மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை!

ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை!

தெலங்கானாவில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஊரடங்கு விதிக்கப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை முடிவதற்குள்ளேயே நாட்டில் மூன்றாவது அலை வருவதை தவிர்க்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, கேரளாவில் 8 நாள், ராஜஸ்தானில் 15 நாட்கள் என அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று(மே 6) தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவே.

நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர், “மாநிலத்தில் ஊரடங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. ஊரடங்கு அமலில் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த மாதிரி தெரியவில்லை. நமது மாநிலத்தில், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 250,000-300,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேறினார்கள். அதுபோன்று இந்தமுறை நடக்கக் கூடாது. மாநிலத்தில் 6,144 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு விதிக்கப்பட்டால் மற்ற மாநிலங்களிலிருந்து வந்து அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் செயல்படாமல் நின்றுவிடும்.

ஊரடங்கு அமல்படுத்தினால், பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கிற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால், அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை கொண்ட பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை மைக்ரோ-லெவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசி தெலங்கானா மாநில முதல்வர், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை உடனடியாக மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 பேர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு கணிசமான அளவில் உயர்ந்து வந்தாலும், ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 7 மே 2021