மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்!

சென்னை மாநகராட்சியின் சூப்பர் திட்டம்!

சென்னை மக்களிடையே கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது சென்னை மாநகராட்சி.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வருகிற வேளையிலும், சில இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் இருப்பதை காண முடிகிறது. முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் சரிவர முகக்கவசம் அணிவதில்லை.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி திரை பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது, எப்படி சரியாக முகக்கவசம் அணிவது, எத்தனை நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சிடி ஸ்கேன் எப்போது எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து டாக்டர்களுடன் திரைபிரபலங்கள் உரையாடி, அதுகுறித்து வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வீடியோக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதன்படி, முதல் விழிப்புணர்வு வீடியோவில் நடிகை மாளவிகா மோகனின் கொரோனா குறித்த கேள்விகளுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி விளக்கம் அளிக்கிறார். இந்த வீடியோ வெளியிடப்பட்ட சில நேரங்களிலேயே 45 ஆயிரம் பேர் அதை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் ஆல்பி ஜான் கூறுகையில், “இந்த திட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு பல திரை பிரபலங்களிடையே பேசி வருகிறோம். ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை அனுப்பியுள்ளனர். பொதுவாக ஒரு விஷயத்தை நடிகர், நடிகைகள் கூறும்போது அதை பின்பற்றுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த அடிப்படையில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வுக்கு பிறகு மக்கள் அதிகளவில் முகக்கவசம் அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கும் மக்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

அடுத்தபடியாக, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் இந்த திட்டத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் செய்திகளை பெறும் தளம் மாறிவிட்டது. டிவி, செய்திதாள்களை தாண்டி, சமூக வலைதளங்களிலேயே மக்கள் அதிகளவில் செய்திகளை தெரிந்து கொள்கின்றனர்” என கூறினார்.

”பொதுவாக சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்படும் வீடியோக்களை 1000 பேருக்கு மேல் யாரும் பார்ப்பதில்லை. எங்கள் வீடியோவில் அதிகளவில் தகவல் இருந்தாலும், மக்கள் அதை பார்ப்பதில்லை. ஆனால், தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படும். எங்களது அறிவுரைகளை மக்கள் பின்பற்றினாலே பாதி பிரச்சினை முடிந்துவிடும். இரண்டாவது அலையில் அதிகமான மக்கள் சமூக வலைதளங்களிலிருந்து தகவல்களை பெற முயற்சிக்கின்றனர். அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை அடைவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது”என மாநகாரட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 6 மே 2021