மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

பகுதி 12: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 12: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

வளமான தமிழகத்தை எப்படி உருவாக்கலாம்? ஒரு கனவுத் திட்டம்!

தமிழகத்துக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி... இப்போது தேவையானது, மக்களின் வாழ்நிலையை உயர்த்த அடிப்படையான தொழிற்துறை உற்பத்தி பெருக்கமும், அதை அடைய தேவையான தொழில்நுட்பங்களும், இவற்றுக்கு மற்ற நாடுகளைச் சார்ந்து வாழும் சூழலை மாற்றி சுயமான வளர்ச்சியை நோக்கி நகர்வதும்.

இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் இறக்குமதி செய்து பொருள் உற்பத்தி செய்து விற்று வாழும் இந்திய முதலாளிகள் இவற்றை வைத்துள்ள நாடுகளுடனும் பெருநிறுவனங்களுடனும் சேர்ந்துகொண்டு இந்தியாவை அடகு வைத்து இந்திய மக்களை ஒட்ட சுரண்டி, ஓட்டாண்டியாக்கத் துணைபோவார்களே ஒழிய, சுயமாக வளர, வாழ தேவையான திசையில் நிச்சயம் பயணிக்க துணிய மாட்டார்கள். அதற்கான சமூக வளர்ச்சியையும் பொருளாதாரக் கட்டமைப்பையும் இந்தியா கொண்டிருக்கவில்லை.

சுயசார்பு (ஆத்மநிர்பார் பாரத்) எனப் பேசி பொருளாதாரப் போட்டி நிலவும் உலகச் சூழலைப் பயன்படுத்தி அம்பானிக்கும் அதானிக்கும் தொழில்நுட்ப சுயசார்பை அடைய அரசு உழைத்தாலும், சீனாவின் வளர்ச்சியில் பாடம் கற்றுக்கொண்ட அமெரிக்கர்கள், இவர்களுக்குத் தொழில்நுட்பத்தைத் தரமாட்டார்கள். அப்படியே பெற்றாலும் அதை வளர்த்தெடுத்து சுயசார்பை நோக்கி இந்திய முதலாளிகள் நகர மாட்டார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு இந்தியாவில் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவை மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் காணாமல் இன்றும் பிறரை சார்ந்திருக்கும் நிலையே இதற்கு ஆதாரம்.

அதுமட்டுமல்லாமல் பொதுத்துறை தனியார் கூட்டு (Public Private Partnership, PPP - பொதகூ) என்ற பெயரில் மக்களின் சொத்தான, பொதுத்துறை நிறுவனங்களை தங்களுக்குச் சொந்தமானதாக மாற்றி, மக்கள் சொத்தை கொள்ளையிடுவது மட்டுமல்லாமல், அதே தொழில்களைக் கொண்டு அந்நிய நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு மக்களை மேலும் சுரண்டி வருகிறார்கள்.

ஆதலால் இவர்களால் ஒட்ட சுரண்டப்படும் இந்தக் கொடுங்கோன்மையில் இருந்து மீள விரும்பும் மக்கள்தான் சுயசார்பான பொருளாதார திசையில் பயணிக்க முயல்வார்கள். ஆதலால், அவர்களால் உருவாக்கப்படும் அரசின் முன்முயற்சியிலேயே இது நடைபெறும் சாத்தியம் உண்டு.

தமிழக மக்களும் அரசும் அவர்கள் செல்லும் திசைக்கு மாறான பொருளாதாரப் பாதையை வகுத்துக்கொண்டு இந்த இன்னல்களில் இருந்து விடுபட வேண்டும்.

இந்தப் புதிய தொழில்நுட்பங்களைக்கொண்டு முதலில் சந்தையைக் கைப்பற்றும் இவர்கள், மெல்ல தற்போது சந்தையில் இருப்பவர்களுக்குச் சந்தையை மறுத்து எல்லாவற்றையும் தனதாக்கிக்கொண்டு காலப்போக்கில் ஒரு சிலருக்கானதாகச் சுருக்குகிறார்கள்.

தமிழகத்தின் பாதை இதே தொழில்நுட்பத்தைக்கொண்டு சந்தையை விரிவாக்கி, எல்லோரும் பங்குபற்றிப் பலனடைய செய்து பரவலாக்குவதாகவே இருக்கிறது; இருக்கவும் முடியும்.

புதிய பொருளாதார முறைக்கு அடித்தளமாக விளங்கும் மின்சாரம், இணையம், போக்குவரத்து ஆகிய அனைத்திலும் அரசு பங்கேற்று தனியார் மக்களை சுரண்டி வறுமையில் தள்ளுவதைத் தடுத்து, கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளான உணவு (விவசாயம்), கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் பெருநிறுவனங்களின் நேரடி பங்களிப்பைத் தடைசெய்து, அது எந்த ஏற்றத்தாழ்வும் இன்றி எல்லோருக்கும் பொதுவானதாகவும் தரமானதாகவும் வழங்க வேண்டும்.

தற்போது நம்மிடம் புதிய பொருளாதார முறைக்கான எந்த அடித்தளமும் தொழில்நுட்பமும் இல்லை. இது அந்நிய நாடுகள் நம் மக்களைச் சுரண்ட வழிவகுப்பதால் இவற்றுக்குத் தடைகோருவது, தமிழகத்தைப் பின்னோக்கி இட்டுச் செல்வது மட்டுமல்ல; மக்களின் புறக்கணிப்புக்கும் ஆதரவின்மைக்கும் இட்டுச் செல்லும்.

அவர்களின் பொருட்களுக்கு நமது சந்தை தேவை. அவர்களின் தொழில்நுட்பம் நமக்குத் தேவை. ஆனால், வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது. பதிலாக, வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழக மக்களுடன் தமிழக அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அனுமதிப்பதன் மூலம் இதன் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

ஆகவே ஒன்றியம் ‘பொதகூ’ கொள்கையைப் பயன்படுத்தி பொதுத்துறையைத் தனியார்மயம் ஆக்கிவரும் நிலையில், தமிழகம் அதே கொள்கையைப் பயன்படுத்தி தமிழகத்துக்கான புதிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வைக்க வேண்டும்.

தற்போது சந்தையில் இயங்கும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய மூன்றும் அதிக லாபம் தரும் நகரங்களைக் குறிவைத்தே தமது சேவைகளைச் செய்கிறது. தங்குதடையற்ற தரமான இணைய வசதி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் செல்ல வேண்டுமென்றால் இதற்கு முன்பு மின்சாரம், தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டபோது எப்படி அரசு நிறுவனங்கள் எல்லா கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றதோ, அதேபோல தமிழகம் எல்லா கிராமங்களுக்கும் தரமான வேகமான தடையில்லா இணையத்தை வழங்கும் கம்பிவழி இணையத்தைத் தமிழகம் தொடங்கும் நிறுவனம் கொண்டு செல்ல வேண்டும்.

எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் இதனுடன் இணைக்கப்பட வேண்டும். இது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் தடையில்லா இணைய வசதியை வழங்கும்.

ஊராட்சி மன்ற அலுவலகங்கள் வட்ட - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடனும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்ட - மாவட்ட மருத்துவமனைகளுடனும், பள்ளிகள் வட்ட - மாவட்டக் கல்வி நிலையங்கள், கண்காணிப்பு அலுவலகங்களுடனும் இணைக்கப்பட வேண்டும்.

இது மக்கள் அரசைத் தேடி நகரங்களுக்குச் செல்வதற்கு மாறாக, அரசு மக்களைத் தேடி கிராமங்களுக்குச் சென்று அவர்களின் குறைகளை ஆண்டை சாதிகளின் ஆதிக்கத்தை விரைந்து களைய உதவும். அவசர மருத்துவ உதவிகள், ஆலோசனைகள் உடனடியாக மக்களுக்குக் கிடைக்கச் செய்து அவர்களின் உடல்நலத்தைப் பேணி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

மாணவர்களுக்கென தனியாக அரச செயலியை உருவாக்கி, அதில் நடைமுறை, பயன்பாடு சார்ந்து கற்கும் வகையிலான முறைகளை உருவாக்கி எல்லோருக்கும் பொதுவாகக் கிடைக்க வகை செய்ய வேண்டும். வகுப்பறையில் மட்டுமன்றி, அதற்கு வெளியிலும் கற்றல் வாய்ப்புகளை உருவாக்கும்போது மாணவர்களின் கற்றல் திறனில் உள்ள குறைகளை, வேறுபாடுகளைக் களைந்து மாணவர்களின் சராசரி திறன் மேம்பட இது உதவும்.

கிராமப் பள்ளி மாணவர்களும் வசதி குறைந்த ஏழை மாணவர்களும் இதில் பலனடையும் வகையில் நவீன தகவல்தொழில்நுட்பச் சாதனங்களைக் கொண்ட நூலகங்களை எல்லா பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில் இணையமும் இணையப் பொருட்களும் இன்றி எதுவும் இயங்காது என்ற நிலையில் எல்லா மாணவர்களுக்கும் மின்னணுவியல் அடிப்படைகளை முக்கிய பாடமாகக் கல்வியில் இணைக்க வேண்டும். மின்னணுவியல் அடிப்படை தெரியாத மாணவர்களே இல்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும்.

இந்தச் செயலி உருவாக்கத்தில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் என அனைவரும் பங்கேற்று தமது பங்களிப்பை நல்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

இது உருவாக்கும் மாபெரும் தரவுகளை (Data), செயற்கை நுண்ணறிவு கொண்டு ஆய்ந்து, மாணவர்கள் விரும்பி படிக்கும் பயிற்சி முறைகளை உருவாக்கி, தொடர்ந்து மேன்மேலும் மெருகேற்றி கிராம - நகர மாணவர்களுக்கு இடையிலான தமிழக - உலக மாணவர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் களைந்து நமது மாணவர்களின் சராசரி திறன் உலக மாணவர்களின் திறனுக்கு இணையாகக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்படி உருவாகும் திறன்மிக்க தொழிலாளர்களின் பேரவலிமை நிறுவனங்கள் இவர்களை அடிமாட்டுக் கூலிக்கு வேலைவாங்கி குறைகூலி தொழிலாளர்களாக நடத்துவதைத் தவிர்க்கும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மின்னணு மயமாக்கப்பட்டு நோயாளிகளின் அனைத்து விவரங்களும் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுவாகக் கிடைக்கும் வகையிலான இணையதளம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கி, நோயர் எங்கு சென்றாலும் மருத்துவர்கள் நோயரின் முழு மருத்துவ நிலையையும் கணக்கில்கொண்டு சரியான மருத்துவம் பார்க்க உதவ வேண்டும்.

இது உருவாக்கும் மாபெரும் தரவுகளைச் செயற்கை நுண்ணறிவுகொண்டு நமது மருத்துவ ஆய்வாளர்களும், உயிரினவியல் ஆய்வாளர்களும், அரசும் பகுத்தாய்ந்து நமது மக்களின் பொதுவான பழக்கவழக்கம், சூழல், உணவுமுறை சார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து களையவும், நோய்க்கான மருந்துகளைக் கண்டறியவும், நோய்வராமல் தடுக்கும் முறைகளைக் கண்டறியவும் வகைசெய்திட வேண்டும்.

முன்பு நகரங்களில் கிராம விவசாயிகள் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த, கலைஞர் கொண்டுவந்த உழவர் சந்தையை ஒவ்வொரு கிராமத்திலும் குளிர்பதன வசதியுடனும் இணைய வசதியுடனும் கொண்ட நவீன உழவர் சந்தைகளை உருவாக்க வேண்டும்.

அவை வட்ட, மாவட்ட உழவர் சந்தைகளுடன் இணைக்கப்பட வேண்டும். மக்களும், வர்த்தகர்களும் இந்த இணையதளங்களின் வழி உழவர்களிடம் இருந்து இணையத்தின் வழியாகப் பொருட்களை வாங்க வகைசெய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கான செயலியை உருவாக்கி அதில் அரசின் விவசாய ஆய்வு நிறுவனங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், பகுதி சார்ந்த பருவநிலையை அவர்களுக்கு அறிவிக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான விதை, உரம் போன்ற மூலப்பொருட்களை விற்போர் அவர்களை அணுகவும். நடவு, அறுவை இயந்திரங்கள் போன்ற மூலதனப் பொருட்களுக்கான சேவை வழங்குபவர்கள் அவர்களை எளிதாகச் சென்றடையவும் வழிவகை செய்ய வேண்டும்.

இது, இடுபொருள் நிறுவனங்களுக்குள் சேவையை வழங்குபவர்களுக்குள் போட்டியை உருவாக்கி, விவசாயிகளுக்கு விலை குறைந்த இடுபொருட்களையும் சேவையையும் வழங்கச் செய்யும். இது கிடைக்கப்பெறாத இன்றைய சிறு குறு விவசாயிகளைப் பெருநிறுவனங்களிடம் கொடுக்கச் சொல்லும் ஒன்றியத்தின் தீர்வுக்கு இது மாற்றாக அமையும்.

இப்படிப் பெருகும் உற்பத்தியின் காரணமாக விவசாயப் பதப்படுத்துதல், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக வழிவகுக்கும். விவசாயத் தொழிலாளர்கள், ஆலை தொழிலாளர்களாக மெல்ல மாற்றம் காண்பார்கள். விவசாயம் மேலும் நவீனமயமாகும். அதன் பலன்களை எல்லா விவசாயிகளும் அனுபவிப்பார்கள்.

அரசு உருவாக்கும் அடித்தளத்தில் இயங்கும் இவற்றை மக்களால் உருவாக்கப்படும் அரசு கண்காணித்து, கட்டுப்படுத்தி மக்களின் ஊட்டச்சத்து மிக்க உணவு தேவையை உறுதி செய்வதோடு இதன்மூலம் உருவாகும் மாபெரும் தரவுகளைக்கொண்டு நிலம், பகுதி, பருவநிலை, தேவை சார்ந்த உற்பத்தியை விவசாயிகளிடம் அரசு ஊக்குவிக்கவும், நீர்ப்பாசன திட்டங்களைச் செயல்படுத்தவும், சூரிய மின்சக்தி உற்பத்தி போன்ற மாற்றை விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கவும் மேலும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கி உற்பத்தியைப் பெருக்கவும் வழி ஏற்படும்.

நிலத்தையும், சூரிய மின்சக்தி உற்பத்தியையும், அதைக் கடத்தும் பின்னிலையத்தையும் (Grid) அதானியிடம் கொடுத்து அவர் உற்பத்தி செய்து மக்களிடமும் வெளிநாட்டிடமும் விற்று, லாபம் பெரும் ஒன்றியத்தின் திட்டத்துக்கு மாற்றாக தமிழகம், ஜெர்மனியின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

இணையத்தை எப்படி எல்லா மூலைமுடுக்கெல்லாம் அரசு கொண்டு செல்கிறதோ, அதேபோலே பின்னிலைய இணைப்புகளையும் அரசே கொண்டு செல்ல வேண்டும்.

மூலதனமும் இடமும் உள்ள மக்கள் சிலிக்கன் சீவல்களை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்து, தாமே பயன்படுத்திக் கொள்ளவும், தேவைக்கு அதிகமானதை விற்கவும், தேவைப்பட்டால் வாங்கிகொள்ளவுமான முறையைத் தமிழகம் உருவாக்கி, இதன் பலன்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இந்தக் கட்டமைப்புகளை எல்லாம் உருவாக்க தேவையான அனைத்து வன்பொருள், மென்பொருள், தகவல்தொழில்நுட்பப் பொருட்கள், மின்சார உற்பத்திக்கான சிலிக்கன் சீவல்கள் (Silicon Wafer), மின்சக்தியின் இயங்கும் வாகனங்களுக்கான சேமக்காலங்கள் (Batteries) என அனைத்தும் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

இவற்றிலெல்லாம் இன்னும் 30 ஆண்டுகளில் தன்னிறைவை அடைய குறிக்கோள்களை உருவாக்கிக்கொண்டு, இந்த உற்பத்தியைப் பெருக்க உதவும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்குவதோடு, நமது உயர்கல்வி நிறுவனங்களை இதை அடைய உதவும் நோக்கில் முடுக்கிவிட வேண்டும்.

இதற்கான தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அனைத்துத் தரப்பையும் இந்தக் கட்டமைப்பு உருவாக்கத்தில் சமமாகப் பங்கெடுக்க அனுமதித்து, அனைவரையும் போட்டியிட வைத்து அதன்மூலம் அதிக பலன்களை பெரும் உத்தியைத் தமிழகம் கையாள வேண்டும்.

தமிழக நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முன்னுரிமையும், தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப ஆய்வு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமையும் வழங்கி, நமது தன்னிறைவு குறிக்கோளை அடைய முற்பட வேண்டும்.

இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இங்கு எங்களது ஆய்வு நிறுவனங்களை அமைப்போம் என ஹுவாவெய் அறிவித்திருக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகளைத் தமிழகம் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய தொழிற்துறையான வாகன உற்பத்தி, அடுத்த சில ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை நோக்கி வேகமாக மாறி வருகிறது. இந்தத் தொழிற்துறையையும், வளரும் தகவல் தொழில்நுட்ப துறையையும் தமிழகம் இழந்துவிடாமல் இருக்க, போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, இரண்டையும் உற்பத்தி செய்ய தேவையான மின்கலங்கள் மற்றும் திறன்பேசி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் இவற்றுக்கான உற்பத்தி சங்கிலியையும் உருவாக்க வேண்டும்.

இது எதிர்காலத்தில் சுயமான தகவல்தொழில்நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்யவும் மின்கலங்களில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும் அடித்தளமாக அமையும்.

எல்லா தகவல்தொழில்நுட்பப் பொருள் உற்பத்திக்கும் அதன் அடிப்படையில் வரப்போகும் புதிய பொருளாதார உற்பத்திக்கும் அடித்தளமாக விளங்கும் சில்லுகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூழலைத் தவிர்க்கவும், மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சார்பை உடைக்கவும் உலக நாடுகள் எல்லாம் தங்களது நாடுகளில் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன.

இந்தியா, ஒரு பில்லியன் டாலர் ரொக்கப்பணம் அறிவித்து, இந்தியாவில் சில்லுகளில் உற்பத்தியைச் செய்ய நிறுவனங்களை அழைத்தது. நிலையற்ற அரசியல் சூழலையும், உற்பத்தி சங்கிலி இல்லாத சூழலையும் கணக்கில்கொண்டு எவரும் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முன்வரவில்லை.

தமிழகம் செல்லும் பாதையும் அதன் தேவையும் ஏற்படுத்தப்படும் உள்கட்டமைப்பும் இவர்களை இங்கே சில்லுகளுக்கான உற்பத்தியைத் தொடங்கும் சூழலை உருவாக்கும்.

அமெரிக்க - சீன மோதல் ஓர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வரும்போது, உலகமே இந்தக் கட்டமைப்பை நோக்கி நகரும். அப்போது தமிழகம் இதற்கான முதலீட்டை ஈர்ப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

பெருநிறுவனங்கள் செய்ய விரும்பாததை, தமிழகம் செய்ய முயலுவதால் ஒன்றியத்தின் கொள்கையில் முரண்படாமல், நோக்கத்தில் மட்டும் மாறுபடுவதால், குறைவான எதிர்ப்புடன் முன்னேற முடியும்.

இதன் பலன்கள் அனைத்தும் மக்களுக்கானதாகவும் மக்கள் பங்கேற்புடனும் செல்வதால் சந்தையில் உள்ள பெருநிறுவனங்களுடன் போட்டியிட்டு லாபகரமாக இயங்குவதோ, வளர்ச்சிப்போக்கில் அவர்களை வெல்வதோ பெரிய விஷயமாக இருக்காது.

கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் தமிழகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த உள்கட்டமைப்பு முதலீடு வேலைவாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்வதற்கான அடிப்படைகளையும் வழங்கும்.

அரசு உருவாகும் இணையம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அடிக்கட்டமைப்பில் தனியார் துறை இயங்கும்.

மின்னணு பொருளாதாரத்தின் எரிபொருளான தரவுகள் இந்த மக்களின் சொத்தாக, எல்லோரும் அதைப் பயன்படுத்தி வளரும் விதமாக வைப்பதன் மூலம் ஒரு சில நிறுவனங்களின் கையில் இவை சென்று முற்றொருமைக்கு வழிவகுத்து உற்பத்தி, சந்தை, வாடிக்கையாளர்கள் என எல்லோரையும் வதைக்கும் வாய்ப்பின்றி, சந்தையில் போட்டியும் சமமான வாய்ப்பையும் உறுதிசெய்து மக்களைக் காக்கும்.

நவீன கல்விமுறையால் உருவாக்கப்படும் திறன்மிக்க புதிய தலைமுறை இந்த அடித்தளத்தைக்கொண்டு, நமக்குத் தேவையான அனைத்தையும் நாமே உருவாக்கிக்கொண்டு யாருடைய துணையுமின்றி யாரும் நம்மை அடிபணிய வைக்க வாய்ப்பின்றி சுயசார்புடனும் சுயமரியாதையுடனும் தமிழகம் வாழ வழிநடத்தும்.

இவை எல்லாம் எந்த எதிர்ப்பும் உழைப்பும் இன்றி எளிமையாகச் செய்துவிட முடியாது. இதைச் செய்து முடிக்க எண்ணற்ற போராட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும். யாரோ உருவாக்கிய கட்சி அடித்தளத்தில் சவாரி செய்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை வரலாறு நினைவுகொள்வதில்லை. எந்த அடித்தளமும் இன்றி கட்சியையும் தனது கடுமையான உழைப்பின் மூலம் இன்றைய தமிழகத்தையும் கட்டி எழுப்பிய அண்ணாவையும் கலைஞரையும்தான் தமிழக மக்கள் நினைவில்கொள்கிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தும்பட்சத்தில் ஸ்டாலின் அவர்களில் ஒருவராக வரலாற்றில் நிலைத்து நிற்பார்.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > /

< பகுதி 3 > / < பகுதி 4 > /

< பகுதி 5 > / < பகுதி 6 > . /

< பகுதி 7 > / < பகுதி 8 > /

< பகுதி 9 > / < பகுதி 10 > /

< பகுதி 11 >

நிறைவடைந்தது

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 8 மே 2021