மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

அம்மா உணவகத்தில் அராஜகம்: திமுகவுக்கு தொடங்கும் நெருக்கடி!

அம்மா உணவகத்தில் அராஜகம்: திமுகவுக்கு தொடங்கும் நெருக்கடி!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வென்று வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இன்று (மே 4) அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை கூடி ஸ்டாலினை திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கிற நாளில்... சென்னையில் நடந்த சம்பவம் திமுகவுக்கு தர்ம சங்கடத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் பெயர்த்து கீழே தள்ளிவிடுவதும், அங்கே இருக்கும் ஜெயலலிதா புகைப்படத்தைக் கீழே தள்ளுவதாகவும் சமூக தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. திமுக என்றாலே லோக்கல் அராஜகம் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டிய நிலையில், திமுகவின் வெற்றிக்குப் பிறகு இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில்... மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தனது டுவிட்டரில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், “அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்”என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

செவ்வாய் 4 மே 2021