மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

அஞ்ஞாதவாசம் !

அஞ்ஞாதவாசம் !

ஸ்ரீராம் சர்மா

மனதைத் திருகும் சைரன் ஒலியோடு நகரெங்கும் ஒப்பாரிக் கோலம் எழுப்பியபடியே ஓடிக் கொண்டிருக்கின்றன ஆம்புலன்ஸுகள் !

குனிந்து கத்தரிக்காயை பொறுக்கவும் முடியவில்லை, நிமிர்ந்து கோபுரத்தைக் கும்பிடவும் முடியவில்லை !

ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆம்புலன்ஸ்ஸுக்கு உள்ளே இருப்பது நம் உறவா, நட்பா, அண்டை வீடா, நேற்று என்னை நலம் விசாரித்த அன்பான அயலானா எனும்படியான ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் அறைந்து அல்லாட, "ச்சீச்சீ என்னடா வாழ்க்கை இது.." எனப் பேதலித்துப் போகிறது !

“சார், அந்த ஆஸ்பத்திரியில் உங்களுக்கு ஆள் தெரியுமா? இந்த ஆஸ்பத்திரியில் இடம் கிடைக்குமா ?” என்னும் அலைபேசிக் கேவல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கன்னமறைந்து கொள்கிறேன் !

கொண்ட நண்பர்களை - உறவுகளை கொரானா நோய் கொண்டு போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை !

“தெய்வமே உன் இருப்பு மெய்தானா?” என்னும் ஓலக் குரல்கள் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களின் சுவரெங்கும் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்கவில்லை !

அப்பாவி மக்களுக்கு யார் தான் துணை ?

கவலை வேண்டாம் ! இந்த மாயப் பிசாசத்திடம் மாட்டுபவர்கள் மிக மிகக் கொஞ்சம் பேர்தான் என்கிறது இப்போதைய புள்ளி விவரம்.

இந்த புள்ளிவிவரம் மேலும் கூடி விடாமல் இருக்க வழி உண்டா என்று ஆராய்ந்த அரசாங்கத்துக்கு உலகளாவிய அறிவியல் வழி காட்டியிருக்கின்றது.

ஓரிரண்டு வாரங்களுக்கு ஊரடங்கி இருந்தால் போதும். எந்த ஒரு வெளி நடமாட்டமும் இன்றி தனித்து இருந்தால் இந்த கொரானா நோயை 90 சதமானம் ஒழித்துவிடலாம் என்கிறதாம் அந்த அனுபவ அறிவியல் !

அரசாங்கம் சொல்வதுபோல் மொத்த மக்களும் ஊரடங்கி இருப்பது. சுலபமா, என்றால் இல்லைதான் !

ஓடிய கால் ஓடத்தான் முயலும். ஆனால், ஓடாமல் இருக்கும் கால்களை நம்பி ஓர் குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் அந்தக் கணமே அது கட்டுப்பட்டு விடும் !

அன்று , மகாபாரதத்தில் அந்த ஐவரின் ஊரடங்கை நம்பி ஓர் நாடே இருந்தது. சகல வல்லமைகள் இருந்தும் நாட்டுக்காக ஊரடங்காய் - அஞ்ஞாதவாசமாய் ஒளிந்தார்கள் அவர்கள்.

அஞ்ஞாதவாசம் என்பது வேறொன்றுமில்லை.

வெளியுலகம் போகாமல் கட்டுப்பாட்டுடன் ஒரே குடிலின் கீழ் வாழ்ந்திருப்பதுதான் !

மூத்தவன் தருமன், விராட நாட்டின் எளிய பணியாளனாக ஊரடங்கி ஒளிந்து கொண்டான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட வீமனோ ஆங்கே சமையல்காரனாக இருந்து கொண்டான். தன்னிகரற்ற வில்லாளி அருச்சுனன் கூட ஓர் திருநங்கையாக இடுப்பொடித்தபடி உத்தரையோடு அரண்மனைக்குள் புகுந்து கொண்டான்.

குலமகள் பாஞ்சாலி இதுவும் கடந்து போகுமென மறைந்திருந்தாள். அங்கந்த நகுலன் குதிரை சேணம் திருத்த, சகாதேவன் மாட்டுக் சாணத்தை அள்ளியபடிதான் ஊரடங்கி வாழ்ந்தார்கள்.

ஆம், அவர்களுக்கு தெரிந்துவிட்டது இது, அதர்மம் கையிலெடுக்கும் போர் என்று ! மாயச் சகுனியின் மறைமுக சூழ்ச்சிச் சூதாட்டம் இது என அவர்களுக்குப் புரிந்தே விட்டது !

மொத்தத்தில், அனைவரும் தலை மறைவாக இருப்பது மட்டும்தான் உயிர் பிழைக்க ஒரே வழி என்பதால் ‘அஞ்ஞாதவாசம்’ கண்டார்கள்.

அவர்களது அந்த ஊரடங்கின் பயனாக முடிவில் நாடு அவர்களுக்கு வசப்பட்டே விட்டது அல்லவா ‘/

ஆம், அஞ்ஞாதவாசம் என்பது புத்திசாலித்தனமானது ! அதன் முடிவு குதூகலமானது என்கிறது மகாபாரதம் !

எல்லாம் சரி, இந்த இதிகாசக் கதைகள் கேட்பதற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம், சோறு போட்டு விடுமா எனலாம்.

அதற்குத்தான், உதவித் தொகையாக 4000 ரூபாயும் உடனடியாக 2000 ரூபாயும் தருவதாக அறிவித்திருக்கிறது அரசாங்கம்.

மட்டுமல்லாமல், டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்த இந்த அரசாங்கத்துக்கு மக்களின் நல்வாழ்வைக் குறித்த அக்கறை இருப்பதாக நம்ப முடிகின்றது !

மானுடம் அறிந்து போற்றும் இறையன்பு அவர்கள் முதன்மை செயலாளராக இருக்க, உண்மையாக உழைத்துக் காட்டி மக்களிடம் பெயரெடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு கூடிய முதல்வரின் தலைமையிலான அமைச்சரவையாகத்தான் இது தெரிகிறது.

நம்புவோம் ! நம்பிக்கைதானே வாழ்க்கை !?

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக ஊரடங்கி ஒத்துழைப்போம் !

இந்தியத் தமிழர்கள் சகல விதத்திலும் உயர்ந்தவர்கள் என வியந்து போற்றுகின்றது உலகம் ! தமிழகத்தில் கொரானா உயிரிழப்பை பூஜ்ஜியமாக்கி வைத்து அந்தப் பெருமையை மீட்டுரைப்போம்!

உண்மையைச் சொல்லப் போனால், இந்த உலகில் நம்மை உளமாற ஆதரிக்கப் போவது நம் குடும்பம் மட்டும்தான். நமது குடும்பம் நம்பியிருப்பது நம் மூச்சை மட்டும் தான் ! அந்த மூச்சுக்குத் தேவை தனிமை மட்டும்தான் !

முதன்மையானது ஸ்வாசம் !

அதற்குத் தேவை அஞ்ஞாதவாசம் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

ஞாயிறு 9 மே 2021