மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

கலைகள் மலரும் காலம்!

கலைகள் மலரும் காலம்!

ஸ்ரீராம் சர்மா

தமிழகத்துக்கான 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியைத் தனித்து ஆட்சி அமைக்கும் இடத்தில் வைத்து, வரலாறு காணாத வெற்றி வாகை சூடி நிற்கிறார் நமது போற்றுதலுக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

125 இடங்களில் திமுக தனித்து வெற்றிமுகம் தொட்ட அந்த நேரத்தில் கோபாலபுரத்து வீட்டுக்குள் அவர் நுழைந்த வீடியோவைக் காண முடிந்தது.

வென்றவர்கள் போடும் வீறுநடைக்கு மாறாக தணிந்த – கனிந்த நடையினைப் போட்டபடி தன் தாயைக் காணச் சென்றார்.

அவரது நடையினைக் கண்ட எனது எழுத்துப்புத்தி பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டது...

“ம்ம்ம்... என்ன இருந்து என்ன? எனது பட்டாபிஷேகத்தைக் காண இன்று என் தந்தை இல்லையே...!?’ எனும்படி அன்றந்த அயோத்தி நகரத்தில் இராமன் தன் பட்டாபிஷேக மேடையை நோக்கி நடந்த தளர்ந்த நடை என்பதா?

“ஓ...இன்று வெற்றிக்கூச்சல் போடும் நாடு நகரமே... இந்த அரியணையைக் காண நான் கடந்து வந்த கானகக் கடல் வடுக்களின் எண்ணிக்கை எத்துணை என்பதை அறிவாயா..?” எனச் சிந்தித்தபடியே போட்ட மெல்லிய நடை எனக் கொள்வதா?

“வெற்றி என்பது ஆடுவதற்காக அல்ல; ஆளுவதற்காக...” என்பதே திராவிட சூத்திரம் என்பதை உணர்ந்த கனிந்த நிலையில் இருப்பவன் நான் என்பதை அறிவிக்கும் அனுபவ நடையாகக் கொள்வதா ?

மொத்தத்தில், ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கப்பட்டவர் அன்று கொண்டாட்ட மனப்பான்மையைக் கடந்து, தமிழக மக்கள் தன்மீது வைத்த இந்த அபார நம்பிக்கையை எப்படியேனும் ஈடேற்றியாக வேண்டுமே என்னும் கடமைபாற்பட்ட மனநிலையில் மட்டுமே இருந்தார் என்பதைக் காண முடிந்தது.

ஆம், அவரது அரசியல் அனுபவ வரலாற்றில் ஓராயிரம் எதிர்மறைச் சாடல்களைக் கடந்திருக்கிறார். 50 ஆண்டுக் கடும்பயணத்துக்குப் பின் தான் அரியணைக் கோலத்தைக் காண்கிறார். அவரது உறுதியான மனநிலை வருங்காலத்தில் பலருக்குப் பாடமாகத் திகழும்!

அவர், பூரண ஆயுளோடு – தேக வலிமையோடு – மன நிம்மதியோடு நல்லாட்சிதர மனமுவந்து வாழ்த்தி - பிரார்த்தனை செய்வோம்!

கூடவே, விண்ணப்பம் ஒன்றையும் அவரிடம் வைத்து விடுவோம்!

விடுதலைக்குப் பிறகு - தமிழக வரலாற்றில் 1967க்குப் பிறகான திமுக ஆட்சிக்காலங்கள்தான், கலைகள் தழைத்த காலங்களாக ஒளி வீசி வந்திருக்கின்றன.

ஓவியக் கலை - சிற்பக் கலை - இசைக்கலை - நாட்டியக் கலை... சகலமும் செழித்தது 67க்குப் பின்புதான். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தோற்றுவிக்கப்பட்டு, நாட்டுப்புறக் கலைகள் முதல் நாதஸ்வரம் - பரதநாட்டியம் வரை ஊன்றி கவனிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டன.

அன்று, கலைஞர்கள் மகிழ்ந்திருந்தார்கள். மக்கள் செம்மாந்திருந்தார்கள். தமிழகம் பொலிவோடு இருந்தது.

ஆம், இந்த நாட்டை வெறும் சட்டங்களையும் போலீஸையும் மட்டுமே வைத்து நெறிப்படுத்திவிட முடியாது. அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்களாக முன்வந்து கைகொடுத்து ஒத்துழைத்தால்தான் உண்டு. அதுதான் மக்களாட்சிக்கான நியாயம்.

அந்த நியாயத்தின் பக்கம் மக்களின் மனம் செல்ல வேண்டுமென்றால், முதலில், மக்களின் மனம் இளகிய நிலையில் இருந்தாக வேண்டும்.

அப்படி இளகிய மனதை உருவாக்க கலைகள் கைகொடுக்கும் என்பதை உணர்ந்தவர்களாகத்தான் அன்றைய ஆட்சியாளர்கள், நாடு தழுவிய அளவில் கலைஞர்களை ஆதரித்தார்கள். அவர்களைக் கொண்டே தங்கள் திட்டங்களை நாடு முழுவதும் பரப்பினார்கள்; வென்றார்கள்.

இன்று கலைமாமணி விருதுகள் முதற்கொண்டு சகலமும் முடங்கிப்போயிருப்பது மட்டுமல்லாமல் – அனைத்தும் சினிமா என்ற ஒன்றை மட்டுமே சுற்றிச் சுற்றி உழல்கின்றன. சினிமா கலைஞர்களும் முக்கியமானவர்கள்தான். ஆனால், லட்சக்கணக்கில் இருக்கும் பிற கலைஞர்களையும் முன்னேற்ற வேண்டாமா? இந்த மண்ணின் கலைகளுக்கு அவர்கள்தானே அஸ்திவாரம்!

இன்றைய கொரானா காலத்தில் – எளிய நாட்டுப்புற கலைஞர்கள் படும்பாடு சொல்லி மாளாது. கல்யாணங்களில் – திருவிழாக்களில் தங்கள் கலைத் திறமைகளைக்காட்டி கௌரவமாகப் பிழைத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று திக்கற்று நிற்கிறார்கள்.

சென்ற ஆண்டு கொரோனா வாழ்க்கையைக் கடனில் தள்ளியவர்கள், இந்த ஆண்டும் அதே கட்டுப்பாடுகள் தொடர முழிபிதுங்கிப் போயிருக்கிறார்கள். தங்களுக்கு ஒரு தீர்வு வேண்டித்தான், 2007இல் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை ஏற்படுத்திய திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மெல்லிசைக் கலைஞர்கள் – மேடைக் கலைஞர்கள் – சினிமா கலைஞர்கள் உட்பட அனைவரும் அரசாங்கத்தின் முகம் பார்த்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே எதிரி கொரோனா கட்டுப்பாடுகள்தான்.

அரசாங்கத்துக்கு முன் இருக்கும் ஒரே எதிரியும் அதுதான். சோதனை மிகுந்த இந்த கொரோனா காலத்தில் புதிய ஆட்சியைக் கையிலெடுத்திருக்கும் முதலமைச்சர், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக விரைந்து நிமிர்த்த வேண்டும் .

தனித்து ஆட்சி செய்ய சொல்லும் அளவுக்கு அவர்மீது அன்பையும் நம்பிக்கையையும் வைத்த மக்கள் - அவரது அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்பது திண்ணம்!

நிர்வாகத்துக்குப் பெயர்பெற்றது திமுக ஆட்சி. திறன்மிக்க மேயராகச் செயல்பட்டு, சென்னையை நிமிர்த்தியவர்தான் - துணை முதலமைச்சராகப் பணியாற்றி ஆட்சி நுணுக்கங்களை உள்ளார்ந்து அறிந்தவர்தான் நமது இன்றைய முதலமைச்சர்!

செயல்திறன்மிக்க தன் அமைச்சர் படை பரிவாரங்களோடு இறங்கி தமிழகத்தையும் நிமிர்த்துவார் - தமிழ்க் கலைகளையும் நிமிர்த்துவார் என உறுதியோடு எதிர்பார்ப்போம்.

திராவிட ஆட்சியின் தனிக்குணத்தோடு கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைப்பார் எனப் பரிபூரணமாக நம்புவோம்!

ஒன்றிணைந்து முன்னேற ஒளி பிறக்காமலா போகும்? இது கலைகள் மலரும் காலம்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

புதன் 5 மே 2021