மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

முதல்வர் பதவியேற்பு விழா: முக்கிய அம்சங்கள்!

முதல்வர் பதவியேற்பு விழா: முக்கிய அம்சங்கள்!

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றிபெற்ற திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று (மே7) காலை 9.10க்கு பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் இருக்கும் வெளிப்புற வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவுக்காக காலை 8 மணி முதலே விருந்தினர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ஆளுநர் மாளிகையை சுற்றி தமிழக போலீசார் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தியிருக்க, ஆளுநர் மாளிகையின் வாசல் முதல் மத்திய ரிசர்வ் போலீஸாரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 9 மணிக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் தனது மனைவியோடு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதவியேற்பு விழா மேடைக்கு அருகே வந்த ஸ்டாலின், சில நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்து ஆளுநருக்காக காத்திருந்தார்.

சில நிமிடங்களில் ஆளுநர் வந்ததும் வாழ்த்துகளைத் தெரிவித்த்தார். அவருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்களை ஆளுநருக்கு மரபுப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிமுகம் முடிந்ததும் மேடையேறினார்கள்.

பதவியேற்பு விழாவில் 400 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும், 500 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் வந்தாலும், ஆளுநர் மாளிகை வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏறக் குறைய 2ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இன்னும் பலர் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

அமைச்சரவை சகாக்கள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் வந்திருந்தனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஸ்டாலினுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தனது கொஞ்ச்சம் கொஞ்ச்சம் தமிழில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக முதல்வராக ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தலைமைச் செயலாளர் அழைத்தார். அதையடுத்து ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்...’ என்று உச்சரித்துவிட்டு ஸ்டாலின் நிமிர்ந்தபோது தலைவர் என்பதோடு முதல்வர் என்ற கம்பீரமும் சேர்ந்துகொண்டது. அதுவரை மாஸ்க் தாண்டிய புன்னகையோடு மகிழ்ந்துகொண்டிருந்த ஸ்டாலினின் மனைவி துர்கா, அந்த நொடி சடாரென உடைந்து கண் கலங்கிவிட்டார். ஸ்டாலின் தமிழகம் முழுதும் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில், தன் கணவரை முதல்வராக பார்க்க வேண்டும் என்று பல கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தியவர் துர்கா. அந்த வேண்டுதல் பலித்த மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டார் அவர்.

ஸ்டாலின் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். கனிமொழி தனது மகன் ஆதித்யாவோடு பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். தொலைக்காட்சி நேரலையில் கனிமொழி வந்ததை பலர் பார்த்திராத நிலையில், ‘ஏன் மேடம் பதவியேற்பு விழாவுக்கு போகலையா?” என்று அவரது அலுவலகத்துக்கே போன் போட்டு சில பத்திரிகையாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஸ்டாலினுக்கு அடுத்ததாக பதவியேற்ற அமைச்சர் துரைமுருகன் கொஞ்சம் சிரமப்பட்டுதான் மேடையேறினார். ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பதவியேற்க அடுத்து வந்த அமைச்சர் கே.என். நேரு, தன் முகக் கவசத்தை கழற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. அதற்குள் ஆளுநரும் காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து லேசான டென்ஷனாகி மாஸ்க் அணிந்தபடியே உறுதிமொழி ஏற்றார்.

அடுத்து வந்த ஐ.பெரியசாமி மாஸ்க் அணியாமல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன் பின் அமைச்சர் பொன்முடியும் மாஸ்க் அணியாமல் பதவியேற்றார். பொன்முடியின் வாய்க்கும் ஒலிபெருக்கிக்கும் மிகக் குறைந்த இடைவெளியே இருப்பதை உணர்ந்த ஆளுநரின் செயலாளர் அவரிடம் சொல்லப் போக, அவரை சைகை காட்டி தடுத்துவிட்டார் ஆளுநர். அதன் பின் மாஸ்க் அணியாமல்தான் பலரும் பதவிப் பிரமாணம் ஏற்றனர். கொரோனா விதிமுறைகளை அமைச்சர்களே பின்பற்றவில்லை என்ற குரல் ஒலித்தது.

அதிகாரிகள் வட்டாரத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தபோது இப்போது கோட்டையில் இருக்கும் 32 துறைகளின் செயலாளர்களில் யாரையும் பதவியேற்பு விழாவில் பார்க்கமுடியவில்லை. அடுத்த தலைமைச் செயலாளர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் இறையன்பு ஐ.ஏ.எஸ், முதல்வரின் செயலாளர்கள் என்ற பட்டியலில் இருக்கும் உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர். திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனது ஐபேக் டீம் முக்கிய அதிகாரிகளோடு பதவியேற்பு விழாவுக்கு வந்து கலந்துகொண்டார்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி என்பதால் மேடைக்கு ஏ.சி. ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களுக்கு பெரிய பெரிய ஃபேன்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் வெயில் அதிகமாகி ஏசி போதாமல் ஸ்டாலினுக்கு வியர்த்துவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது பலத்த கைதட்டல் சத்தம் எழுந்தது. அதன்பின் அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றபோது சீரான கைதட்டல் ஒலிகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் பள்ளிக் கல்வி அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றபோது மீண்டும் பலத்த கைதட்டல்கள் எழுந்து ஒரு சில நிமிடங்கள் நீடித்தன. ஆளுநரே இதைக் கண்டு சற்று புன்னகைத்து அன்பில் மகேஷை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார்.

பதவியேற்பு விழாவின் ஏற்பாடுகளை இரண்டு நாட்களாக டிஐஜி சந்திரசேகர்தான் முன்னின்று ஏற்பாடுகளை செய்துள்ளார். சிறப்பு விருந்தினர்களுக்கான இடம், அரங்க அமைப்பு பதவியேற்பு விழாவை அங்குலம் அங்குலமாக ஒருங்கிணைத்திருந்தார் டிஐஜி சந்திரசேகர்.

சுமார் ஒருமணி நேரம் நீடித்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின் ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து தொடங்கியது.

-வேந்தன்

.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 7 மே 2021