மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: யார் யாருக்கு அழைப்பு?

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு: யார் யாருக்கு அழைப்பு?

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான நிகழ்வில் பதவி ஏற்கிறார்.

இதுதொடர்பாக இன்று( மே5) காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் நேற்று மே 4 ஆம் தேதி திமுக வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தான் திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் பிரம்மாண்டமான பதவியேற்பு விழா வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார் ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வெளியான மே 2 ஆம் தேதி நள்ளிரவு தனது வெற்றி சான்றிதழை கலைஞரின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி ஆகியோருடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்.

இந்த சந்திப்பின்போது பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்துவது தொடர்பாக ஸ்டாலினும் ஆளுநரும் விவாதித்துள்ளனர்.

அப்போது ஆளுநர், "ராஜ்பவன் ஆடிட்டோரியத்தில் 400 பேர் வரை தான் அமர முடியும், அதற்கு ஏற்ற மாதிரி விருந்தினர்களை அழையுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி திமுக தலைமைக்கு நெருக்கமான‌ வட்டாரத்தில் விசாரித்தபோது..."ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமாக நடத்த ஆசைப்பட்டோம். ஆனால் தற்போது கொரோனா பரவலால் பற்பல கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 400 பேர் வரை தான் பங்கேற்க முடியும்.

திமுகவின், திமுக கூட்டணியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களே 159 பேர் இருக்கிறார்கள். பதவியேற்பு நிகழ்வுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் சுமார் 40 பேர் வரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதிகாரிகள், எதிர்க்கட்சியான அதிமுகவின் பிரதிநிதிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள் என்று கணக்குப் போட்டால் 400 பேரை தாண்டும் விதமாகத்தான் இருக்கும்.

அமைச்சரவையில் இடம்பெற இருப்பவர்கள் இந்த விழாவில் தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களில் பலர் குடும்பத்தோடு வந்து சென்னையில் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் எண்ணிக்கை அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக அமைச்சராக பதவி ஏற்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டாம் என்று தலைமை ஆலோசித்து வருகிறது" என்கிறார்கள்.

-வேந்தன்

.

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 5 மே 2021