மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

எதிர்க்கட்சித் தலைவர் பன்னீரா, எடப்பாடியா?

எதிர்க்கட்சித் தலைவர் பன்னீரா,  எடப்பாடியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. திமுக கூட்டணி ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் என தீர்மானம் ஆகிவிட்ட நிலையில் அதிமுக சார்பில் அதன் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கிறது.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் யார் அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக தான்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது பெயர்களும் அவரவர் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

"திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக துடைத்தெறியப்படும் என்றும் பல்வேறு தவறான தகவல்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பரப்பப்பட்ட நிலையிலும்... எடப்பாடி பழனிசாமியின் கடுமையான உழைப்பால் தான் அறுபத்தாறு இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றது. அதேபோல கோவை மாவட்டத்தில் எஸ் பி வேலுமணியின் கடுமையான உழைப்பால் 10 தொகுதிகளில் அனைத்தையும் அதிமுக வென்றது.

கொங்கு மண்டலத்தில் உள்ள 50 சட்டமன்ற தொகுதிகளில் 33 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

அதேநேரம் தென் மாவட்டத்தில் 50 சட்டமன்ற தொகுதிகளில் 36 ஐ திமுகவும் 15 தொகுதிகள் மட்டுமே அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த அடிப்படையில் பார்த்தால் அதிமுகவின் கவுரவத்தை காப்பாற்றிய பெருமை கொங்கு பகுதிக்கு செல்கிறது. எனவே கொங்கு பகுதியை சேர்ந்தவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்”என்று சேலத்தில் இருந்து கோவை வரை இருக்கின்றன.

இதுகுறித்து தென் மாவட்ட அதிமுகவினர் சிலரிடம் பேசியபோது அவர்கள் வேறு மாதிரியான பதில் தருகிறார்கள்.

"நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிமுகவுக்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது தென் மாவட்டங்களில் தான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி பிரிந்து தனியாக நின்றது ஒரு வகையில் சோதனை.

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒரு முறை தன் தொகுதியில் பாமகவிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்திருந்தார். இந்தத் தேர்தலில் பாமக வின் மூலம் தனது சேலம் மாவட்டத்தில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள நினைத்தவர் அதற்காகத்தான் கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற குழப்பமான அவசர ஆணையைப் பிறப்பித்தார்.

இந்த இட ஒதுக்கீடு ஆணை வட மாவட்டங்களை விட சேலம் மாவட்டத்தில்தான் அதிமுகவுக்கு பலன் அளித்திருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களில் இது அதிமுகவுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எம்பிசி பட்டியலில் மீதமிருக்கும் சிறுசிறு சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அதிமுக தென்மாவட்டத்தில் எதிர் கொண்டது.

இதனால்தான் தேர்தலுக்கு முன்பே உதயகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆணை தற்காலிகமானது என்று விளக்கம் அளித்தனர். ஆனாலும் கூட இந்த ஆணையால் ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த சமூகங்கள் அதிமுகவுக்கு எதிராக திரும்பின.

இதுமட்டுமல்ல தேவேந்திரகுல வேளாளர்கள் பொதுப் பெயரால் அதிமுகவுக்கு தென்மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட அந்த சமுதாயத்தினரின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. அதே நேரம் வெள்ளாளர்கள் என அழைக்கப்படும் பிற சமூகத்தினரின் முழு எதிர்ப்பை தென் மாவட்டங்களில் எதிர்கொண்டது அதிமுக.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முக்கியமான கொள்கை முடிவுகள் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தின. இந்த அளவு பிரச்சினைகளை தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலும் அதிமுக சந்திக்கவில்லை. எனவே பல்வேறு கட்ட சோதனைகளை தாண்டி பிரச்சினைகளைத் தாண்டி 51 தொகுதிகளில் 15 தொகுதிகளை அதிமுக தென்மாவட்டங்களில் கைப்பற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

மற்ற மண்டலங்களோடு தென்மண்டலத்தை ஒப்பிட்டு வெறும் எண்ணிக்கையாக பார்க்க கூடாது. மற்ற மண்டலங்களில் இல்லாத அளவுக்கு தென்மண்டல அதிமுக எதிர்கொண்ட சிக்கல்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் கட்சியை இந்த அளவுக்கு வழிநடத்திச் சென்ற பன்னீர்தான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும்.

2020 அக்டோபர் 7ஆம் தேதி எப்படி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பன்னீர்செல்வம் அறிவித்தார் அதேபோலவே 2021 மே 7-ஆம் தேதி பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும்” என்கிறார்கள்.

-வேந்தன்

.

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர் மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ...

8 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி உள்குத்து: அமைச்சர்  மீது பணப்புகார்- நீக்கப்பட்ட ஒ.செ

செவ்வாய் 4 மே 2021