மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

‘ஒற்றை கையெழுத்து’: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!

‘ஒற்றை கையெழுத்து’: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பெண்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியிலிருந்த கட்சியினரும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவதில்லை.

இந்தச் சூழலில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்குப் பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது மதுக்கடைகள் மூடப்படவிருப்பதால், அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரக்கூடும்.

மதுக்கடைகள் மூடப்படுவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படவுள்ள அடுத்த இரு வாரங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக அமையும். மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வரக்கூடும்.

கொரோனா உதவியாகத் தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.2,000 மதுக்கடைகள் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே செல்லாமல், ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படும். இவை அனைத்தும் மதுக்கடை மூடலின் மகிழ்ச்சிகள்.

மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு எனச் சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்படும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பதுதான்.

மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழக அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழக அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும்.

தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால், தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து 91 ஆயிரத்து 896 கோடி ஆகும்.

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து, தமிழகத்திற்குக் கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும். இளைய தலைமுறையினர் மது அரக்கனின் பிடியிலிருந்து மீள்வார்கள். மக்கள் நோயின்றி வாழ்வார்கள். இவ்வளவு நன்மைகளை வழங்கும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றைக் கையெழுத்து போதுமானது.

எனவே, எந்தவித தயக்கமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு வசதியாகத் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 9 மே 2021