மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

ஓ.பன்னீரின் தனி ரூட் - 7ஆம் தேதி கூட்டத்தில் எதிரொலிக்குமா?

ஓ.பன்னீரின் தனி ரூட் - 7ஆம் தேதி கூட்டத்தில் எதிரொலிக்குமா?

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மே 7ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக அமைந்ததால், முன்னாள் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும், முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திலுமே இருந்தனர். இந்தக் கூட்டத்துக்காகத்தான் அவர்கள் சென்னை புறப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்குப் பதில் காணும் முயற்சியில் அதிமுகவின் முக்கியஸ்தர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்றும், அதிமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் பலர் எடப்பாடியைதான் ஆதரிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஆனால் ஓ.பன்னீர் வட்டாரத்திலோ, “ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சியை நடத்த ஒருவர், கட்சியை நடத்த ஒருவர் என்று செயல்படுவது பணியை எளிதாக்கும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது நமது முழு பணியே கட்சி நடத்துவதுதான். ஆட்சியில் இருந்தபோதுதான் ஆட்சியின் மூலம் கட்சியில் செல்வாக்கு செலுத்தி கட்சி பல வகைகளில் சரிவுகளைச் சந்தித்தது. இனி கட்சியை வளர்க்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கட்சியை வளர்க்க வேண்டும். அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரிடம்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இருக்க வேண்டும்” என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு தினங்களாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீரிடம் இருந்து தனியாக அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அதிமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்புகள், அறிக்கைகள் எல்லாமே இதுவரை ஓ.பன்னீர், பழனிசாமி ஆகிய இருவரின் கையொப்பத்துடன் அதிமுகவின் அதிகாரபூர்வ லெட்டர் ஹெட்டில்தான் வெளியாகி வந்தன. மே 3ஆம் தேதி வெளியான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கைகூட அப்படித்தான் வெளியானது. அம்மா உணவகம் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்குக் கண்டன அறிக்கையும் இருவரும் இணைந்துதான் வெளியிட்டுள்ளார்கள்.

அதேநேரம்... செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமையால் நோயாளிகள் இறப்பு, அம்மா உணவகம் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து ஓ.பன்னீர் செல்வம் தனியாகவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவரது அறிக்கை, கட்சியின் அதிகாரபூர்வ இலச்சினை எதுவும் இல்லாமல், ‘ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் அதிமுக’ என்ற வார்த்தைகளை மட்டும் தாங்கியுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற செட்டப்பை கொண்டு வந்ததே ஓபிஎஸ்தான். அதனால் அவர் எப்போதும் கட்சியைக் காப்பாற்றவே நினைக்கிறார். தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்குப் பின்னும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும்கூட அவர் கட்சியைக் காப்பாற்றவே நினைக்கிறார். அதேநேரம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவருக்குக் கிடைத்த தகவல்கள் அவரை அதிர்ச்சியாக்கியிருக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 5இல் திமுக கூட்டணி, 5இல் அதிமுக கூட்டணி ஜெயித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர்களான சோழவந்தான் மாணிக்கம், மதுரை தெற்கு சரவணன், மதுரை கிழக்கு கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவருமே ஓபிஎஸ்ஸின் அக்மார்க் ஆதரவாளர்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது இவர்கள் அவரோடு இருந்தவர்கள். மதுரையில் ஜெயித்த பிற அதிமுக வேட்பாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களாக அறியப்படுகிறார்கள்.

இப்படி தென்மாவட்டத்துக்குள்ளேயே ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களாக செயல்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தேர்தலில் தோற்கடிக்கும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்குள்ளேயே கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு எதிராகவே சில உள் வேலைகள் நடைபெற்றிருக்கின்றன. இதெல்லாம் அறிந்து ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறார்.

வரும் 7ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் இதுபற்றியெல்லாம் அவர் பேசுவாரா என்று தெரியவில்லை. ஆனால், பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இந்த எண்ணத்தில் இருந்துதான் சில முக்கிய விவகாரங்களுக்கு எடப்பாடியை எதிர்பாராமல் தனி அறிக்கையாகவே வெளியிட்டு வருகிறார். சிக்கல்கள் தொடர்ந்தால் இதுவும் தொடரலாம்” என்கிறார்கள்.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 6 மே 2021