மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ட்விட்டர் கணக்கு முடக்கம்: எனது கருத்தை வேறுவிதமாகச் சொல்வேன் - கங்கனா

ட்விட்டர் கணக்கு முடக்கம்: எனது கருத்தை வேறுவிதமாகச் சொல்வேன் - கங்கனா

மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை தொடர்பாகப் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியுள்ள நிலையில், ‘எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன்’ என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக ட்விட்டர் நிர்வாகம் பல முறை கங்கனா மீது நடவடிக்கை எடுத்து சில மணி நேரம் கணக்கை முடக்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, மும்பை போலீஸார் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்தபோது சிவசேனா கங்கனாவைக் கடுமையாகக் கண்டித்தது. இதனால் கங்கனா தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பாதுகாப்பு கொடுத்த பிறகுதான் மும்பைக்கு வந்தார். அடிக்கடி மகாராஷ்டிராவிலுள்ள சிவசேனா கூட்டணி அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

தற்போது மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை தொடர்பாக கங்கனா ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்காக அவரின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.

கங்கனா மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளை பதிவிட்டதோடு, ‘பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியை அடக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்றும், ‘பாஜக வெற்றி பெற்ற அஸ்ஸாம், புதுச்சேரியில் எந்தவித வன்முறையும் நடக்கவில்லை; ஆனால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வங்காளம் பற்றி எரிகிறது’ என்றும் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

நேரு மற்றும் இந்திரா காந்தியையும் இதில் இழுத்திருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர். இந்தப் பதிவுகளைத் தொடர்ந்தே ட்விட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீண்டும் மீண்டும் ட்விட்டர் விதிகளை மீறி செயல்பட்டதால் கங்கனாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. எங்களது நடத்தை கொள்கையின்படி ஒருவரைத் துன்புறுத்தும் வகையில் பதிவிடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

கணக்கை முடக்கியவுடன் கங்கனா அளித்த பேட்டியில், “ட்விட்டர் நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்ற என் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். அவர்கள் நாம் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல விரும்புகின்றனர். எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன். நாட்டில் மக்கள் எங்கு துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்காக எனது இதயம் துடிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்காக இன்ஸ்டாகிராமில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கங்கனாவின் சகோதரி ரங்கோலியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வியாழன் 6 மே 2021