவரை செய்யாத அளவுக்குச் செலவு செய்தார். பல மத்திய அமைச்சர்கள் வந்து அவருக்காக பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் தனது தோல்விக்கு வானதி சீனிவாசனுக்கும் பங்கு இருக்கிறது என்று கருதுகிறார் முருகன். திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ருத்ரகுமார் வானதியின் தீவிர ஆதரவாளர். அவர் மட்டுமல்ல, இன்னும் பல நிர்வாகிகள் வானதியின் ஆதரவாளர்கள்தான். இவர்களெல்லாம் ஒழுங்காகப் பணியாற்றவில்லை என்றும், முருகன் தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழக பாஜகவில் அவரது ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்ற காரணத்தால் சீனியர்கள் சேர்ந்து தன்னைத் தோற்கடித்துவிட்டதாகவும் முருகனுக்கே ரிப்போர்ட் போயிருக்கிறது.

இதன் அடிப்படையில்தான் முதல் வேலையாக சட்டமன்றக் கட்சித் தலைவர் பட்டியலில் இருந்து வானதியை நீக்கினார் எல்.முருகன், அடுத்து காந்தி சீனியராக இருந்தபோதிலும் 75 வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால் அவருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

மீதி இருப்பவர்கள் நயினார் நாகேந்திரனும், மொடக்குறிச்சி சரஸ்வதியும்தான். நயினார் அதிமுகவில் இருந்து வந்தவர். சரஸ்வதி திமுகவில் இருந்து வந்தவர்.

ஏற்கனவே நயினார் நாகேந்திரன் மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது தனக்கு முக்கியப் பதவி வழங்கப்படாததால் வருத்தத்தில் இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும் பாஜகவை விட்டே அவர் செல்கிறார் என்று தகவல் அறிந்து நெல்லை விரைந்து அவரை வீடு தேடிச் சென்று சந்தித்து சமாதானப்படுத்தினார் எல்.முருகன். அந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த முக்கியமான பதவியைக் கொடுத்துள்ளார் முருகன்” என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

“காலங்காலமாக பாஜகவுக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி கிடையாது. ஆனால், மாற்றுக்கட்சியில் இருந்து வருகிறவர்களுக்கு மட்டும்தான் பதவியா?” என்று முருகனைப் பற்றி டெல்லிக்குப் புகார்கள் மீண்டும் போய்க் கொண்டிருக்கின்றன.

ஆனால் எல்,முருகன் தரப்பினரோ, “நான்கு எம்.எல்.ஏ.க்களைக் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிற ஒரு மாநிலத் தலைவரின் தனிப்பட்ட முடிவல்ல இது. கூட்டு முடிவு இது” என்கிறார்கள்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 10 மே 2021