மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

எடப்பாடி-பன்னீர்-யாருக்கு மெஜாரிட்டி? அதிமுகவில் ஓடும் கணக்கு!

எடப்பாடி-பன்னீர்-யாருக்கு மெஜாரிட்டி?  அதிமுகவில் ஓடும் கணக்கு!

தமிழக சட்டமன்றத்தில் 65 இடங்களைப் பெற்று உறுதியான எதிர்க்கட்சியாக அமர மக்களின் தீர்ப்பைப் பெற்றுள்ளது அதிமுக.

ஆனால் தங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, மே 7 ஆம் தேதி கூடுவதாக அறிவித்து முடிவேதும் எடுக்காமல் மே 10 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

“நேற்று (மே 7) கூட்டம் நடத்துவதாக சொல்லி அழைத்த நிலையில் 65 எம்.எல்.ஏ.க்களும் வந்துவிட்டனர். ஆனால், முறைப்படி இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்படவில்லை. தரைத் தளத்திலேயே எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்.

அதையடுத்து ஓபிஎஸ், எடப்பாடி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை ரசாபாசமாக மாறும் அபாயத்தால் முடிவுக்கு வந்தது. ஓபிஎஸ். ‘ என் ஆதரவாளர்களையும் திட்டமிட்டுத் தோற்கடித்தது யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி ‘தேர்தல் என்றால் எல்லாமும்தான் இருக்கும். அதையெல்லாம் முறியடித்துதான் வெற்றிபெற வேண்டும். தேனி மாவட்டத்தை ஒரு மணி நேரத்தில் சுத்தி வந்துவிடலாம். அதிலேயே நம்மால் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனால் கோவை மாவட்டம் முழுதும் திமுகவின் அசுர பலத்தை முறியடித்து பத்து தொகுதிகளை எடுத்துள்ளோம். அண்ணன் எடப்பாடி சேலத்தில் பத்து தொகுதிகளை வென்றுள்ளார். யார் கட்சிக்காக அதிகம் உழைத்து அதிகம் வெற்றிபெற உதவினார்களோ அவர்களையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்போம்’என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அத்தோடு அந்த ஆலோசனையும் முடிந்துவிட்டது. கேபிமுனுசாமிதான் மீண்டும் திங்கள் கிழமை கூடுவோம் என்று சொல்லி அப்போதைக்கு சபையை கலைத்தார்” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

இப்போது அதிமுக ஜெயித்த 65 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடிக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, ஓ.பன்னீருக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு என்ற கணக்கு கட்சிக்குள் தொடங்கிவிட்டது.

“கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் கணக்குப் பார்த்தாலே எடப்பாடிக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது. தென் மாவட்டங்களிலேயே எடப்பாடியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த 65 சட்டமன்ற உறுப்பினர்களில் எடப்பாடிக்குதான் மெஜாரிட்டி இருக்கிறது.எனவே அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் எப்படியாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைந்தே தீருவது என்று பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார். அதிமுகவுக்கு வெளியேயும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன” என்கிறார்கள் அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள்.

-வேந்தன்

.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 8 மே 2021