மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

பகுதி 10: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பகுதி 10: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

பெரியாரின் அரசியலை முன்னெடுக்கத் தவறிய தமிழகம்!

கடந்த ஒன்பது பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், சீன - அமெரிக்கப் போட்டி, பார்ப்பனிய - ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதார தேவை மற்றும் உலக அரசியல் பின்னணி, அமெரிக்காவின் பொருளாதார நலிவு, அமெரிக்க மைய உலக ஒழுங்கை உடைக்கும் திசையில் சீனா, உடன்பாட்டுக்கான சாத்தியங்கள், எந்த திசையில் இந்தியப் பொருளாதாரம் பயணிக்கிறது, எப்போதும் இந்தியா மாறாமல் எப்படி எல்லா மாற்றத்தையும் செரித்து வாழ்கிறது, பார்ப்பனியம் என்பது குறித்துப் பேசின. புதிய பொருளாதார முறைக்கு எதிரான ஒன்றியத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் பஞ்சாப், தமிழக மக்களின் மாறுபட்ட தன்மைகளையும் பெரியாரின் அரசியலைத் தமிழகம் முன்னெடுக்க தவறியதைக் குறித்தும் நமது பலகீனங்களைக் களைந்து முன்னோக்கி பயணிக்க வேண்டியதை குறித்தும் பேசுகிறது இந்தப் பகுதி.

இந்தப் புதிய பொருளாதார கட்டமைப்பு உலக அளவில் பெட்ரோலிய எரிபொருள் உற்பத்தியாளர்களைப் பதிலீடு செய்து புதிய உலக ஒழுங்குக்கு வழிகோலுகிறது என்றால், இந்தியாவில் பல கோடி விவசாயிகளும் வர்த்தகர்களும் பங்கு பற்றி பலனடைந்து வரும் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் ஒரு சிலரிடம் குவித்து பழைய உடைந்த பார்ப்பனிய கட்டமைப்பைப் புனரமைத்து வலுப்படுத்துகிறது. இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது இப்போது உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்களாக “பதவி உயர்வு” பெறுவார்கள். கடை உரிமையாளர்கள் வாங்கி விற்கும் முகவர்களாக அவதாரம் எடுப்பார்கள். குறைந்தபட்சம் நாட்கூலி பெற்றுவரும் தொழிலாளர்கள் மணிக்கு இவ்வளவு என அத்துக்கூலிகளாக மாற்றம் பெறுவார்கள்.

மக்களிடம் பணம் இருக்காது

இது இன்றைய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு, இந்தக் கட்டமைப்பில் உருவாகும் செல்வத்தை, அது சொற்பமாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ளும் சூழலையும் இல்லாமல் ஆக்கி, இதற்கு முன்பு எப்படி எல்லா செல்வத்தையும் ஆளும் சிறு கூட்டத்திடம் சேர்த்ததோ, அதேபோல இப்போதும் கொண்டு சென்று குவித்து வருகிறது. அதேநேரம் இந்திய மக்கள் இணையம் இன்றி வாழ முடியாத சூழலையும் எதுவும் பணமின்றி கிடைக்காது என்ற நிலையையும் உருவாக்குகிறது. இந்தத் தேவைகளுக்கு இவர்கள் இருக்கும் செல்வத்தை விற்று செலவு செய்வதைத் தவிர வழி இருக்காது. முதலில் வீட்டில் இருக்கும் நகைகளும் பின்பு இந்த மூன்று விவசாயச் சட்டத்தின் காரணமாகக் குத்தகைக்கு விட்ட நிலத்தை கிரையம் எழுதி கொடுக்க வேண்டிய சூழலையும் ஏற்படுத்தும். இப்படி மக்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச செல்வத்தையும் ஒரு சிலரிடம் கொண்டு போய் சேர்க்கும். பொருளாதார வளர்ச்சி 5-10 விழுக்காடு என்றும் ஜிடிபி 5 ட்ரில்லியன் எனவும் அறிக்கை வாசிப்பார்கள். மக்களிடம்தான் பணம் இருக்காது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு மக்கள் கையில் சேமித்துவைத்திருந்த பணத்தை, சேமிக்கும் பழக்கத்தை இழந்து, பதிலாக வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை அடைந்தார்கள். அது இல்லாதவர்கள் கடனாளி ஆகி இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் நகைகளையும் சொத்துகளையும் இழந்து நவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி “மகிழ்வார்கள்”. இந்தப் பொருளாதார முறை ஒருபுறம் மக்களை வாங்கி அனுபவிக்கத் தூண்டி லாபமடைந்து கொண்டே, மறுபுறம் அவர்களின் வருமானத்தை இல்லாமல் ஆக்கி அவர்களை ஒட்ட சுரண்டி, வாங்க வழியற்றவர்களாக மாற்றுகிறது.

2008-க்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகப் பெருகிய உற்பத்தி பொருட்களை விற்க, இந்தியா கடன் பொருளாதார முறையைத் தீவிரமாகச் செயல்படுத்தியது. அது வாராக்கடனை அதிகரித்திருந்த நிலையில் கொரோனா அதை இன்னும் மோசமாக்கி இருக்கிறது. வாங்க வழியற்றோர் பெருகிக் கொண்டிருந்த சூழலில், 2019இல் அமெரிக்காவைப் பின்பற்றி நிறுவனங்களுக்கு மேலும் வரிச்சலுகை அளித்து வீழ்ந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை மீட்க முயன்றது. ஆனால், வாங்க ஆள் இல்லை என்ற பிரச்சினை அப்படியே நீடித்தது.

வட்டி குறைப்பு செல்வம் கொள்ளை

இப்போது அதற்குத் தீர்வாக, அதே அமெரிக்காவைப் பின்பற்றி அளவான முறையில் பணத்தைச் சகாயமாக்கும் (Quantitative Easing) கொள்கைக்கு இந்தியா வந்திருக்கிறது. பெருநிறுவனங்களின் வரியைக் குறைத்து மக்கள் வாங்கும் எரிபொருளின் வரியை உயர்த்தியதால் ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, பணவீக்கத்தை 2-6 விழுக்காடு வரை அரசு ஏற்புடையதாகக் கருதும் என அறிவித்துவிட்டது. மறுபுறம் மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்து மறைமுகமாக அவர்களின் செல்வத்தைக் குறைக்கிறது அல்லது திருடுகிறது. அதுவும் போதாமல் இப்படிப் பணத்தை சகாயமாக்கி இன்னும் அதன் மதிப்பை வீழச் செய்கிறது. எல்லா வகையிலும் மக்களின் வயிற்றில் அடிக்கிறது. அமெரிக்காவில் முதலில் குறிப்பிட்ட அளவுக்குச் செல்வம் பரவிய பிறகுதான், இதுபோன்ற நிதி கொள்கையைச் செயல்படுத்துகிறார்கள். இந்தியாவில் அப்படி நடக்கும் முன்பே இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தி மக்களை வதைக்கிறார்கள்.

சாரமாக இயந்திரங்களைக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கும் அதேவேளை, பெருகிய உற்பத்தியின் பலன்களை, செல்வத்தை, அனைத்தையும் ஒரு சிலரிடம் கொண்டுபோய் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பொருளாதாரக் குறுக்கத்தைத் தீர்க்க, மக்கள் எதிர்காலத்துக்குச் சேர்த்து வைக்கும் சேமிப்பை, செல்வத்தைச் செலவு செய்ய சொல்லி மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறார்கள். அதுவும் ஓர் எல்லையைத் தொடும்போது இருக்கும் எல்லா தொழில்களையும் தனதாக்கிக்கொண்டு, மற்றவர்களை அதிலிருந்து வெளியேற்றி அவர்களுக்குச் செல்லும் மொத்த செல்வத்தையும் தனக்கானதாக்கி, தங்களின் செல்வக்குவிப்பைத் தொடர்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக, அதே பிரச்சினையை மீண்டும் உருவாக்குகிறார்கள்.

வாக்கு இயல்பு

மூன்று விவசாயச் சட்டங்களை இயற்றியதும் அது தங்களை, தங்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப் போகும் ஆபத்தைச் சட்டென்று உணர்ந்துகொண்ட விவசாய உற்பத்தி முறையை முதன்மையாகக் கொண்ட பஞ்சாப் வடமாநில விவசாயிகள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இவ்வாறான எந்த எழுச்சியையும் அது ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல; அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் பாஜகவை முழுமையாக ஆதரித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டு அளவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் வட இந்திய மக்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வாக்களித்தது இயல்பான ஒன்று.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் பாதிப்புக்குள்ளானது, பணத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வந்த சிறு குறு தொழில்கள்தான். வங்கிகளில் பணம் வைத்து செலவு செய்த வளர்ந்த தென்னிந்திய மாநில மக்கள்தான். இதில் அதிகம் இந்த சிறு குறு தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தனது சொந்தப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வங்கி வாசலில் நிற்க வைத்த அரசுக்கு எதிராக 2019 தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. இது வடக்குக்கும் தெற்கிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சியில் நிலவும் இடைவெளியையும் அதனால் ஏற்பட்ட சமூக வளர்ச்சியையும் காட்டுகிறது.

தமிழகம் ஏன் பொங்கி எழவில்லை ?

இன்னும் பெரும்பாலான வட இந்திய மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதையும் பழைய நிலப்பிரபுத்துவ சாதிய கட்டமைப்பே அங்கு வலுவாக ஆட்சி செலுத்துவதையும் புதிய முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சி அங்கே சொற்பமாக இருப்பதையும் இது உணர்த்துகிறது. தெற்கில் குறிப்பாக, தமிழகம் இந்த அரசியலை முற்றாக நிராகரித்தது, விவசாய சமூகமாக இருந்து தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக பழைய நிலப்பிரபுத்துவத்தில் இருந்து வேகதூரம் பயணித்து முதலாளித்துவ பாதையில் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், விவசாயச் சட்டங்களுக்காக வடக்கில் முற்போக்கான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழும் பஞ்சாப் பொங்கி எழுந்ததைப் போல, தென்னகத்தின் முற்போக்கான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழும் தமிழகம் ஏன் பொங்கி எழவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது.

பொய்யான காரணங்களைச் சொல்லி நயவஞ்சகமாகச் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் புரிந்து கொள்ளாதது ஒரு காரணம் என்றாலும் அதற்குப் பின்வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின்போதாவது நாம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இங்கே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பங்களும் அதன்பின் ஏற்பட்ட முதுகெலும்பற்ற எட்டப்பர்களின் ஆட்சியும் இன்னொரு காரணமாகக் கருதலாம். இந்த காரணங்களை எல்லாம் தாண்டி 2018இல் கொண்டுவரப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழகம் அரசியல் ரீதியாகக் கடுமையாக வினையாற்றியது. இது திராவிட அரசியல் பார்ப்பனியத்தைக் கருத்தியல் ரீதியாகச் சரியாக எதிர்கொண்டதையும் பொருளியல் ரீதியாகப் புரிந்துகொண்டு அதன் இருப்பை கேள்விக்குட்படுத்த தவறியதையும் காட்டுகிறது.

இதற்கு மாறாக, பஞ்சாப் தமது வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருளாதாரத்தைக் கட்டிக்காக்கும் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் அதேநேரம் தம் பின்னால் மற்றவர்கள் அணி திரண்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியவில்லை. அடிப்படையில் பார்ப்பனரல்லாத விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு குறு வியாபாரிகளையும் இவர்களின் வலி என்றால் என்னவென்றே தெரியாத பார்ப்பனர்கள் நிறைந்த பார்ப்பனிய சிந்தனைகொண்ட அரச நிர்வாகம் அடக்கி ஒடுக்குவதை தமிழகத்தின் அனுபவத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளாததும், அதைப் பொதுவெளியில் பேசி, அவர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாதார் கூட்டணியைக் கட்ட முனையாததும் அவர்களின் போராட்டம் வெற்றியை நோக்கி செல்லாமல் முடங்கி இருக்க காரணமாகக் கருதலாம்.

இப்படி ஒரு கூட்டணியைக் கட்டத் தேவையில்லை பேச ஆரம்பித்தாலே இந்தப் பிரச்சினை உடனடியாக தீர்வை நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகம். சாதியைக் கொண்டு பிரித்து மக்களின் வாழ்வில் சதிராட்டம் ஆடும் அவர்களுக்கு அவர்களின் வழியிலேயே, அவர்களின் மொழியிலேயே பதில் அளிப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கும். அதேபோல பஞ்சாப்பைப் பின்பற்றி தமிழகம் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார அடிப்படைகளைப் புரிந்துகொண்டு நமது சிறு குறு நிறுவனங்களுக்காகவும் வியாபாரிகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும். திராவிட கருத்தியலின் போதாமைகளைப் புரிந்துகொண்டு அது தொடர்பான உரையாடலை முன்னெடுக்க வேண்டும்.

முதலாளிகளுக்காக குரல் கொடு

அறிஞர் ஜெயரஞ்சன் போன்ற சிலரைத் தவிர்த்து இங்கு பெரும்பாலும் யாரும் பேசுவதே இல்லை. திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஒன்றியத்தின் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனவே தவிர, நமது மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் அவர்களின் வாழ்வை உயர்த்தும் வாய்ப்புகொண்ட முதலாளிகளுக்காகக் குரல் கொடுப்பதே இல்லை. முதலாளித்துவத்தை எதிரியாக எதோ மக்களுக்கு முற்றிலும் எதிரானதாக தீண்டத்தாகத ஒன்றாகக் கருதும் போக்கு இங்கே நிலவுகிறது. மேடைகளில் பண்ணையார்களையும் ஜமீன்தார்களையும் அவர்களின் மக்கள் விரோதப் போக்குகளை அவர்கள் முன்னிலையில் விமர்சனம் செய்த பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தில் அவர்களை தம்முடன் இணைத்துக்கொண்டார்.

ஆளும்வர்க்கத்தின் அங்கமான அவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள முரண்பாட்டைப் புரிந்துகொண்டு அதை மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டார். அதேபோல ஆளும் வர்க்கமாக இருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் அணுகும்போது முற்போக்கான ஏகாதிபத்திய சார்புநிலை எடுத்து பிற்போக்கு சக்தியான பார்ப்பனியத்தை எதிர்த்தார். அதன்மூலம் பிற்போக்கு சமூகத்தில் முற்போக்கு சமூக கட்டமைப்புக்கு அடித்தளமிட்டார். சுதந்திரத்தின்போதும், இந்தியச் சட்டத்தை இயற்றியபோதும் எதிர்நிலை பெரியாரை எப்படி புரிந்துகொள்வது? பிற்போக்கான பார்ப்பனியத்தின் ஆட்சி ஏற்படுவதைவிட முற்போக்கான ஏகாதிபத்திய ஆட்சியே மேலானதாகக் கருதி இருக்க வேண்டும். சாதிக்கெதிரான போராட்டத்துக்கு ஏகாதிபத்தியம் வழங்கும் வெளியைப் பயன்படுத்தி இங்கே சாதிக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து புதிய சமூகத்தை உருவாக்கி அவர்களை ஆட்சியில் அமர்த்துவதே விருப்பமாக இருந்திருக்க வேண்டும்.

அன்றைய நிலவுடைமை சக்திகளை தன்பக்கம் நிறுத்தி பார்ப்பனியத்தை எதிர்த்ததைப் போல தமிழகம் இன்றைய முதலாளித்துவச் சக்திகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டிக்கும் அதேவேளை, அவர்களை நம்முடன் நிறுத்தி பார்ப்பனிய ஒன்றியத்தை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட அவர்களும் பாதிக்கப்படும் மக்களும் பெரிதாக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. போராடும் விவசாயிகளோடு கைகோத்து நின்று தமது நலன்களைக் காக்க தவறிவிட்டது. இது பெரியாரின் அரசியலைத் தமிழகம் முழுமையாகப் புரிந்து கொள்ளாததையும் அதை உள்வாங்கி முன்னெடுக்காமல் அவரின் அரசியல் தேங்கி விட்டதையும் காட்டுகிறது.

பலவீனமான அடித்தளம்

அதேபோல சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பார்ப்பனியம், அதன் ஆதிக்கத்துக்கெதிரான தமிழகத்தின் அரசியல் ரீதியிலான போராட்டம் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றாலும் அது இன்னும் முடிவடைந்து விடவில்லை. கிட்டத்தட்ட இதற்கு எதிரான திராவிடத்தின் போராட்டம் ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் நம்மால் ஒரு காத்திரமான நீடித்து நிலைத்து நிற்கும் வெற்றியைப் பெற முடியவில்லை. நாம் தொழில்துறை வளர்ச்சி அடைந்த மாநிலமாக வளர்ந்திருந்தாலும் பணமதிப்பிழப்பு என்ற ஒற்றை அறிவிப்பும், சீன - இந்திய மோதலின்போது இறக்குமதிக்குக் கட்டுப்பாடு என்ற ஒற்றை அரசு ஆணையும், அனைவருக்கும் பொதுவான கல்விமுறை, நுழைவுத்தேர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற ஒற்றை அறிவிப்புகள் நமது மொத்த முன்னேற்றத்தையும் உடைத்துச் சிதறவைத்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது என்றால் நமது அடித்தளம் அவ்வளவு பலகீனமாக இருக்கிறது.

அவர்களால் இன்றுவரையும் நீடித்து நிலைக்க முடிவதற்கும் மிக எளிதாக நாம் வீழ்த்தப்படுவதற்குமான காரணத்தை நாம் கண்டறிய தவறிவிட்டோம். பார்ப்பனிய மூவர்ணத்தைச் சேர்ந்த முதலாளிகள் அதை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒன்றிய இந்து தேசிய அரசியல் அதனை ஆதரித்து அவர்கள் பின்னால் அணிவகுத்து அரசியல் அடித்தளமாக விளங்கும் அந்த மூவர்ணத்தைச் சேர்ந்த பெரும்பகுதி வணிகர்கள், மக்கள் என அவர்களின் பாதை அத்தனை தெளிவாக இருக்கிறது. இந்தியாவின் புதிய பொருளாதார முறைக்கான ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையிலான வேகமான பணப்பரிமாற்ற வளர்ச்சியை உலக நாணய நிதியம் (IMF) மெச்சி சமீபத்தில் பாராட்டு பத்திரம் வாசித்து அவர்களின் பின் நிற்கிறது.

நமது வாழ்வு எங்கே இருக்கிறது

தகவல் தொழில்நுட்ப மென்பொருள் துறையில் பல வித்தகர்களைத் தமிழகம் உருவாக்கி இருந்தாலும் இன்று தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு மாறும் உலக மாற்றத்தில் பங்கெடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரைக்கூட காண முடியவில்லை. சீன இறக்குமதிக்கு அனுமதி மறுத்தவுடன் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்காக, தொழிலாளர்களுக்காக ஒரு முணுமுணுப்பைக் கூட நமது சமூகம் செய்யவில்லை. அந்த அளவுக்கு நமது தமிழ் சமூகம் பொருளாதார பிரஞ்சை இன்றி இருக்கிறது. அந்தத் தடையை உடைக்கும் அரசியலையோ, அதற்கு மாற்று மூலப்பொருட்களை உருவாக்கும் அளவுக்கு ஓர் உயர்கல்வி நிறுவனத்தையோ, ஆய்வு நிறுவனத்தையோ நாம் கொண்டிருக்கவில்லை. ஒன்றியம் இயங்க தேவையான வரியில் பெரும்பகுதி நம்மிடம் இருந்து சென்றாலும் நமது நலன்களைப் பணயமாக வைத்து உலக சதுரங்க ஆட்டத்தில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நலன்களை முன்னெடுக்க முடிகிறது.

நமது கல்வி, மருத்துவம், விவசாயம், வர்த்தகம், தொழிற்துறை என அனைத்தையும் இழந்து விடுவோமோ என அஞ்சும் அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது. அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு, ஏகாதிபத்திய பின்புலம் எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதற்கு எதிரான தமிழக மக்களின் அரசியல் உணர்வு மட்டுமே தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது. இதைக் கொண்டு அத்தனை அரசியல் பொருளாதாரத் தகவல் தொழில்நுட்ப பலத்துடன் நிற்கும் அவர்களை எதிர்த்து வெல்ல முடியுமா... அனைத்தும் கைமீறிப் போய்விட்டது எனத் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்களிடம் நமது வாழ்வை அடகு வைத்து அடிமைப்பட்டு வாழப் போகிறோமா அல்லது இதை எப்படி எதிர்த்து நின்று மக்களைக் காப்பது என்று சிந்தித்துச் செயலாற்ற போகிறோமோ என்பதைப் பொறுத்தே நமது எதிர்காலம் இருக்கப் போகிறது. அதேபோல இனி எப்போதும் இதுபோன்ற சூழல் வராதவாறு நமது எதிர்கால குறிக்கோள்களைத் தீட்டிக் கொள்வதில்தான் நம் மக்களின் வளமான வாழ்வு இருக்கிறது.

தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

<பகுதி 1 > / < பகுதி 2 > /

< பகுதி 3 > / < பகுதி 4 > /

< பகுதி 5 > / < பகுதி 6 > . /

< பகுதி 7 > / < பகுதி 8 > /

< பகுதி 9 >

ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 6 மே 2021