மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

திரு.மு.க.ஸ்டாலின் கால் பதிக்கும் தடம்!

திரு.மு.க.ஸ்டாலின் கால் பதிக்கும் தடம்!

மு.இராமனாதன்

வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காத்திருப்பின் காலத்தில் ஒரு அமெரிக்க நண்பர் என்னை அழைத்தார். எங்கள் உரையாடல் குசலம், குடும்பம், கொரோனாவைத் தாண்டி அரசியலுக்குள் புகுந்தது. 'யார் ஜெயிப்பார்கள்?' என்று கேட்டார் நண்பர். 'கருத்துக் கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருக்கின்றன' என்று சொன்னேன். நண்பர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. 'அப்படியானால் சுடலைதான் அடுத்த முதல்வரா?' என்றார் நண்பர்.

பெயரில் என்ன இருக்கிறது?

எனது அதிர்ச்சிக்கு மூன்று காரணங்கள். மு.க.ஸ்டாலின் சில காலம் முன்புவரை ஒரு சிலரால் சுடலை என்ற பெயரில் பகடி செய்யப்பட்டார். எண்ணற்ற மீம்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். எல்லாப் பெயர்களிலும் அரசியல் இருக்கிறது. முன்பெல்லாம் பெரிய பத்திரிகைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளில் பணிப்பெண்களின் பெயர்கள் முனியம்மா என்றோ, ராக்கம்மா என்றோ இருக்கும். வனஜா என்றோ கிரிஜா என்றோ இராது. வண்டிக்காரரின் பெயர் பாண்டி, ரிக்‌ஷாக்காரரின் பெயர் கபாலி. அவை விஸ்வநாதன் என்றோ பட்சிராஜன் என்றோ இராது. பழைய தமிழ்த் திரைப்படங்களில் கொள்ளைக்கூட்டத் தலைவனின் அருகில் நிற்கும் குட்டைப் பாவாடைப் பெண்களின் பெயர்கள் ரீட்டா அல்லது ஸ்டெல்லாவாக இருக்கும். சாந்தி அல்லது வசந்தியாக இராது. இந்தப் பெயர்கள் ஒருவரின் படிநிலையை ஒரு சட்டகத்துக்குள் வைக்கிறது. இதற்குள் சிக்கக் கூடாது என்பதற்காகவோ, என்னவோ தன் மகனுக்கு ரஷ்யத் தலைவரின் பெயரைச் சூட்டினார் கருணாநிதி. எப்படிப் பெயர் வைத்தாலும் நாங்கள் உங்களைக் கட்டம் கட்டுவோம் என்கிற சிலரின் முயற்சிதான் இந்தச் சுடலை என்னும் பெயர் சூட்டல். ஸ்டாலின் இந்தப் பகடியைப் பொருட்படுத்தவில்லை.

ஒருவரது கொள்கைகளை விமர்சிக்கலாம். நிர்வாகத் திறன் அல்லது திறன் இன்மையை விமர்சிக்கலாம். ஆனால், பெயர் சூட்டிப் பகடி செய்யும் போக்குக்குத் தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. வடக்கே பப்பு விற்றது போல் தெற்கே சுடலை விற்கவில்லை. அவர்கள் கடையைக் கட்டிக்கொண்டார்கள். ஆனால், என் அமெரிக்க நண்பரின் நினைவில் அந்தப் பெயர் நிலைத்திருந்ததுதான் எனது அதிர்ச்சிக்கான முதல் காரணம்.

அடுத்ததாக, நண்பரை நான் பள்ளிப் பருவத்திலிருந்தே அறிவேன். அவர்தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி. நண்பரின் அப்பா மளிகைக் கடைக்கும் பெட்டிக் கடைக்கும் இடைப்பட்ட ஒரு கடை வைத்திருந்தார். இட ஒதுக்கீடு நண்பருக்குத் தொழிற்கல்வியின் வாயிலைத் திறந்து கொடுத்தது. அவரால் அரசின் உதவித் தொகையையும் பயன் கொள்ள முடிந்தது. இப்போது அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவரும் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள். நண்பரின் படிநிலை உயர்ந்துவிட்டது. ஆகவே ஒரு அரசியல் தலைவரைப் பட்டப்பெயர் சூட்டிப் பகடி செய்கிற தகுதி தனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்.

மூன்றாவதாக, சுடலை மாடன் என்பது நெல்லை மாவட்டத்தில் ஒரு காவல் தெய்வத்தின் பெயர். எனது நண்பருக்கும் முகவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஒரு காவல் தெய்வத்தின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். நண்பர் கிறிஸ்தவப் பெயரைப் போல் ஒலிக்கும் விதமாக அதைச் சுருக்கிக்கொண்டிருக்கிறார். அவர் சொந்தமாக நடத்தும் மென்பொருள் ஆலோசனை நிறுவனத்துக்கும் அதே பெயர்தான். சுடலை என்று பகடி செய்வது தன்னையே பகடி செய்து கொள்வதற்குச் சமம் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் தமிழர்களுக்கு அது தெரிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் சுடலை எனும் பகடியைப் புறக்கணித்தார்கள். அவர்கள் தமிழ் அடையாளத்துக்கான போரைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்கள். அதற்கான அடையாளம் ஒன்று, தேர்தல் முடிவு வெளியான அன்றே காணக் கிடைத்தது.

வாழ்த்தும் நன்றியும்

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த மே 2ஆம் நாளன்று மாலை பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். நல்ல பண்பாடு, நாட்பட்ட பண்பாடு. நெட்டிசன்கள் அப்படிக் கடந்து போகவில்லை. ஸ்டாலின் தனது துவிதர் செய்தியில் மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், கூட்டாட்சியின் வாயிலாக நாம் கோவிட்டைப் புறம்காண்போம் என்றும் சொல்லியிருந்தார். இதன் மூலம் ஸ்டாலின் மாநில உரிமைகளைச் சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் எழுதியிருந்தனர். ஆனால் பலரும் ஒன்றைக் கவனிக்கவில்லை. பிரதமரின் துவிதர் செய்தி இப்படித் தொடங்கியது: "திரு.மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்துகள்".

பொதுவாக வட இந்தியத் தலைவர்கள் மரியாதை விளியாகப் பெயருக்கு முன்னால் ஸ்ரீ என்றோ பெயருக்குப் பின்னால் ஜி என்றோ சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், தமிழர்கள் திரு என்கிற முன்னொட்டைப் பயன்படுத்துவார்கள். பிரதமர் மோடியும் தமிழர்களின் வழக்கத்தைப் பின்பற்றி 'திரு.மு.க.ஸ்டாலின்' என்று தனது வாழ்த்துச் செய்தியைத் தொடங்கியிருந்தார். ஆனால் தமிழர்கள் ஸ்ரீ-யைத் திரு-வாக மாற்றிய கதை நெடியது.

ஸ்ரீ திருவான கதை

1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி, பெயர்களுக்கு முன்னால் ‘ஸ்ரீ’ எனும் முன்னொட்டைப் பயன்படுத்த வேண்டுமென்று ஆணையிட்டது. 1940இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார், ‘ஸ்ரீ’ எனும் வடசொல்லுக்குப் பதிலாகத் ‘திரு’ எனும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போதைய அரசு செவி சாய்க்கவில்லை.

1967இல் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் புனித ஜார்ஜ் கோட்டையில் 'தமிழக அரசு தலைமைச் செயலகம்' என்கிற பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார் அண்ணா. அரசின் இலச்சினையின் கீழ் அமைந்திருந்த 'சத்யமேவ ஜெயதே' என்பதை 'வாய்மையே வெல்லும்' என்று மாற்றினார். இலச்சினையின் மேலே இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்பதைத் ‘தமிழக அரசு’ என்றாக்கினார். 1967 ஜூலை 18 அன்று சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 'சென்னை மாகாணம்' என்கிற பெயர் 'தமிழ் நாடு' என்று மாறியது.

இதன் தொடர்ச்சியாக அலுவல்ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பல வடசொற்கள் தமிழாக மாறின. அக்கிராசனர் தலைவரானார், காரியதரிசி செயலரானார், பொக்கிஷதார் பொருளாளரானார். பிரசங்கம் சொற்பொழிவானது, மகாஜனம் பொதுமக்களாகினர். நமஸ்காரம் வணக்கமாகியது. மேலும் கிருஹப்பிரவேசம் புதுமனைப் புகுவிழாவானது. கல்யாணப் பத்திரிகை திருமண அழைப்பிதழாக மாறியது.

இந்த வரிசையில் ஸ்ரீ - திருவாகவும், ஸ்ரீமதி - திருமதியாகவும் குமாரி - செல்வியாகவும் மாற்றம் பெற்றது. எல்லா அரசு ஆவணங்களிலும், தமிழிலும் ஆங்கிலத்திலும், திருவும் திருமதியும் செல்வியும் வலம் வரத் தொடங்கினர்.

ஆயினும் வட இந்தியத் தலைவர்கள் பல காலமாகத் தமிழகத் தலைவர்களையும் அதிகாரிகளையும் ஸ்ரீ என்கிற விளியோடுதான் அழைத்து வந்தார்கள். பிரதமர் மோடி அந்த வழக்கத்தை மாற்றிவிட்டார். 'திரு.மு.க.ஸ்டாலின்' என்கிற விளிக்காக பிரதமர் நமது நன்றிக்குரியவர் ஆகிறார்.

என்றாலும் தமிழர்களுக்கு ஸ்ரீ-யின் மீது இன்னும் மோகம் இருக்கிறது. நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார்: "துன்பம் என்னவெனில், சுட்ட கருவாட்டு வாசம் பிடிக்கின்ற எங்களூர் சுடலை மாடன்கள் எல்லாம் தற்போது ஶ்ரீ சுடலை மாடன்கள்."

தெய்வங்களின் முன்னால் ஸ்ரீ-யைப் பதலீடு செய்ய இன்னும் கொஞ்சம் காலமாகலாம். ஆனால் மனிதர்களுக்கு முன்னால் திரு என்கிற முன்னொட்டு தீர்க்கமாக இடம் பெற்றுவிட்டது. கடந்த ஐம்பதாண்டு காலமாகப் போடப்பட்ட தடத்தின் விளைவு அது. அதில்தான் புதிய முதல்வர் காலூன்றி நடக்கப் போகிறார். அந்தத் தடத்தில் சுடலை வியாபாரம் நடத்த முடியாது. அந்தத் தடம் சுயமரியாதைத் தடம். அந்தத் தடம் சமூகநீதித் தடம்.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected].com)

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 7 மே 2021