மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

ராயபுரம் படகை தரை தட்ட வைத்த தியேட்டர் உரிமையாளர் மூர்த்தி

ராயபுரம் படகை தரை தட்ட வைத்த தியேட்டர் உரிமையாளர் மூர்த்தி

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெறாது என்றே அனைத்து கருத்துகணிப்புகளும் சொன்னது.

அதற்கு காரணம் இந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மீனவ சமூகத்தை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார். 1991 முதல் தொடர்ச்சியாக இங்கு வெற்றிபெற்று வருகிறார்.

தொகுதி மக்களின் அனைத்து நல்லது கெட்டது நிகழ்வுகளில் கலந்துகொள்ள தவறுவதில்லை, அதனால் அவரை தோற்கடிப்பது குதிரைக்கு கொம்பு முளைத்தது போன்றதாகும் என்றனர் அதிமுகவினர்.

ஒரு கட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சவால் வேறு விட்டார் ஜெயக்குமார். அவரை எதிர்த்து போட்டியிட , திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராயபுரம் ஏரியாவில் உள்ள ஐடீரீம் திரையரங்க உரிமையாளர் மூர்த்தி.

அமைச்சர், சபாநாயகர், பழுத்த அரசியல்வாதி ஜெயக்குமாரை முதல் முறை தேர்தலில் போட்டியிடும் மூர்த்தியால் வெல்லமுடியாது என்றே எல்லோரும் கூறி வந்த நிலையில், யானை காதில் புகுந்த எறும்பாக 27,731 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் என்கிற மலையை சாய்த்து ராயபுரத்தில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார் ஐடீரீம் மூர்த்தி.

ஜெயக்குமாருக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அதையும் மீறி மூர்த்தி வெற்றிபெற காரணம் அரசியல் கடந்த சமூக பார்வை என்கின்றனர் ராயபுரம் பகுதி மக்கள் .

கொரானா பேரிடர் காலத்தில் சாமான்ய மனிதராக ஐடீரீம் மூர்த்தி மக்களுக்கு செய்த உதவிகள் தேர்தலில் அவர் வெற்றிபெற காரணமாக அமைந்தது என்றவர்களிடம், அதை விட அமைச்சர் ஜெயக்குமார் உதவிகள் செய்திருக்கிறாரே என்றபோது, "அமைச்சர், ஐந்துமுறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி உதவிகள் செய்வது பெரிய காரியமல்ல எந்த பொறுப்பிலும், அதிகாரத்திலும் இல்லாத சாமான்யன் ஐடீரீம் மூர்த்தி கொரானா பேரிடர்காலத்தில் ஓடி ஓடி உதவி செய்தது மக்கள் மனங்களை குளிர்வித்ததால் தேர்தல் அன்று அவரது வாக்குப் பெட்டி நிறைய காரணமானது"என்கின்றனர்.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் திரையரங்க உரிமையாளராக இருப்பது ஐடீரீம்மூர்த்தி மட்டுமே என்பதால் , அவரது வெற்றி திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட துறையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதும் திரையரங்கங்கள்.

ஒரு வருட காலமாக தியேட்டர் இயங்கவில்லை. இருந்தபோதிலும் அதற்கான பராமரிப்பு செலவு, குறைந்தபட்ச மின் கட்டணம், தொழில்வரி என வருமானம் இல்லாமல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த அதிமுக அரசிடம் சிலசலுகைகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. தற்போது திரையரங்க உரிமையாளரே சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் தங்களது பிரச்சினைகளை இடைதரகர்கள் இல்லாமல் முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லமுடியும் என கூறுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

-ராமானுஜம்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 5 மே 2021