மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

எடப்பாடி பழனிசாமியை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டனரா மக்கள்?

எடப்பாடி பழனிசாமியை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டனரா மக்கள்?

ராஜன் குறை

நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் பிரச்சினை ஓயாத பிரச்சினையாக இருக்கிறது. இதன் அனுபந்தமாக டிடிவி தினகரன் - சின்னம்மா பிரச்சினை இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா வாரிசு யார், அவருக்குப் பின் கட்சித்தலைவராக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி இருந்தது. ஊடகங்கள் இந்த பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. இன்று அ.இ.அ.தி.மு.க தேர்தலில் தோல்வி அடைந்து 66 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் மீண்டும் கருத்து மாறுபாடு நிலவுவதாகத் தெரிகிறது. ஆனால் ஊடகங்கள் இதில் பெரிய சுவாரஸ்யம் காட்டவில்லை. இதைத்தவிர பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவைத் தேர்ந்தெடுத்து, பிறகு நீக்கியது, அந்தப் பதவியையே இல்லாமல் செய்தது ஆகியவை குறித்த வழக்குகளும் நீதிமன்றங்களில் உயிருடன் உள்ளன. இதனால் அ.இ.அ.தி.மு.க எதிர்காலம் கேள்விக்குரியதாகத்தான் உள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கட்சியின், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தலைமையில்தான் பாஜக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. அந்தக் கூட்டணி 75 தொகுதிகளை வென்று, 40% வாக்குகளையும் பெற்றுள்ளது.

பல அரசியல் நோக்கர்கள் இந்த வாக்கு சதவிகிதமும், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளையும் வென்றது எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமையை, கூட்டணி தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதையே குறிக்கிறது என்று கருதுவதாகத் தோன்றுகிறது. அதாவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க-வின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது தேர்தல் முடிவுகளால் உறுதிப்பட்டுவிட்டதாக சிலர் நினைக்கிறார்கள். மாறாக சிலர், கூட்டணி அடைந்த தோல்வி அவர் தலைமைக்குக் கிடைத்த தோல்வி என்றும், அ.இ.அ.தி.மு.க-வுக்குப் புதிய தலைவர் வேண்டும் என்றும் நினைக்கலாம். மீண்டும் சுவரொட்டி யுத்தம் சில இடங்களில் தொடங்கியுள்ளது. கட்சியை வழிநடத்த சின்னம்மாவை அழைக்கும் போஸ்டர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமி குறித்து எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதாகப் புரிந்துகொள்வது?

தேர்தல் வெற்றியும், வாக்கு சதவிகிதமும்

பொதுவாக தேர்தலில் வென்ற கட்சிகள் வெற்றியைக் குறித்துப் பேசுவதும், தோற்ற கட்சிகள் வாக்கு சதவிகிதம் குறித்து பேசுவதும் வழக்கம். நமது தேர்தல் முறையில் ஒருவர் மற்றவரைவிட ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் அவர்தான் வென்றதாகக் கருதப்படுவார். எப்படி டி-20 மேட்ச்சில் கடைசி பந்துவரை சிறப்பாக ஆடி எதிர் அணியைவிட ஒரு ரன் குறைவாகப் பெற்றாலும் தோல்விதான் என்று ஏற்றுக்கொள்கிறோமோ என்பது போலத்தான் இதுவும். அதனால் இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் ‘வெற்றிகரமான தோல்வி’, ‘தோல்விகரமான வெற்றி’ என்றெல்லாம் விதவிதமாக பேசத் தொடங்கியுள்ளார்கள். நாம் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் வாக்கு எண்ணிக்கை அல்லது வாக்கு சதவிகிதம் எதைக்குறிக்கிறது, வெற்றி தோல்வி எதைக்குறிக்கிறது என்பதைத்தான்.

பல தேர்தல்களிலும் நாம் வெற்றி தோல்வி குறித்து பேசிவிட்டு, அதன் பொருள் என்ன என்றெல்லாம் பேசிவிட்டு, வாக்கு சதவிகிதத்தைப் பார்க்கத் தொடங்கினால் நமக்கே குழப்பம் வரும். உதாரணமாக பதினெட்டு மாத நெருக்கடி நிலை சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தியை மக்கள் நிராகரித்ததை இந்திய மக்களாட்சியின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய தருணம் என்று சொல்வோம். தேர்தலுக்கு இரண்டே இரண்டு மாதங்களுக்கு முன்பு உருவான ஜனதா கூட்டணி 345 இடங்களை வென்றது. வட மாநிலங்கள் முழுவதும் இந்திரா எதிர்ப்பு அலை வீசியது. இந்திரா காங்கிரஸ் தென் மாநிலங்களில் 188 இடங்களை வென்றது. இறுதியில் வாக்கு சதவிகிதத்தில் என்ன வேறுபாடு என்று பார்த்தால் அகில இந்திய அளவில் நாலைந்து சதவிகிதம்தான் வித்தியாசம். மிகப்பெரிய வாக்கு சதவிகித வித்தியாசம் இருந்த உத்தரப்பிரதேசம், பிகாரில்கூட இந்திரா காந்தி இருபது சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார். அதாவது தொகுதிகளின் எண்ணிக்கையில் பூஜ்யம் என்றாலும், அந்த எதிர்ப்பலையிலும் இருபது சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றார் என்பது வேறொரு செய்தியைச் சொல்கிறது. அதானால்தான் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் பிரதமரானார்.

தமிழகத்தின் கதைக்கு வந்தால் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க 2016ஆம் ஆண்டு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெற்றது 41 சதவிகிதம் வாக்குகள். ஆனால், வென்ற தொகுதிகள் 136. எதிராகப் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி பெற்றது கிட்டத்தட்ட 39 சதவிகிதம். தொகுதிகள் 98. இரண்டு சதவிகித வாக்குகளில் 38 தொகுதிகள் வித்தியாசம்.

ஐந்தாண்டுகள் கழித்து பழனிசாமி தலைமையிலான கூட்டணியும் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. போன தேர்தலைவிட ஒரு சதவிகிதம்தான் குறைவு. ஆனால் தி.மு.க கூட்டணி 45 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதனால் தி.மு.க கூட்டணி 159 இடங்களையும், அ,இ,அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களையும் பெற்றுள்ளது.

இந்த வாக்கு வேறுபாடுகளை ஒரு கணிதமாகப் பார்க்க முடியாது. இந்தந்தக் கட்சிகளுக்கு இவ்வளவு வாக்கு இருக்கிறது என்று. அதாவது ஒரு கட்சி பெறுகின்ற வாக்குகள் வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதுபோல ‘வாக்கு வங்கி’யிலிருந்து எடுக்கப்படுவதல்ல. மாறாக ஒரு கட்சியால் எவ்வளவு வாக்குகளைப் பெற முடியும் என்பதையே அவை காட்டுகின்றன. ஒருவரால் எவ்வளவு வேகமாக ஓட முடியும், எவ்வளவு தூரம் ஈட்டியை எறிய முடியும் என்பது போன்ற திறன் அல்லது ஆற்றலையே (Potential) வாக்கு எண்ணிக்கையும், வாக்கு சதவிகிதமும் குறிக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த திறனை சரிவர வெளிப்படுத்த வேண்டும்; பிற போட்டியாளர்களை வெல்ல வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் எதை குறிக்கிறது?

ஜெயலலிதா மறைந்து நாலாண்டுகள் கழித்து நடக்கும் இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கிட்ட த்தட்ட அவர் பெற்ற அளவே வாக்குகளைப் பெற்றது தலைவர்கள் மறைந்தால் கட்சிகள் மறைவதில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தில் இரு கட்சி ஜனநாயகம் வேரூன்றியுள்ளது. இந்த உண்மையைத் தேர்தலுக்கு முந்தைய பல கட்டுரைகளிலும் சுட்டிக்காட்டியுள்ளேன். நான்கு ஆண்டுகளாக வெற்றிடம், வெற்றிடம் என்ற ஓர் அபத்தமான கூக்குரல் ஊடகங்களில் ஒலித்துக்கொண்டே இருந்தது. தலைவர்கள் மறைந்தால் கட்சிகளே மறைந்துவிடும் என்பதுபோல பலர் பேசினார்கள்.

ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுமே வேர்மட்ட அளவில் வலுவான சமூக ஊடுருவலை கொண்டவை. பெரும்பாலும் சமூகத்தில் முற்போக்கு மனோபாவம் கொண்டவர்களை தி.மு.க-வும், பிற்போக்கு மனோபாவம் கொண்டவர்களை அ.இ.அ.தி.மு.க-வும் ஈர்க்கின்றன எனலாம்.

இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மக்களிடையே முழுமையாக கலந்துள்ளார்கள். கடந்த ஐம்பதாண்டுக் கால வரலாற்றில் தமிழ் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வேர்விட்டு, கிளைபரப்பிய கட்சிகளாக இவை உள்ளன என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு கட்சிகளும் குறைந்த பட்சம் இருபது சதவிகிதமும், அதிகபட்சம் 45 சதவிகிதம், 50 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் ஆற்றலுடன் உள்ளன. ஐம்பதாண்டுகளாக நடந்த தேர்தல்களை அலசிப் பார்த்தால் இது புரியும்.

எம்.ஜி.ஆருக்காக, ஜெயலலிதாவுக்காக, இரட்டை இலைக்காக மட்டுமன்றி, உள்ளூர் கட்சிக்காரர்களுக்காகவும், சட்ட மன்ற உறுப்பினர்களாகவும் வாக்குகளை மக்கள் போடுவார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே அ.இ.அ.தி.மு.க பெற்ற வாக்குகள் தலைமையே எல்லாம் என்ற மாயையைத் தகர்க்கின்றன. மேலும் இரண்டு திராவிடக் கட்சிகளின் சமூக ஊடுருவல், பிற கட்சிகள் தமிழகத்தில் வேர்பிடித்து வளர்வது கடினம் என்பதையே காட்டுகின்றன. இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் அளவு வளரலாம். அதற்குமேல் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

அ.இ.அ.தி.மு.க தோல்வி எதைக் காட்டுகிறது?

கட்சி அமைப்பும், தொண்டர் பலமும், மக்கள் ஆதரவும் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையை, சதவிகிதத்தை வெற்றியாக மாற்ற, எதிர் அணியைவிட பத்து லட்சம், இருபது லட்சம் வாக்குகளை அதிகம் பெறுவதற்குத் தலைமை என்ற ஆற்றல் அவசியமாகிறது. கடைசி நொடிகளில் பிற ஓட்டப் பந்தய வீரர்களைக் கடந்து சென்று வெற்றிக்கோட்டை தொடும் ஆற்றல் போன்றது அது. தலைவர் என்பவர் மன்னர் போல; போர்ப்படையை முன்னால் நின்று நடத்தும் ஆகிருதி அவர்தான். தலைவரால் ஏற்படும் தாக்கத்தை நாம் இறையாண்மை ஈவு (Sovereignty Quotient) எனலாம். வரலாற்றின் ஒரு தருணத்தை மக்கள் எப்படி உணர்கிறார்கள், கட்சி என்பதைக் கடந்து எப்படி ஒரு தலைவரைச் சரியான தேர்வு என்று நினைக்கிறார்கள் என்பதுதான் இறையாண்மை ஈவு.

அந்த விதத்தில் மு.க.ஸ்டாலினிடம், எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடைந்துள்ளார். இதற்கு பல காரணங்களைக் கூறலாம். மு.க.ஸ்டாலினின் ஆளுமைப் பண்புகள் ஒருபுறம். அவற்றை தனியாகப் பேச வேண்டும். இப்போதைக்கு பழனிசாமியின் முக்கியமான மூன்று பலவீனங்களைப் பரிசீலிப்போம்.

ஜெயலலிதாவால் வாரிசாக அறிவிக்கப்படாதவர்: பழனிசாமி முந்தைய தலைவரின் தொடர்ச்சியா? அரசியல் வாரிசா? ஆங்கிலத்தில் Legacy எனப்படும் அந்தத் தலைவர் ஈட்டிய நன்மதிப்பை சுவீகரிக்கக் கூடியவரா என்ற கேள்வி முக்கியமானது. அந்த வகையில் பழனிசாமிக்கும், ஜெயலலிதாவுக்கும் நேரடியாக எந்த தொடர்ச்சியும் இல்லை. ஜெயலலிதா அமைச்சரவையில் இருக்கும் இடம் தெரியாத ஓர் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஈர்ப்புமிக்க தலைவர்கள் இடத்தை நிரப்பும் ஆளுமை கொண்டவராக அவரை கருத முடியவில்லை. அதாவது மக்களை ஈர்க்கவல்ல பேச்சாற்றலோ, ஆளுமைப் பண்புகளோ கொண்டவராகத் தெரியவில்லை.

பாரதீய ஜனதா கட்சியிடம் அடங்கிப் போனவர்: பல்வேறு அம்சங்களில் ஒன்றிய அரசை ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு அடங்கிப் போனார். தன்னை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசம் செய்துகொண்டு, தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்ததே பாரதீய ஜனதாவுக்கு பணிந்துதான் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. தமிழ்நாடு சந்தித்த பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசை ஆளும் பாஜகவை எதிர்த்துப் பேச முடியாமல், கண்டிக்க முடியாமல் கோழையாக இருந்தார். தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். முதல்வரென்ற பதவியின் மதிப்பையும் கருதாமல் ஒன்றிய உள்துறை அமைச்சரை விமான நிலையம் சென்று வரவேற்றார். தன்மீது அத்துணை வழக்குகள் இருந்தபோதும் “மோடியா, லேடியா” என்று சவால் விடுத்த ஜெயலலிதாவின் வாரிசாக நினைத்துப் பார்க்க அருகதையற்று நடந்துகொண்டார்.

குறுக்கு வழியில் முதல்வரானார்: ஒரு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஆதரவைப் பெற்று முதல்வரானவரல்லர் பழனிசாமி. ஓர் இக்கட்டான சூழலில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டு அவர் காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்கொண்டவர். இந்த உண்மை அவர் தன் சொந்தக்காலில் இறையாண்மை அம்சம் பொருந்திய தலைவர் ஆவதை பெருமளவு சீர்குலைக்கக் கூடியது. தேர்தல் பிரச்சாரத்தில் கூவாத்தூரில் நிகழ்ந்து மக்களிடையே காணொலியாகப் பரவிய அந்த நிகழ்வு தொடர்ந்து எதிர்க்கட்சியினரால் சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. பழனிசாமியிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை. திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஓடிப்போனதால், மண்டபத்திலிருக்கும் யாரோ ஒருவனை மணம்புரியச்சொல்லும் ஆணாதிக்க கலாச்சார நிகழ்வுபோல, அசந்தர்ப்பமாக முதல்வரானது அவரது இறையாண்மைப் பிம்பம் உருவாவதற்கு முற்றிலும் எதிரானது.

தேர்தலுக்கு முன்னாலான கருத்துக்கணிப்புகளில் யார் சரியான முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியைப் பொறுத்தவரை ஸ்டாலின், பழனிசாமியைவிட பெருமளவு முன்னணியில் இருந்ததை நினைவுகொள்ள வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க முன்னால் உள்ள கேள்வி, ஒரு எதிர்க்கட்சி தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றி தன் தலைமைப் பண்புகளை நிரூபித்து தி.மு.க-வை அடுத்த தேர்தலில் வீழ்த்தும் ஆற்றல் பழனிசாமிக்கு இருக்குமா என்பதுதான். மேலும் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினர்களால் அவர் இன்னம் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இணை ஒருங்கிணைப்பாளராகத்தான் இருக்கிறார். இந்த இரட்டைத் தலைமை எத்தனை நாள் அ.இ.அ.தி.மு.க-வை வழிநடத்தும், அதனால் ஆற்றல்மிக்க முதல்வரான ஸ்டாலினின் ஆளுமைக்கு ஈடுகொடுக்க முடியுமா என்பதெல்லாம் முக்கியமான பிரச்சினைகள். தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையை, சதவிகிதத்தை வைத்துக்கொண்டு பழனிசாமியின் தலைமை உறுதிப்பட்டுவிட்டதாக நினைப்பது பிழையானது. வாக்குகள் கட்சி இயந்திரத்துக்குக் கிடைப்பவை; வெற்றி என்பது தலைமைக்குக் கிடைப்பது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

திங்கள் 10 மே 2021