மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவாதம்!

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவாதம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி நடத்தி வருகிறது.  தமிழகத்தை கொரோனா  பாதிப்பிலிருந்து மீட்கும் பணியில் புதிய அரசு பல்வேறு  நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மே 7ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், “புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். கொடும் தொற்றைக் குறைப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ஆருயிர்க் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளின்  அயராத உழைப்பினால், கூட்டணிக் கட்சித் தோழர்களின்  ஆர்வம் மிகு துணையினால், அவற்றால் திரண்ட மகத்தான வெற்றியால், அதனை மனமுவந்து வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களால், அன்னைத் தமிழகத்திற்கு அருந்தொண்டாற்றுகின்ற முதல் வரிசைப் பணியாளனாக - முழு நேர ஊழியனாக என்னைக் கருதிக் கொள்கிறேனே தவிர, முதலமைச்சராகக் கருதவில்லை.

நெஞ்சை அள்ளும் காவியமாம் சிலப்பதிகாரத்தில் ‘மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்’ என்று சேரன் செங்குட்டுவன் சொல்வதை இளங்கோ அடிகள் குறிப்பிடுவதைப் போல, ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல, அது முள்ளாலான படுக்கை. இதை மனத்தில் வைத்து தமிழகத்தில் மீண்டும் முன்னேற்றப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விடும் தலையாய பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன் (நாம் ஒன்றிணைந்து தலையில் ஏற்றிருக்கிறோம்) என்பதை உங்கள் அனைவர்க்கும் உணர்த்திட விரும்புகிறேன்.

தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  “கடின உழைப்பைச் சிந்தத் தூண்டுவதும், தமிழ்ப் பண்பாட்டை மீண்டும் துளிர்க்கச் செய்வதும், நம் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதும், சமூக மேம்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், மகளிர் நலத்தை உறுதி செய்வதும், பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதை முழுமையாக்குவதும், மாநிலத்தின் கட்டமைப்பைச் சீர்திருத்திச் செம்மையாக்குவதும், தனிநபர் வருமானத்தைப் பெருமளவு உயர்த்துவதும், மக்கள் நல வாழ்வைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும், தமிழ் மொழியைப் புத்துணர்வு அடையச் செய்வதும், சுற்றுலா மேம்பாட்டை அனைத்துத் தளங்களிலும் விரிவுபடுத்துவதும், மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணிசமாக உயர்த்துவதும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் சமூகநீதி இலட்சியத்தைப் போற்றி உயர்த்துவதும்,  இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப் பட்டுள்ள மாநில உரிமைகளை எந்த நிலையிலும் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிர்வாகம் செய்வதும் நாம் கொண்டிருக்கின்ற தனிப் பெரும்  நோக்கங்கள்” என்று தெரிவித்துள்ள அவர்,

“இது கொண்டாடுகிற நேரமல்ல; திண்டாடுபவர்களுக்குத் தோள் கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய நேரம் என்கிற காரணத்தால்தான், இதை விழாவாக எடுக்காமல் பதவிப் பொறுப்பேற்கும் எளிய நிகழ்வாக வடிவமைத்தோம். அதற்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன்.

இத்தருணத்தில் நாம் எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது முக்கியம். உறக்கத்தில்கூட, உறங்காது உடனிருக்க வேண்டியது விழிப்புணர்வு. போர்க்களத்தில் இருக்கும் வீரன் ஒரு நொடி அயர்ந்தால்கூட எதிரிகளின் குண்டுகளுக்கு இரையாகி விடுவதைப்போல, நாம் ஒரு நிமிடம் சோர்ந்தாலும், அலட்சியமாக இருந்தாலும், அஜாக்கிரதையாக நடந்தாலும், கொடுந்தொற்றுக்கு இரையாகி  விடுவோம். எனவே எந்த நொடியிலும் எச்சரிக்கையுடன் இருப்போம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

 “மக்களுக்காக, ஆபத்துகளுக்கிடையே அனுதினமும் பணியாற்றுகிற ஊடகத் துறையினரை முன்களப் பணியாளர் என்று அறிவிக்கும் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் உடன்பிறப்புகளுக்கும் தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன்.

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும். கல்லூரிக் காலத்தில் படித்த ஷேக்ஸ்பியர் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வேளாண்மையையும், நாட்டு நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பயிர்களைப் பராமரிப்பதைப்போல மக்களின் உயிர்களைப் பராமரிப்பது மன்னனின் கடமை என்கிறார் அவர். நம் தமிழ்க் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ‘அவ்வளவு பெரிய கோசல நாட்டை தசரதன், சின்ன வயலுடைய உழவன் உன்னிப்பாகப் பராமரிப்பதைப் போல பராமரித்தான்’ என்று கூறுகிறார். உழவர்கள் தமது நிலத்தைப் பண்படுத்திக் காப்பதைப் போல, இந்த அரசு, தமிழ்நாட்டைப் பராமரிப்பதோடு உழவர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் அரசாகத் திகழும்” என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

“தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களமல்ல, ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக் கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும்  ஒருதாய் மக்கள்.

ஒரே இல்லத்தில் அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத்  தீர்வு காண  முயல வேண்டும். எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். எழுச்சி பெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதைப் பொதுமக்களின் ஒத்துழைப்போடும், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒத்துழைப்போடும், அலுவலர்களின் ஒருங்கிணைப்போடும் நிறைவேற்றுவோம் என்ற உயர்ந்த நம்பிக்கையுடன் உங்களோடு இணைந்து பணியாற்றவிருக்கிறேன்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

-பிரியா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

ஞாயிறு 9 மே 2021