மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக அதிகமாகப் பரவுவதன் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தவுள்ளது தமிழக அரசு.

இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியான நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் அனைத்து மக்களின் அரசாக இயங்கும் என்று தெரிவித்துள்ள அவர், “ முதல் நாள் கையெழுத்திட்ட 5 அரசாணைகளைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா தொற்றே இனி இல்லை என்கிற சூழ்நிலையை உருவாக்கத் தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கியுள்ளது.

கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பரவாமல் தடுப்பது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்கும் இரண்டு குறிக்கோள்களைத் தமிழக அரசு முழுமையாக முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது.

முதல் அலையைவிட மோசமாக தற்போது இந்த கிருமி உருமாறியுள்ளது. இளைஞர் மற்றும் குழந்தைகளை இந்நோய் கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் நுரையீரலைப் பாதிக்கிறது. வேறு ஏதாவது நோய்ப் பாதிப்பு இருந்தவர்கள் மரணம் அதிகரிப்பு என்பது மாறி வேறு நோய் எதுவும் இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..

தற்போது நோய்த்தொற்று பாதிப்பது மோசமாக உள்ளது. உடல் வலுவை இந்நோய் இழக்கச் செய்கிறது. வடமாநிலங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் தகவல் அச்சம் தரக்கூடியதாக உள்ளது. அந்த அளவுக்குத் தமிழகம் பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதலைத் தந்தாலும் குறிப்பாக 10 மாவட்டங்களில் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளது.

தினம்தோறும் 25000க்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். அப்படி அதிகரித்தால் நோயைக்கட்டுப்படுத்துவது மருத்துவத்துறைக்கு மாபெரும் சவாலாகப் போய்விடும்.

இதுதொடர்பாக நான் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஊரடங்கை அமல்படுத்தாமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த 14 நாட்கள் மக்கள் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பலாம். கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் வைரஸ் தொற்றை அழிக்க முடியாது என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். வீட்டிலேயே இருங்கள், முகக்கவசம் அணியுங்கள், கிருமி நாசினியை பயன்படுத்துங்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரியுங்கள். பழங்கள் காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். சிறு அறிகுறி தெரிந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

பயம் வேண்டாம். இது கஷ்டமான காலம் தான்; ஆனால் கடக்க முடியாத காலமல்ல. நோய் நாடி அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் நோயைக் குணப்படுத்தி விடலாம். நேற்று நடந்த மருத்துவர்கள், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் அதிகாரிகளிடம் கொரோனா குறித்த உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். கொரோனா குறித்த முழு உண்மையை அறிந்து அதை நேருக்கு நேர் சந்திக்க நான் எண்ணியுள்ளேன்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு அவற்றைக் கடைப்பிடிக்கும்படி பொதுமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

சனி 8 மே 2021