மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

இந்திய கொரோனா பெருந்தொற்று அவசர நிலைக்குத் தீர்வு!

இந்திய கொரோனா பெருந்தொற்று அவசர நிலைக்குத் தீர்வு!

நா.மணி

இன்றைய உலகளாவிய பெருந்துயர் எனில், அது இந்திய கொரோனா பெருந்தொற்று என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. மே 7ஆம் தேதியன்று தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மரணத்தின் எண்ணிக்கையும் நான்காயிரத்தைக் கடந்து விட்டது. இதில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மடிந்தோர் எண்ணிக்கை மட்டும் 200ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசிக்க மூச்சுக்காற்று இல்லாமல் மனிதர்கள் மரித்துப்போவது ஓர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று அலகாபாத் நீதிமன்றம் இதைச் சாடியுள்ளது.

மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் ஏற்படும் துயர் இது. எரிந்துகொண்டேயிருக்கும் மயானம். எரிக்கவோ, புதைக்கவோ இடமின்றி மார்பில் அறைந்துகொண்டு அழும் மக்கள். ஆக்சிஜனுக்கும் மருந்துகளுக்கும் மக்கள் அலைந்து அல்லோலகல்லோலப்படுவது மனிதப் பேரவலம். இந்தப் பெருந்தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் மிக மிகக் குறைந்த மதிப்பீடு என்ற செய்தி மேலும் நம்மை துயர்கொள்ளச் செய்கிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை. இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் இன்மை. இப்படி நீடிக்கும் இந்த பேரவலம் கண்டு உலகின் பிற பகுதி மக்களும் சேர்ந்து நமக்காக துயர் அடைகின்றனர்.

ஏன் இந்தப் பெருந்துயர்? இரண்டாம் அலையின் இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம்? பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே முழுப் பொறுப்பு. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அனைத்து அதிகாரங்களும் அனைத்து நிதி தொழில்நுட்ப மற்றும் துயர் துடைக்கும் மேலாண்மை பணிகளும் மத்திய அரசிடமே குவிந்துகிடக்கிறது. இதைத் தவிர, மத்திய அரசின் தவறான மேலாண்மை. மேலாண்மை திறன் இன்மை‌யே. இவை மத்திய அரசின் மீது உள்ள அதிருப்தியால் கூறப்படும் வார்த்தைகள் அல்ல.

இரண்டாவது அலை தொடங்குவதற்குச் சற்று முன்னதாக, மார்ச் மாதத்தில் நமது மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “கொரோனா பெருந்தொற்று ஆட்டத்தின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்” என்று அறிவித்தார். இரண்டாம் அலைக்குப் பெரும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணியை அடித்துக்கொண்டே இருந்தனர். இது ஏதோ ரகசியமாக நடந்தது அல்ல. அனைவருக்கும் தெரியும்படி ஆய்வு இதழ்களில் வந்தது. சமூக ஊடகங்களில் வந்தது. ஆனால், மத்திய அரசோ எந்தவித ஆதாரமும் இன்றி இந்தியா மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டது என்று தவறான கணிப்புகளை முன்வைத்தது. இதனால் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமோ ஓர் ஆய்வை மேற்கொண்டு, “கொரோனா பெருந்தொற்று பரவலானால் அதனைத் தாங்கும் சக்தி இந்திய மக்களிடையே 21 விழுக்காட்டினருக்கே உள்ளது என்பதையும் எச்சரிக்கை செய்தது. இந்த எச்சரிக்கை ஆய்வுகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டது. இரண்டாம் அலையை எப்படி எதிர்கொள்வது என்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் எச்சரிக்கை செய்வோரைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.

இரண்டாம் அலை பெரும் பரவலாக இருக்கும்; விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கைகளை மீறி லட்சக்கணக்கில் மக்கள் கூடும் திருவிழாக்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. அரசியல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று இவர்களாகவே கற்பிதம் செய்து கொண்டனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அதை விரைவாக உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தவில்லை. இத்தனைக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்தொகை 2 விழுக்காட்டுக்குக் கீழ்தான் இருந்தது. பல நூறு கோடி செலவில் கட்டப்பட்ட, பழுத்த அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பயன்படுத்தி தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றவில்லை. அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய தடுப்பூசியைத் தனியார்மயமாக்கவும் மாநில அரசுகளே விலைகொடுத்து வாங்க வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, தடுப்பூசி போதுமான அளவு தயாரிப்பு, விநியோகம் என்ற எதையும் திட்டமிடாமல், 18 வயதுக்கு மேம்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி எனத் திடீரென அறிவிக்கப்பட்டது. அறிவித்த தேதியில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்க இயலாமையால் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையினால் அவதியுறும் மாநிலங்களுக்குப் போர்க்கால அடிப்படையில் எப்படி உதவி செய்யலாம் என்ற திட்டம் எதுவும் இல்லை. இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள் முன்கணித்து, தற்காத்துக் கொண்டபோது, ஏராளமான வளங்களையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் என்னும் அங்குசத்தையும் தன்னகத்தே வைத்துள்ள மத்திய அரசால் ஏன் இயலவில்லை என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க அது கடமைப்பட்டுள்ளது.

இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மூன்றாம் அலையை உருவாகாமல் தடுக்க அல்லது நீர்த்துப்போகச் செய்ய கீழ்காணும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

1) தற்போதைய அரைகுறை தடுப்பூசி இயக்கம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 18 வயது முதல் அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி நடைமுறைக்கு வர வேண்டும். ஆதார் அட்டை கட்டாயம்; அதன் நகல் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகள் அகல வேண்டும்.

2) ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று இல்லாமல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் போல நடத்தப்பட வேண்டும்.

3) இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் திறன்கொண்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

4) தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வதில் சிக்கல் இருக்கும் எனில், உரிய தொகையைக் கொடுத்து பரவலாக உற்பத்தி செய்யும் நிலையை நடுவண் அரசே உருவாக்கித் தர வேண்டும்.

5) தடுப்பூசி இயக்கத்தின் தாமதம், கால நீட்டிப்பு ஆகியவை ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளையும் பயனற்றுப் போகச் செய்துவிடும். எனவே, குறைந்தபட்சம் 65 விழுக்காடு மக்களுக்கு, கிராமம், நகரம் என்று பாராமல், எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்ய இயலுமோ, அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்து தர வேண்டும்.

6) பெருந்தொற்று பரவலாகி வரும் பாதை, கொரோனா வைரஸின் மரபணு மாறி வரும் விதம் உள்ளிட்ட ஆய்வுகள் இன்னும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும். அதன் புள்ளிவிவரங்கள் ஆர்வமுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் பயன்படுத்தும் வண்ணம் கிடைக்கப் பெற வேண்டும்.

7) இரண்டாம் அலைப் பரவல் அதிகமாக காற்றின் வழி பரவலாகிறது என்ற ஆய்வுகளுக்கு ஆதாரங்கள் கூடியுள்ளது. இந்த நிலையில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கறாராகப் பின்பற்றுதல், பொய்த் தகவல்கள் பெருகும் பரவலைத் தடுத்தல் ஆகியவற்றில் உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்கள் பெரும் பங்கு ஆற்ற முடியும். அதற்குத் தேவையான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

8) விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுதல் அல்லது கண்டித்தல், பொய்யான வழக்குகளைப் புனைதல் என்ற ஆரோக்கியமற்ற பண்பாடு கைவிடப்பட வேண்டும்.

முதல் அலையில் பாடம் கற்றிருந்தால் இரண்டாம் அலையில் இவ்வளவு இழப்புகளையும் துயரத்தையும் இந்திய நாடு சந்தித்திருக்கத் தேவையில்லை. இது மத்திய அரசு சுயமாக உருவாக்கிக்கொண்ட பேரிடர்.

நடுவண் அரசு தனது தவறுகளை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றிக்கான தொடக்கம் அதில்தான் இருக்கிறது. பொறுப்புள்ள தலைமை வெளிப்படைத் தன்மை மற்றும் நடைமுறைப்படுத்த இருக்கும் பொது சுகாதார செயல்முறைகளில் எந்தவித சமரசமும் அற்ற உண்மையான அறிவியல் நோக்கு அடிநாதமாக இருக்க வேண்டும்.

ஆதாரம்: thelancent.com

கட்டுரையாளர்: மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 9 மே 2021