மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

கொரோனா: அதிகாரிகளை அலர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்

கொரோனா: அதிகாரிகளை அலர்ட் செய்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே கொரோனா தடுப்பு பணியில்  தீவிரம் காட்டி வருகிறார்.இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் அதற்கேற்ப செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அலர்ட் செய்திருக்கிறார்.

இன்று முதல்வராக பொறுப்பேற்றதும்,  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணி,  தடுப்பூசி தேவை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு,  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டிஜிபி திரிபாதி  சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.கொரோனா 2-வது அலையால் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றதுடன், இந்த சவாலை சந்தித்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை புதிய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 25,000 ஆக உள்ள நிலையில் அந்த பாதிப்பு, இரண்டு வாரங்களில் உயர வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கேற்ப மருந்துகள்,ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரிக்கும். எனவே கொரோனா நோய்த் கட்டுப்பாடு நடவடிக்கைகளையும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான  நடவடிக்கைகளையும் நாம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய முக்கியத் தேவையாக இருக்கிறது.  இறப்புகளைக் குறைத்திட கடந்த ஓராண்டாக மருத்துவத்துறை கொடுத்த அயராத உழைப்பு, அர்ப்பணிப்புடன்  தொடர்ந்திட வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

ரெம்டெசிவியர், ஆக்சிஜன் ஆகியவை போதிய அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று குறைவாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த குறியீட்டில் தமிழகம் தேசிய அளவில் முன்னிலை பெற முழுமூச்சோடு மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில்  தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்குத் தொற்று பாதிப்பை குறைத்தால் மட்டுமே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு இறப்பு  விகிதத்தைக் குறைக்க முடியும்.  இந்த பகுதியில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன்  பணியாற்ற வேண்டும்.

இந்த கூட்டமெல்லாம் நமக்கு நாமே ஆறுதல் அடைகிற கூட்டமல்ல. உண்மையை நேருக்கு நேராகச் சந்தித்தால் மட்டுமே நமது பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். எனவே அலுவலர்கள் உள்ளதை உள்ளபடியே முன்வைத்து,  இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு ஒளிவு மறைவு இல்லாமல் செயலாற்றுங்கள். புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். கொடும் தொற்றைக் குறைப்போம். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய சூழலை உருவாக்குவோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 7 மே 2021