மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

எது 3ஆவது பெரியக் கட்சி?: கே.எஸ்.அழகிரி

எது 3ஆவது பெரியக் கட்சி?: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரியக் கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 29 லட்சத்து 67ஆயிரத்து 853 வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், யார் மூன்றாவது பெரிய கட்சி என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வந்த மக்கள் விரோத பாஜக, அதிமுக ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 38இல் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 60 லட்சம் வாக்குகள் அதிகமாக அளித்து தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றி பெறச் செய்தனர்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி பெறச் செய்து தமிழகத்தில் நடைபெற்று வந்த பாஜக ஆதரவு பெற்ற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.

அனைத்து நிலைகளிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்த தமிழக மக்களுக்கு விடியல் ஏற்படுகிற வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று நல்லாட்சியை அளிக்க இருக்கிறார். இத்தகைய முடிவை அளித்த தமிழக மக்களை இந்திய நாடே பாராட்டி வருகிறது.

இந்நிலையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி யார் என்று ஊடகங்களின் மூலமாகப் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான கள நிலவரத்தை மூடி மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என்று ஒருசில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 20 லட்சம் ஆகும்.

ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி வாக்குகள் 80 ஆயிரம். அதேபோல, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து 30 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்படி மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் பெற்ற சராசரி வாக்குகள் 13 ஆயிரம் மட்டுமே. 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் 72 சதவிகித வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கையில் மூன்றாவது பெரியக் கட்சி எது” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் அவர், ”தமிழக அரசியலில் தொகுதிகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு கட்சியின் பலத்தைக் கணக்கிடும் போது, 234 இடங்களில் பெற்ற வாக்குகளை வைத்துக் கொண்டு 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பலத்தைக் கணக்கிடுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

மூன்றாவது அணி என்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்தத் தேர்தலிலும் இதுவரை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஓர் அரசியல் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பதற்காகவே போட்டியிடுகிறது என்று சொன்னால், அது நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலில் வெற்றி பெறுகிற நோக்கம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிடுவதற்காகவே தவறான தேசவிரோத கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களை ஈர்ப்பதற்குச் சீமான் மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்துகொண்டு தெளிவு பெறுவார்கள்.

எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 6 மே 2021