மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்

ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்

எதிர்க்கட்சித் தலைவரைக் கூட தேர்ந்தெடுக்க முடியாமல் அதிமுக மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்விக்குப் பின் தங்களது நெருங்கிய வட்டாரத்தில் வெவ்வேறு விதமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராக இருந்து தினந்தோறும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சூடாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்து வந்த ஜெயக்குமார், இப்போது அதிமுக தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

அமைச்சர் ஜெயக்குமாரின் தோல்வி அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னையிலுள்ள ராயபுரம் தொகுதியில் 1991 இல் போட்டியிட்டு வென்ற ஜெயக்குமார், 1996 இல் தோல்வி அடைந்தார். அதன் பின் 2001, 2006, 2011, 2016 என அனைத்து தேர்தல்களிலும் ராயபுரத்திலேயே நின்று வென்றார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமார் இருமுறை அமைச்சர், ஒருமுறை சபாநாயகர் என்று அதிமுகவில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்பவர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ஜெயக்குமார், ‘கொளத்தூர் தொகுதியை விட்டுவிட்டு என் தொகுதியில் வந்து ஸ்டாலின் போட்டியிடத் தயாரா?அவரை தோற்கடித்துக் காட்டுகிறேன்’என்று சவால் விட்டார். இதற்கு ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், “இந்தத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டாம். திமுகவின் ஒரு சாதாரண தொண்டரை நிறுத்தி ஜெயக்குமாரை தோற்கடிப்பேன்’ என்று பேசினார்.

அதன்படியே அரசியலுக்கு அவ்வளவாக தொடர்பில்லாத தியேட்டர் ஓனர் ஐ டிரீம் மூர்த்தி என்பவரை திமுக வேட்பாளராக ராயபுரம் தொகுதியில் நிறுத்தினார் ஸ்டாலின். அவர் 19 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமாரைத் தோற்கடித்தார்.

தேர்தலுக்காக தீவிரமாக செலவு செய்த ஜெயக்குமார், தான் இத்தனை வாக்குகள்

வித்தியாசத்தில் தோல்வி அடைவோமென்று எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவு வந்தவுடன் அமைதியாக இருந்தார். சில நாட்களுக்குப் பிறகே தனக்கு நெருக்கமான சிலருடன் தேர்தல் முடிவுக்குப் பிறகான நிலைமை பற்றி மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஜெயக்குமாருக்கு நெருக்கமான அதிமுகவினர் சிலரிடம் இதுகுறித்துப் பேசியபோது,

“தோல்வி கூட ஜெயக்குமாரை பெரிதாக வாட்டவில்லை. ஆனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயக்குமாரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சோ, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியோ தொடர்புகொள்ளவில்லை. ஆட்சியில் இருந்தபோது அடிக்கடி ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு , செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுகவின் நிலைப்பாடு பற்றி தெரிவிப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து எதிரிகளைப் பந்தாடுவார் ஜெயக்குமார். எடப்பாடியின் பேச்சைக் கேட்டுதான் சசிகலா, ஸ்டாலின் ஆகியோரை அளவுக்கு மீறி விமர்சித்தார். ஆனால் இப்போது அவரிடம் எடப்பாடியும், பன்னீரும் ஒரு வார்த்தை கூட அழைத்துப் பேசவில்லை. இது ஜெயக்குமாருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமாருக்கு இனிமேல் தனக்கென பெரிதாக எதுவும் எதிர்பார்ப்பு இல்லை, தன் மகன் ஜெயவர்தனை அரசியலில் ஆளாக்க வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. அதுபற்றிதான் இப்போது தனது அரசியல் நண்பர்களிடமும், அரசியல் சாராத நண்பர்களிடமும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தில்தான் ஈபிஎஸ், ஓபிஎஸ் யாரையும் அவர் தேடிச் சென்று பார்க்கவில்லை. வளர்மதி உள்ளிட்டோர் சேலம் போனபோது கூட ஜெயக்குமார் அங்கே செல்லவில்லை. இப்போதைய அவரது இலக்கு ஜெயவர்தனின் அரசியல் எதிர்காலம்தான்”என்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் இனி முக்கிய முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

-வேந்தன்

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 8 மே 2021