மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள், காலியாக உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று (மே 5) திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமானதாக இருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக குணப்படுத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுத் தனியார் மருத்துவமனைகள் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இது மருத்துவ அவசர நிலைக்காலமாக மாறிவிட்டது. உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

எனவே, தனியார் மருத்துவமனைகள், 50 விழுக்காடு படுக்கைகளைத் தாண்டியும் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றை உயிர்ப் பாதுகாப்புக்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஒதுக்காமல், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், தேவைகள் அதிகமாகி வருவதால், அதற்கு ஏற்ப தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும்.

தங்களிடம் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அதில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றைத் தனியார் மருத்துவமனைகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், கட்டணத்திலும் முடிந்த அளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி அவர்கள் உயிரைச் செலவில்லாமல் மீட்டுத் தர வேண்டும்.

மருத்துவ அவசரநிலை அளவுக்கு கொரோனா தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத் தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும்.

இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல!. நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் நம் உயிரைக் காப்பாற்றி எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் வடிவமைக்க முடியும். உங்கள் ஒவ்வொருவர் உயிரும் உன்னதமானது என்பதும், கவனக் குறைவால் அதனை வீசியெறிந்திடக் கூடாது என்பதுமே எங்களது முதன்மையான குறிக்கோளாகும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

புதன் 5 மே 2021