மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ஆட்சி மாற்றம் குறித்து கோவை தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஆட்சி மாற்றம் குறித்து கோவை தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ராஜன் குறை, ஸ்ரீரவி

இன்றைய காலத்தில் சமூக ஊடகம் என்பது புறக்கணிக்க முடியாத ஒரு சமூக ஆற்றலாக இருக்கிறது. ஒருவரது முகநூல் பதிவோ, ட்விட்டரில் பகிரும் செய்தியோ மெல்ல மெல்ல பரவி ஆயிரக்கணக்கானவர்களை, சில சமயம் லட்சக்கணக்கானவர்களையும் சென்று அடைகிறது. அதன்பின் அது மக்களின் பேச்சில், உரையாடலில் கலக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தப் பேச்சு, எங்கே யாரால் தொடங்கப்பட்ட து என்பதைக் கண்டறிவதும் இயலாது. முன்பெல்லாம் வதந்திகள் பரவுவது போலத்தான் என்றாலும், இப்போது இது வெகுசுலபமாக ஒரு சில நிமிடங்களில் பல்வேறு ஊர்களிலும், ஏன் நாடுகளிலும்கூட பரவத் தொடங்கி விடுகிறது. ஒரு சில நேரங்களில் முதலில் பதிவிட்டவர்களுக்கே தாங்கள் பற்றவைத்த தீ எவ்வளவு பரவிவிட்டது என்பது தெரிவதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி உறுதியானதும் கட்சியினர், ஆதரவாளர்கள் மகிழ்ந்ததும், எதிர்க்கட்சியினர் மனம் குமைந்ததும் இயல்பானதுதான். ஆனால், கொங்கு மண்டலம் என அறியப்படும் பகுதியில், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அஇஅதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது விவாதத்துக்குரிய அம்சமாகியது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில், இதற்கு காரணம் கோவை மாவட்ட தொழிலதிபர்கள் திமுக ஆட்சிக்கு வருவது குறித்து அச்சப்படுகிறார்கள் என்ற கருத்து பரவியது. நில பேரங்களில் தலையிட்டு, கட்டை பஞ்சாயத்து செய்வார்கள், தொழில்கள் தொடங்க இடையூறு செய்வார்கள் என்பது போன்ற அச்சங்கள் கோவை தொழிலதிபர்களிடம் நிலவுவதாக வதந்தி பரவியது.

இது தொடர்பான விவாதங்களைக் கண்ணுற்ற பிறகு கோவையில் வசிக்கும் மானுடவியலாளர்களான நாம், ஏன் சில கோவை மாவட்டத் தொழிலதிபர்களிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கக் கூடாது என்று தோன்றியது. ஒரு சில மில் அதிபர்கள், இன்ஜினீயரிங் தொடர்பான சிறு தொழில் அதிபர், வார்ப்படத் தொழிலதிபர், ஹோட்டல் அதிபர் என ஏழெட்டு பேரிடம் பேசினோம். அவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தவிர, அவர்கள் அறிந்த பிற தொழில்முனைவோரிடையே எப்படியான மனநிலை நிலவுகிறது என்பதையும் கேட்டறிந்தோம்.

கோவை தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள்?

கோவை தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் குழுமத்தின் பொது மனநிலை என்று ஒன்றைக் கூற முடியும் என்றால், அதில் முதன்மையாக ஆட்சி மாற்றம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புதான் இடம்பெற்றுள்ளதாகக் கூற முடியும். புதிய ஆட்சியில் தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகளைச் செவிமடுத்து கேட்கவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் முனைப்புள்ள அமைச்சரவை அமையும் என்று நம்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள்.

பொதுவாகவே திராவிட முன்னேற்றக் கழக தலைமை என்பது எளிதில் அணுகக் கூடியதாகவும், பிரச்சினைகளைச் செவிமடுக்க கூடியதாகவும் இருக்கும் என்பதே அவர்கள் அனுபவமாக இருந்துள்ளது. மேலும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் திறனும், நுட்பமான பார்வையும் திமுக ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கலாம் என்பதும் அவர்கள் அனுபவம்.

அதேநேரம் அவர்கள் சந்திக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால், அவர்கள் தொழில்கள் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. குறிப்பாக, பஞ்சாலைத் தொழிலைப் பொறுத்தவரை இதுதான் நிலை என்று தெரிகிறது. திமுக அரசு மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளைப் பெறக்கூடியதுதான் என்றாலும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இயங்குமா என்ற கேள்வி இவர்களிடையே இருக்கிறது.

பருத்தி உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள போதாமைகளை, குறைபாடுகளைக் களைவது ஆலைகளின் முக்கிய பிரச்சினை. இதைத் தீர்ப்பதில் புதிய அரசு முனைப்புக் காட்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாங்கள் தொடர்புகொண்ட யாருமே திமுக கட்சி, நில பேரங்களில் தலையிடும் என்றோ, தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் இயங்கும் என்றோ எந்த அச்சத்தையும் வெளியிடவில்லை. அப்படி ஓர் அச்சம் யாருக்கும் இருப்பதற்கு முகாந்திரங்கள் உண்டு என்றும் கூறவில்லை.

தொழிலதிபர்கள், தொழில்முனைவோரிலும் பல்வேறு அரசியல் சார்புள்ளவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதில் ஒரு சிலர் திமுகவுக்கு எதிரான மனநிலை உள்ளவர்களாக இருக்கலாம். அவர்களில் சிலர் ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்பலாம் என்றே சமூக ஊடக சலசலப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

நாங்கள் தொடர்புகொண்டவர்களில் 80 சதவிகிதம் பேர் திமுக ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரம் தீவிர அரசியல் முனைப்புள்ளவர்கள் என்றும் கூற முடியாது. அவர்களது கவனம் தொழில் வளர்ச்சியில்தான். அவர்கள் யாரும் சமூக ஊடகங்களில் பரவிய விஷமத்தனமான வதந்தியைப் போல எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.

அதனால் கோவை மாவட்டத் தேர்தல் முடிவுகளுக்கு, தொழிலதிபர்கள், தொழில்முனைவோரைப் பொறுப்பாக்குவது பொறுப்பற்ற செயலாகத்தான் இருக்கும். தங்கள் பகுதியில் ஆளும் கட்சி ஆதரவு பெறாததால், புதிய அரசு பாராமுகமாயிருந்துவிடக் கூடாதே என்ற ஒரு கவலை சிலருக்கு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள புதிய அரசு நிச்சயம் இவர்கள் நலனைக் கருத்தில்கொண்டே செயல்படும் என்பதை அடிப்படை அரசியல் புரிதல் உள்ள யாருமே யூகிக்க முடியும்.

21ஆம் நூற்றாண்டில் ஓர் அரசின் புராக்கரஸ் கார்டில் தொழில் வளர்ச்சிக்கே அதிக மதிப்பெண் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் ஆட்சி மாற்றத்தைக்கண்டு அச்சப்படும் நிலையில் கோவை தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் யாரும் இல்லையென்றே தெரிகிறது. மாறாக, புதிய ஆட்சி அதிக உற்சாகமாகவும், ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படும் என்றே எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் விசாரித்தவரை தெரியவரும் உண்மை இதுதான்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வியாழன் 6 மே 2021