மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ஆக்சிஜன் தட்டுப்பாடு: இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது!

ஆக்சிஜன் தட்டுப்பாடு: இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருவேறு மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து செய்தி வெளியானது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவேகமாகப் பரவிவரும் கொடுஞ்சூழலில் வடமாநிலங்களில் நிகழ்வதுபோல, தமிழகத்திலும் உயிர்க்காற்றான ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்து வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.

நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகளும், நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிர்க்காற்று இன்றி மரணித்த செய்தியானது பெரும் அச்சத்தையும், கவலையையும் தருகிறது.

வட இந்திய மாநிலங்களின் மருத்துவமனைகளில் போதிய இடமின்றியும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்றி வீதிகளிலும், வாகனங்களிலும் மக்கள் துடிதுடித்து இறப்பதையும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையில் உயிர்க்காற்று உருளைகளை தூக்கிக் கொண்டு அலைவதையும், இறந்தவர்களின் உடலை சுமக்க ஆளில்லாமல், குடும்ப உறுப்பினர்களே சுமந்து செல்வது, இடைவிடாமல் உடல்கள் எரியூட்டப்படுவது என எல்லாவற்றையும் கண்டபிறகு, தமிழக அரசு பாடம் கற்று கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என மருத்துவர்களும், மக்களும் வீதியில் இறங்கி போராடும் காட்சிகள் மிகவும் மனவேதனையை அளிக்கின்றன. ஆளும் அரசுகளும், அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளும் மாறலாம். ஆனால், அரசு இயந்திரம் நிலையானது. அதுவும், இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் இடைவிடாது செயல்பட்டு, மக்களின் உயிரைக் காப்பது அரசுதுறைகளின் பெரும் பொறுப்பும், அவசிய கடமையுமாகும்.

இனியும், இதுபோல அரசின் அலட்சியத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, பேரிடர் சூழலை மனதில்கொண்டு உயிர்க்காற்றுடன்கூடிய படுக்கை வசதியை நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்துச் செயல்பட்டு, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் கொரோனோ தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்ற மருந்துகள், படுக்கைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். தமிழகத்தில் இனி ஒரே ஒரு உயிர்கூடப் போதிய மருத்துவ வசதிப் பற்றாக்குறையால் பறிபோகா வண்ணம் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வியாழன் 6 மே 2021