மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஊரடங்கா? ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

ஊரடங்கா? ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்னும் சில நாட்களில் பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதே அவரது வீட்டுக்கு அதிகாரிகள் படையெடுத்தனர். அவர்களில் சுகாதாரத்துறை செயலாளர் மட்டும், மற்ற அதிகாரிகள் போல அல்லாமல் ஒரு கையில் பூங்கொத்து இன்னொரு கையில் கொரோனா பரவல் தொடர்பான கோப்புகளோடு ஸ்டாலினை சந்தித்தார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்காவிட்டாலும் தேர்தல் முடிவுகளில் அவரே வெற்றிபெற்றதால் அவரிடம் ஆலோசனை நடத்தினார் ஜெ. ராதாகிருஷ்ணன். அதன் பிறகு இன்று (மே 3)மீண்டும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இன்று பகலில் நடந்த இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா தொற்று இருபதாயிரத்தைத் தொட்டுவிட்டதை அடுத்து ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி பொறுப்பேற்க உள்ள முதல்வர் ஸ்டாலினுடன் அதிகாரிகள் விவாதித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஊரடங்கே இப்போதைக்கு உடனடி வழி என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஆனால் தமிழகத்தின் நிதி நிலைமை, ஊரடங்கு விதித்தால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்டுவதற்கான நடவடிக்கை குறித்து ஸ்டாலின் யோசிக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தால் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது தொற்று அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதிகாரிகள் ஸ்டாலினிடம் இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருக்கும் மா.சுப்பிரமணியனை அழைத்த ஸ்டாலின், ‘சென்னையில் கொரோனா பரவல் பற்றி விவாதித்து தனக்கு ஒரு அறிக்கை தருமாறு கேட்டுள்ளார் என்று சித்தரஞ்சன் சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல தமிழகம் முழுதும் தனது கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில் ஊரடங்கு பற்றி ஸ்டாலின் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

-வேந்தன்

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

3 நிமிட வாசிப்பு

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

ராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்: நடந்தது என்ன?

10 நிமிட வாசிப்பு

ராமதாஸுக்கு போன் போட்ட  முதல்வர்  ஸ்டாலின்: நடந்தது என்ன?

இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!

3 நிமிட வாசிப்பு

இரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!

திங்கள் 3 மே 2021