மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி: அமைச்சர் மா.சுப்ரமணியன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முன்னாள் சென்னை மேயர் மா.சுப்ரமணியன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று காலை அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். கொரோனா சிகிச்சை வார்டுக்கு சென்றவர், அங்குள்ள வசதிகள்,சிகிச்சை தொடர்பாகக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மா.சுப்ரமணியன் கூறுகையில், “ஸ்டான்லி மருத்துவமனை தற்போது 1500 படுக்கைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் நேற்றுதான் பொறுப்பேற்றார் என்றாலும், அதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, மக்களைக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். வரும் 15ஆம் தேதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 750 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமின்றி மேலும் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர்களால் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் .

முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை போன்று மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும்” என்றார்.

தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கொரோனாவுக்கு இலவசமாகச் சிகிச்சை பெறுவது தொடர்பாக இன்று மாலை முழு தகவலுடன் அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்படாது. முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும். தொடக்க நிலை பாதிப்பில் உள்ளவர்களுக்குச் சித்தா போன்ற ஆயுர்வேத முறையிலும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வு போன்று தினசரி ஆய்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 8 மே 2021