மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

துரைமுருகன் துறை மாறிய மர்மம்!

துரைமுருகன் துறை மாறிய மர்மம்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து சீனியர்களுக்கு அதிருப்தி நிலவி வருவதாக ஆளுங்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மின்னம்பலத்தில் ஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு என்ற தலைப்பில் நேற்று (மே 7) காலைப் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், ‘ஒரு வேளை துரைமுருகன் போல தலைவரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்திருந்தால் நாம் கேட்ட துறைகள் கிடைத்திருக்குமோ என்னவோ?”என்று சீனியர்கள் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தோம்.

அப்படி என்ன நடந்தது? துரைமுருகன் எப்படி தன் துறையை மாற்றிக் கொண்டார்? திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.

துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. ஓரிரு நாட்கள் துரைமுருகனோடு தலைவர் ஸ்டாலின் பேசாமல் கூட இருந்ததுண்டு. என்னதான் துரைமுருகன் மீது ஒரு சில விஷயங்களில் வருத்தம் இருந்தாலும் அவரது சீனியாரிட்டியை மதித்து, அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உரிய மரியாதையைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஸ்டாலின்.

மே 7ஆம் தேதி பதவியேற்பு நாளுக்கு முன்பு மே 6 ஆம் தேதி அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியாக வேண்டும். அந்த நிலையில் துரைமுருகனை தனது வீட்டுக்கு அழைத்தார் ஸ்டாலின். மே 6 ஆம் தேதி காலை துரைமுருகனும் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு...தான் தயார் செய்த அமைச்சரவைப் பட்டியலை பொதுச் செயலாளர் என்ற முறையிலும் மூத்தவர் என்ற முறையிலும் துரைமுருகனிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

‘அண்ணே இதை பாருங்க. பாத்துட்டு சொல்லுங்க’ என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

பட்டியலை விறுவிறுவென படித்த துரைமுருகன், ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க. இது ஒரு முன்மாதிரியான அமைச்சரவைப் பட்டியலா இருக்கும். ஆனா...’என்று இழுத்துள்ளார்.

‘சொல்லுங்கண்ணே...’என்று ஸ்டாலின் கேட்க, ‘இந்தப் பட்டியல்ல எனக்கு நீர்ப்பாசனம் போட்டிருக்கீங்க. எனக்கு கனிமம் சுரங்கத்துறை கொடுத்துடுங்க. இந்த ரெண்டையும் கொடுத்தீங்கன்னா திருப்தியாகிவிடுவேன்’என்று துரைமுருகன் சொல்ல, உடனே மறு பேச்சின்றி, ‘சரிண்ணே அப்படியே செஞ்சிடுவோம்’என்று சொல்லி, அந்தப் பட்டியலை உடனே மாற்றி மீண்டும் டைப் செய்து எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு பட்டியல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

சரி... அந்த கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் வேறு யாரிடமிருந்து எடுத்து துரைமுருகனுக்கு தரப்பட்டது?

ஊரகத் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தா.மோ.அன்பரசனிடம்தான் இந்த கனிமங்கள் சுரங்கத்துறை முதலில் கொடுக்கப்பட்டது. துரைமுருகன் நேருக்கு நேராக ஸ்டாலினிடம் பேசியதன் காரணமாக அது துரைமுருகனுக்குத் தரப்பட்டுள்ளது.

வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 8 மே 2021