மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

பகுதி 11: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 11: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

தமிழகம் எதிர்கொள்ளும் சவால்களும் எதிர்த்து நிற்கும் சாத்தியங்களும்!

கடந்த பத்து பகுதிகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சாரம் தொகுப்பாக... தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள 5ஜி, செயற்கை நுண்ணறிவு (AI), Cloud Computing, மின்னணு நாணய உருவாக்கம் போன்ற புரட்சிகர மாற்றங்கள், புதிய பொருளாதார உற்பத்தி முறையை நோக்கி உலகை நகர்த்தி வருகின்றன.

இதுவரையிலும் சரி, தற்போதும் சரி... இந்தத் தொழில்நுட்பங்களிலும், இந்தப் பொருட்களின் சந்தையிலும், உலக அரசியலிலும் மேலாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், இவற்றில் இணையான வளர்ச்சியை அடைந்திருக்கும் சீனாவுக்கும் இடையிலான சந்தைப் போட்டி இணைந்து செல்ல முடியாத அளவுக்கு முரண்பட்டு, அமெரிக்காவின் ஒருதுருவ அரசியலுக்கும், அதில் உடைப்பை ஏற்படுத்தி பங்கிட்டுக்கொள்ள விரும்பும் சீனாவின் பல்துருவ அரசியலுக்குமான முரண்பாடாக மாறி நிற்கிறது.

2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பில் தொடங்கி, 2020 கொரோனா பெரும்தொற்று காலத்தில் வேகமாக உச்சத்தை அடைந்திருக்கும் இந்தியப் பொருளாதார மாற்றங்கள், இந்தியாவின் இன்றைய தேவையில் இருந்தோ, இயல்பான வளர்ச்சியினூடாகவோ வந்தது அல்ல.

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தகவல் தொழில்நுட்பப் பொருட்களுக்கான சந்தை தேவையில் இருந்தும், இந்தத் தொழில்நுட்பங்களில் இணையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் சீனாவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்தி, ஆசியாவைக் கட்டுப்படுத்த உதவும் பூகோள அரசியல் தேவைக்காகவும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

இந்தத் தேவைகளை புதிய மின்னணு பொருளாதார முறைக்கான எரிபொருள் உற்பத்தியை (சூரிய மின்சார உற்பத்தி) அதானிக்கும் தரவுகளின் உற்பத்தியை (Data Fuel) அம்பானிக்கும் கொடுத்து, அமெரிக்கத் தொழில்நுட்பத்துக்கான இந்தியச் சந்தையை நேர்மையற்ற முறையில், நயவஞ்சகமாக தந்திரமான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா அடைந்திருக்கிறது.

தொண்ணூறுகளைப் போல இது உற்பத்தியைப் பெருக்கி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக அல்லாமல் விவசாயம், வணிகம், தொழிற்துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒரு சிலரிடம் குவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இந்த நேர்மையற்ற நரித்தனமான ஒன்று குவிப்புக்கு, மக்களைப் பிரித்து ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி, ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு சாத்தியமற்றதாக்கும் பார்ப்பனிய எதேச்சதிகார ஒன்றை இந்து தேசிய அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூரிய மின்சக்தி உற்பத்தியும் இணையதள வர்த்தக முறையும் விவசாயிகளையும், பொருள் உற்பத்தியாளர்களையும், வணிகர்களையும், தொழிலாளர்களையும் நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களைக் கொண்டும் பெருநிறுவனங்களைக் கொண்டும் பதிலீடு செய்கிறது.

இதிலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் மாற்று எதையும் வழங்காமல் அவர்களின் மீது பொருளாதார முற்றொருமையையும், ஒற்றை இந்துத்துவ பார்ப்பனிய கலாச்சார அரசியலையும் திணிக்கும் இந்த ஒன்றிய பார்ப்பனிய ஒருமுகத்துக்கும் பல்தேசிய கலாச்சாரத்தைக் கொண்ட மாநிலங்களின் பன்முகத்துக்குமான முரண்பாடாக மாறி வருகிறது.

பணமதிப்பிழப்பில் தொடங்கிய இந்தப் பொருளாதார ஒன்று குவிப்பு தமிழகத்தின் பாதையான ஜனநாயகப்படுத்தப்பட்ட பரவலான வளர்ச்சியைக் கேள்விக்குட்படுத்தி வருகிறது. இது சுதந்திரத்துக்குப் பிறகான அரசியல் கலாச்சார ரீதியிலான ஆதிக்கத்தைப் போலல்லாமல் அடிப்படையில் சமூக பொருளாதார மேலாதிக்கமாக இருப்பதால், இது தமிழகத்தின் சமூக பரவலாக்கத்துக்கும் ஒன்றியத்தின் குறிப்பிட்ட சாதிகளுக்குள் இந்தியாவின் அரசியல் பொருளாதாரப் பலன்களைச் சுருக்குவதற்குமான முரண்பாடாக வெளிப்பட்டு வருகிறது.

இந்த அரசியல் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தமிழகம் பொருளாதார ரீதியாக தொழிற்துறை மற்றும் வணிக வாய்ப்புகளை இழந்து தொழிலாளர்களின் வேலையைப் பறித்து வருகிறது. அரசியல் ரீதியாக மாநில உரிமைகளை இழந்து வருகிறது. சமூக ரீதியாக உணவு, கல்வி, மருத்துவம் போன்ற சமூக நலத்திட்டங்களை மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாமல் ஆக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கிறது.

தமிழகம் இந்தப் பார்ப்பன அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு திமுக தலைமையில் ஓரணியில் நின்று இந்தச் சூழலை எதிர் கொண்டது, அதன் சமூக வளர்ச்சியை அரசியல் முதிர்ச்சியைக் காட்டியது. இதற்கு எதிரான எட்டப்பர்களின் அரசியல், தமிழகம் இன்னும் வளர்ந்து இந்தப் பிற்போக்கு சக்திகளை இல்லாமல் ஆக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டியது.

மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு எதிராக மாநில சுயாட்சியையும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதை எதிர்த்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூகநலத் திட்டங்களை மேலும் விரிவாக்கும் திட்டங்களையும் திமுக முன்வைத்து இந்தச் சீரழிவு அரசியலுக்கு எதிரான வலுவான அரசியல் மாற்றை முன்வைத்திருக்கிறது.

தமிழகத்தின் உடனடி தேவை, இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவது. திமுக ஆட்சி நிச்சயம் அதைச் செய்யும். ஏனெனில் இந்தச் சமூகநல அரசியலின் தொடர்ச்சியில்தான் தமிழகத்தின் இருப்பும் திமுகவின் இருப்பும் உள்ளதால் இதைத் தடுத்து நிறுத்தி சமூகநலத் திட்டங்களை முன்னெடுக்கும். அதற்குத் தடையாக உள்ள ஒன்றிய - மாநில நிதி பகிர்வு போன்ற பிரச்சினைகளுக்காக நிச்சயம் போராடும்.

மாநில சுயாட்சிக்கான அரசியல் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் முன்னெடுத்து வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு. தமிழகம் பெற்றிருக்கும் இந்த அரசியல் வெற்றியை இழக்காமல் அரசியல் குழப்பம் விளைவிக்க இடம் கொடுக்காமல் ஒன்றியத்தின் மக்கள் விரோத கொள்கைகளைச் சட்டத்துக்கு உட்பட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியா நிர்வாக ரீதியாக எதிர்கொண்டு தோல்வியடைய வைத்ததைப்போல இதைக் கையாள்வதே இப்போதுள்ள தெரிவு.

அதேநேரம் மாநில சுயாட்சிக் கோரிக்கையைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி மக்களிடம் விழிப்புணர்வையும் அரசியல் ஒன்றுதிரட்டலையும் செய்துகொண்டு இந்த அரசியலை முன்னெடுக்கும் நேரத்துக்குத் தயாராக தமிழகம் காத்திருக்க வேண்டும்.

பார்ப்பனியம் பயணிக்கும் பாதை நீடித்து நிலைத்திருக்கும் பாதை அல்ல. கொரோனா பெரும்தொற்றின் காரணமாக இந்தியத் தொழிற்துறை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து வருகிறார்கள். அதேநேரம் ஒன்றியம், கூட்டுக்களவாணிகளுக்காக வேகமாக மின்னணு பொருளாதார முறையை ஊக்குவித்துச் செயல்படுத்தி, அந்த தொழில்களையும் தொழிலாளர்களையும் பெருநிறுவனங்களைக் கொண்டும் இயந்திரங்களைக் கொண்டும் பதிலீடு செய்து வருகிறது.

இதை எதிர்த்து வடக்கில் சமூக வளர்ச்சியிலும் விவசாய வளர்ச்சியிலும் முன்னேறிய மாநிலமான பஞ்சாப் இதன் பாதிப்புகளை முன்னறிந்து வீதிக்கு வந்திருக்கிறது. தெற்கில் விவசாயத்தில் வளர்ச்சி அடைந்த கேரளமும் தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்த தமிழகமும் தமக்கான ஆட்சியை மாநிலத்தில் ஏற்படுத்தி ஒன்றியத்தின் மீதான நெருக்கடியை அதிகரிக்கும். மற்ற பகுதியில் உள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்தத் தவறான கொள்கையினால் வதைபட்டுக் கொதித்தெழுந்து வீதிக்கு வருவதும் இவர்களின் ஆட்சியை வீசி எறிவதும் தவிர்க்க இயலாதது.

இந்தக் கொதிப்பைத் தணிக்க, தனது சொந்த முயற்சியில் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்து பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையில் இந்தியாவும் அந்த நோக்கில் ஆளும் பாஜகவும் இல்லை. இந்த கொள்கைகளில் இருந்து பின்வாங்கி தணிக்கும் சாத்தியமும் இல்லை. அது இவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் நோக்கத்துக்கும் பெருநிறுவனங்களின் நலனுக்கும் எதிரானது என்பதால் இந்த அரசு மக்களுக்கு எதிராகவே நிற்கும்.

இவர்களைப் பின்னின்று இயக்கம் அமெரிக்கா வீழ்ந்து கிடக்கும் தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப தடுமாறி வரும் நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பில் முதலிட்டு, கைதூக்கி விடும் சாத்தியமும் குறைவு.

கொரோனா தொற்றைச் சமாளித்து வலுவான நிலையில் இருக்கும் சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை(OBOR) திட்டத்தில் இணைந்து இதைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தாலும், பதிலாக அவர்களின் 5ஜி, செயற்கை நுண்ணறிவு, இணையதளப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க கோருவார்கள். அது தற்போது இந்தியச் சந்தையில் முற்றொருமை கொண்டிருக்கும் அம்பானி, அதானி, அமேசான், வால்மார்ட், கூகுள், முகநூல் நிறுவனங்களின் நலனுக்கு எதிரானது. ஆகையால், அவர்கள் நிச்சயம் இதற்கு அரசை அனுமதிக்க மாட்டார்கள். அதையும் மீறினால் தற்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள பார்ப்பனிய அரசின் மனித உரிமை மீறல்கள் உலக அளவில் பேசு பொருளாகும்.

பனிப்போர் காலத்தில் தென்கொரிய, தைவான் நாடுகளில் உருவாக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சியை இந்தியாவில் உருவாக்கி, நீண்ட காலம் அதை நிலைத்திருக்க வைக்கும் சாத்தியமும் மிகக் குறைவு. அவ்விரு நாடுகளின் குறுகிய நிலப்பரப்பு, ஓரின மக்கள், அமெரிக்க முதலாளித்துவம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது, இந்த நாடுகளுக்கு அப்போது சந்தை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் வித்திட்டது போன்ற எதுவும் தற்போதைய அமெரிக்க நிலைக்கும் இந்தியாவின் தன்மைக்கும் பொருந்தாது.

மௌரிய அரசனை கொலை செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்து அனைத்து பகுதிகளையும் அடக்கி ஆளலாம் என்று நினைத்த புஷ்யமிங்கனைப் போல அம்பானி, அதானிக்கு வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து, இந்தியாவைக் கைப்பற்ற நினைக்கும் இந்த முயற்சி, புஷ்யமிங்கனின் சதிப்புரட்சி மௌரிய அரசை சிறு துண்டுகளாக உடைய வைத்து அவனது கனவைக் கலைத்தது போல, இந்த முயற்சியும் இவர்களின் கனவும் தோல்வியிலேயே முடியும்.

அதேபோல அமெரிக்கா - சீனா இடையேயான போட்டி பனிப்போரை ஒத்த சூழலை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் இது வலுவான நிலையில் இருந்து கொண்டு உடன்பாட்டின்போது பெருமளவு அமெரிக்க நலன்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. உலகமயத்தினால் பின்னிப்பிணைந்து கிடக்கும் உலகை இரண்டு முகாம்களாக பிரிப்பதோ (Decoupling), அதற்கு உலக நாடுகளை இணங்கவைப்பதோ தற்போதைய கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் உலகப் பொருளாதாரச் சூழலில் எளிதானது அல்ல.

அமெரிக்க - ஜப்பான் தகவல் தொழில்நுட்பக் கூட்டு பேரவலிமையைக் கூட்டி இந்த நாடுகளுக்கான பலன்களை அதிகரிக்குமே தவிர, சீனாவை வெற்றி கொள்ள உதவாது. ஏனெனில் உற்பத்தியில் தொழில்நுட்பம் வலுவான காரணியாக இருந்தாலும், தற்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சினை இந்தப் பொருட்களுக்கான சந்தை. அது சீனாவிடம் இருக்கிறது. அதேபோல இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா பின்தங்கி இருக்கிறதே தவிர, முழுமையாக இவர்களைச் சார்ந்திருக்கவில்லை.

ஆகவே இன்னும் சில வருடங்களில் அமெரிக்க - சீனா இடையே ஓர் உடன்படிக்கை ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். வரும் சில ஆண்டுகளில் ஏற்படப்போகும் அப்படியான உடன்படிக்கையும், இந்தியாவுக்குள் முற்றிவரும் முரண்பாடுகளும், தற்போது நிலவும் பார்ப்பனிய முற்றொருமையையும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கொண்டிருக்கும் தகவல்தொழில்நுட்ப முற்றொருமையையும் உடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்திய ஆளும் வர்க்கம் ஏற்கனவே அதை உணர்ந்து சீனாவுக்கு எதிரான தமது நடவடிக்கையில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

அவ்வாறான உடைப்பு ஒன்றிய கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து மாநிலக் கட்சிகளின் பங்கேற்பை அதிகரித்து அவர்களின் குரலை உயர்த்தும் வாய்ப்பை வழங்கும்.

எதிர்க்கட்சியான காங்கிரஸை, பெருநிறுவனங்கள் கடந்த தேர்தலில் கைவிட்டதும் பாஜக அதை மேலும் பலகீனப்படுத்தி, மேலெழுந்ததும் அவர்களுக்கு ஓர் உறுதியான மாற்றை வழங்கும் வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கின்றன.

உடைந்து கிடக்கும் காங்கிரஸுக்கு இனி தனியாக ஆட்சி அமைக்கும் ஆற்றல் இல்லை. உடைத்து நொறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தியத் தொழில்துறை மீண்டும் மாநில அளவில் அந்தந்த அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அவ்வாறான சூழல் மக்களின் நலனுக்கு உகந்தது மட்டுமல்ல; அரிதிற் முயன்று உருவாக்கப்பட வேண்டியதும் கூட.

தற்போது அதிகாரம் எல்லாவற்றையும் தன்னிடம் மோடி குவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த அதிகாரம் நாட்டின் கடைகோடி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என கார்னெல் பல்கலைக்கழக உரையாடலில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இது அவரின் குரலல்ல. இந்த முற்றொருமையினால் பாதிக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் குரல்.

வரப்போகும் இந்தச் சூழலை, தமிழகமும் திமுகவும் சரியாகப் பயன்படுத்தி இழந்த மாநில உரிமைகளை மட்டுமல்ல; இனிவரும் காலங்களில் இப்படியான சூழல் ஏற்படாதவண்ணம், தமிழகம் சுயசார்போடும் சுயமரியாதையோடும் வாழ அடிப்படையான நமது பொருளாதாரப் பாதையை நாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > /

< பகுதி 3 > / < பகுதி 4 > /

< பகுதி 5 > / < பகுதி 6 > . /

< பகுதி 7 > / < பகுதி 8 > /

< பகுதி 9 > / < பகுதி 10 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 7 மே 2021